எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நேற்று மாசி மகம் பௌர்ணமி புனிதநாள். மாசி மாதம் சிறப்பாக நதிகள், குளங்கள், நீர்நிலைகளோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. நமது சாஸ்திரங்களில்,

 

“माघे निमग्ना: सलिले सुशीते, विमुक्तपापा: त्रिदिवम् प्रयान्ति ||”

 

மாகே நிமக்னா: சலிலே சுஷீதே, விமுக்தபாபா: த்ரிதிவம் ப்ராயாந்தி, என்று கூறப்பட்டிருக்கிறது. அதாவது, மாசி மாதத்தில், எந்த ஒரு புனித நீர்நிலையிலாவது நீராடுவது புனிதமானதாகக் கருதப்படுகிறது என்பதே இதன் பொருள். உலகின் அனைத்து சமுதாயங்களிலும் நதிகளோடு இணைந்த பாரம்பரியம் ஏதோ ஒரு வகையிலாவது இருக்கத்தான் செய்கிறது. நதிக்கரைகளில் பல நாகரீகங்கள் மேம்பட்டிருக்கின்றன. நமது கலாச்சாரம் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதால், இது பற்றி விரிவாக நம்மிடத்திலே காணக் கிடைக்கின்றது. நீரோடு தொடர்புடைய கொண்டாட்டம் இல்லாத ஒரு மாதம் என்பதே பாரதநாட்டில் இல்லை என்று கூட நம்மால் கூற இயலும். மாசிமாத நாட்களில் மக்கள் தங்கள் குடும்பங்களை, வசதிகள்-சந்தோஷங்களை எல்லாம் விடுத்து, மாதம் முழுக்கவும், நதிகளின் கரைகளிலே கல்பவாசம் என்று சொல்லப்படும் இறைசிந்தனையுடன் கூடிய தூய வாழ்க்கை வாழச் சென்று விடுவார்கள். இந்த முறை ஹரித்வாரில் கும்பமேளா நடைபெறவிருக்கிறது. நீர் நமக்கெல்லாம் உயிர், நம்பிக்கை, வளர்ச்சிக்கான ஜீவாதாரம். நீர் ஒரு வகையில் பாரஸ் கல்லை விடவும் அதிக மகத்துவமானது. பாரஸ் கல்லில் இரும்பு படும் போது, அந்த இரும்பு பொன்னாக மாறி விடும் என்று கூறப்படுகிறது. இதே போல நீர் நம் மீது படுவதும், வாழ்க்கைக்கு அவசியமானது, வளர்ச்சிக்கும் முக்கியமானது.

 

நண்பர்களே, மாசி மாதத்தை நீரோடு இணைத்ததில் மேலும் ஒரு காரணமும் உண்டு. இந்த மாதத்தோடு குளிர்காலம் நிறைவு பெறுகிறது, கோடைக்காலம் தன் பதிவினை ஏற்படுத்துகிறது. ஆகையால் நீர் பராமரிப்புக்காக, நாம் இப்போதிலிருந்தே முயற்சிகளை மேற்கொண்டாக வேண்டும். சில நாட்கள் கழித்து மார்ச் மாதத்தின் 22ஆம் தேதியன்று உலக நீர் நாள் வரவிருக்கிறது.

 

உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆராத்யா அவர்கள், உலகின் கோடிக்கணக்கானோர் தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை நீர்த் தட்டுப்பாட்டை இட்டுநிரப்புவதிலேயே செலவு செய்கிறார்கள் என்று எனக்கு எழுதியிருக்கிறார். நீரில்லாமல் அனைத்தும் பாழ் என்று பொருளில்லாமல் கூறப்படுவதில்லையே!! நீர்த்தட்டுப்பாட்டுப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையிலே ஒரு அருமையான தகவலை மேற்கு வங்கத்தின் வடக்கு தீனாஜ்பூரைச் சேர்ந்த சுஜித் அவர்கள் எனக்கு அனுப்பி இருக்கிறார். இயற்கையானது, நீர் வடிவிலே நம்மனைவருக்கும் பெருங்கொடையை அளித்திருக்கிறது; ஆகையால் இதனைப் பாதுகாக்கும் பொறுப்பும் நம்மனைவருக்குமானது என்று எழுதியிருக்கிறார். சமூகத்துக்கான பெருங்கொடை எனும் போது, பொறுப்பும் சமூகத்துக்கானது தானே!! சுஜித் அவர்கள் கூறியிருப்பது மிகவும் சரி தான். நதிகள், குளங்கள், ஏரிகள், மழை அல்லது நிலத்தடிநீர் என இவை அனைத்தும் அனைவருக்குமானது.

 

நண்பர்களே, ஒரு காலத்தில் கிராமங்களில் ஏரிகள்-குளங்கள் ஆகியவற்றின் பராமரிப்பை அனைவரும் இணைந்தே செய்து வந்தார்கள். இப்போது இதனை ஒட்டிய ஒரு முயற்சி, தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் நடந்து வருகிறது. இங்கே இருக்கும் மக்கள் தங்களின் குளங்களைப் பராமரிக்க ஒரு இயக்கத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். இவர்கள் தங்கள் பகுதியில் பல்லாண்டுக்காலமாக மூடப்பட்டுக் கிடந்த பொதுக் குளங்களைத் தூர்வாரி, மீண்டும் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

மத்தியப்பிரதேசத்தின் அக்ரோதா கிராமத்தில் பபீதா ராஜ்புத் அவர்களும் செய்து வருவதைப் பற்றி நீங்கள் கேட்டால், உங்கள் அனைவருக்கும் கருத்தூக்கமாக இருக்கும். பபீதா அவர்களின் கிராமம் புந்தேல்கண்ட். இவருடைய கிராமத்திற்கு அருகிலே ஒரு மிகப்பெரிய ஏரி இருந்தது, இப்போது அது வறண்டு விட்டது. இவர் தனது கிராமத்தைச் சேர்ந்த பிற பெண்களோடு இணைந்து, ஏரிக்கு நீரைக் கொண்டு சேர்க்கும் ஒரு கால்வாயை உருவாக்கினார். இந்தக் கால்வாய் வழியாக மழைநீர் நேரடியாக ஏரியைச் சென்று அடையும். இப்போது, இந்த ஏரியில் நீர் நிரம்பி இருக்கின்றது.

 

நண்பர்களே, உத்தராகண்டின் பாகேஷ்வரில் வசிக்கும் ஜக்தீஷ் குனியால் அவர்கள் ஆற்றியிருக்கும் பணி நமக்குப் படிப்பினையை அளிக்கிறது. ஜகதீஷ் அவர்களின் கிராமத்திற்கு அருகில் இருக்கும் பகுதியின் நீர்த்தேவைகளை நிறைவேற்ற ஒரு இயற்கையூற்று இருந்தது. ஆனால் பல்லாண்டுகளுக்கு முன்பாக, இந்த நீர்நிலை வறண்டு போய் விட்டது. இதன் காரணமாக அந்த வட்டார மக்கள் நீர்த்தட்டுப்பாட்டால் அவதியுற்று வந்தார்கள். ஜகதீஷ் அவர்கள் மரம் நடுதல் என்பதைக் கொண்டு இந்த நீர்த்தட்டுப்பாட்டு சங்கடத்தை எதிர்கொள்ளத் தீர்மானித்தார். இவர் இந்தப் பகுதி முழுவதிலும் இருக்கும் கிராமவாசிகளோடு இணைந்து ஆயிரக்கணக்கான மரங்களை நட்டார். இதன் காரணமாக இன்று இந்தப் பகுதியில் வறண்டு போயிருந்த நீர்நிலை மீண்டும் உயிர் பெற்றது.

 

நண்பர்களே, நீர் விஷயத்தில் நாம் இதே போன்று நமது சமூகப் பொறுப்புகளைப் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் அநேக பகுதிகளில் மே-ஜூன் மாதங்களில் மழைக் காலம் தொடங்கி விடுகிறது. நாம் இப்போதிலிருந்தே அக்கம்பக்கத்தில் இருக்கும் நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்தி, மழைநீரை சேமிக்க, 100 நாட்கள் இயக்கம் என்ற ஏதோ ஒரு இயக்கத்தைத் தொடங்கலாமே!! Catch the Rain என்ற பெயரிலான ஒரு இயக்கமும் தொடங்கப்பட இருக்கிறது. இந்த எண்ணத்தை முன்னிறுத்தியே, சில நாட்கள் கழித்து, ஜல்சக்தி அமைச்சகமும் கூட, ஜல்சக்தி இயக்கமான, Catch the Rain, அதாவது மழைநீரை சேகரிப்போம் என்ற செயல்பாடும் தொடங்கப்பட இருக்கின்றது. இந்த இயக்கத்தின் மூல மந்திரம் என்ன தெரியுமா? Catch the Rain, where it falls, when it falls, அதாவது மழைநீர் எங்கே, எப்போது விழுந்தாலும் அதை சேகரிப்போம் என்பது தான். முன்பேயே இருக்கும் நீர் சேகரிக்கும் அமைப்புகளை செப்பனிடுவோம், கிராமங்களின் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் ஆகியவற்றைத் தூர்வாரி சுத்தம் செய்வோம், நீர்நிலைகள் வரை செல்லும் கால்வாய்களில் இருக்கும் தடைகளை அகற்றி, பெரும்பாலான மழைநீர் அவைவழியே சென்று நீர்நிலைகளை அடைவதை உறுதி செய்வதில் நாம் முழுவீச்சோடு ஈடுபட்டு, நீரை வெற்றிகரமாகச் சேமிப்போம்.

 

எனதருமை நாட்டுமக்களே, மாசி மாதம் மற்றும் இதோடு தொடர்புடைய ஆன்மீக மற்றும் சமூக மகத்துவம் பற்றி நாம் பேசும் வேளையில், ஒரு பெயரைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவர் ரவிதாஸர் என்ற புனிதர். மாசிமாத பௌர்ணமியன்று தான் புனிதர் ரவிதாஸாரின் பிறந்த தினமாகும். இன்றும் கூட, புனிதர் ரவிதாஸரின் சொற்கள், அவரது ஞானம் ஆகியன, நமது பாதையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அவரது பொன்மொழி ஒன்றைக் கூறுகிறேன் -

एकै माती के सभ भांडे,

सभ का एकौ सिरजनहार |

रविदास व्यापै एकै घट भीतर,

सभ कौ एकै घड़ै कुम्हार ||

ஏகை மாதீ கே சப் பாண்டே,

சப் கா ஏகௌ சிர்ஜனஹார்.

ரவிதாஸ் வ்யாபை ஏகை கட் பீதர்,

சப் கௌ ஏகை கடை கும்ஹார்.

 

நாமனைவருமே ஒரே மண்ணாலான கலயங்கள் தாம், நம்மனைவரையும் உருவாக்கியவன் ஒருவனே என்பதே இதன் பொருள். புனிதரான ரவிதாஸர், சமூகத்தில் புரையோடியிருந்த தீமைகளை தங்குதடையேதுமின்றிச் சாடினார். அவர் இந்தத் தீமைகளை எல்லாம் சமூகத்தின் பார்வைக்கு முன்னே வைத்தார். சமூகம் தன்னை சீர்திருத்திக் கொள்ளும் பாதையைக் காட்டியதாலேயே மீராபாய் அவர்கள்,

 

‘गुरु मिलिया रैदास, दीन्हीं ज्ञान की गुटकी’ |

குரு மிலியா ரைதாஸ், தீன்ஹீ ஞான் கீ குட்கீ, என்று போற்றிப் பரவினார். அதாவது, ரவிதாஸர் என்ற குரு கிடைத்திருக்கிறார். அவர் மெய்ஞானம் என்ற அருமருந்தை எனக்குப் புகட்டியிருக்கிறார் என்பதே இதன் பொருள்.

 

புனிதர் ரவிதாஸரின் பிறந்த இடமான வாராணசியோடு நானும் இணைந்திருக்கிறேன் என்பதை நான் என் பெரும் பேறாகக் கருதுகிறேன். புனிதரான ரவிதாஸர் தன் வாழ்க்கையில் தொட்ட ஆன்மீக சிகரங்களையும், அவரது ஆற்றலையும் நான் புனிதத் தலமான வாராணசியில் அனுபவித்திருக்கிறேன். நண்பர்களே, ரவிதாஸர் அவர்களின் மேலும் ஒரு புனித மொழியைக் கேளுங்கள் -

 

करम बंधन में बन्ध रहियो, फल की ना तज्जियो आस |

कर्म मानुष का धर्म है, सत् भाखै रविदास ||

கரம் பந்தன் மே பந்த் ரஹியோ, பல் கீ நா தஜ்ஜியோ ஆஸ்,

கர்ம மானுஷ் கா தரம் ஹை, சத் பாகை ரவிதாஸ்.

 

அதாவது, நாம் இடைவிடாது நமது கடமையை ஆற்றிவர வேண்டும், பலன் என்னவோ கண்டிப்பாகக் கிடைத்தே தீரும். அதாவது செயல்பாடு விளைவை ஏற்படுத்தியே தீரும். நமது இளைஞர்களும் தூயவர் ரவிதாஸரிடமிருந்து கண்டிப்பாக ஒரு பாடத்தைக் கற்றே ஆக வேண்டும். இளைஞர்கள் பணியாற்றும் போது, தங்களைப் பழமையான வழிமுறைகளால் தடைப்படுத்திக் கொள்ளக் கூடாது. உங்கள் வாழ்க்கையை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கான வழிமுறைகளை நீங்களே வகுத்துக் கொள்ளுங்கள், உங்கள் இலக்குகளையும் நீங்களே தீர்மானம் செய்து கொள்ளுங்கள். உங்களுடைய விவேகம், உங்களுடைய தன்னம்பிக்கை ஆகியன பலமானவையாக இருந்தால், உலகின் எந்த ஒரு சக்தியைப் பார்த்தும் நீங்கள் அஞ்சத் தேவையில்லை. இதை நான் ஏன் கூறுகிறேன் என்றால், பல வேளைகளில் நமது இளைஞர்கள், அவர்களின் மனங்களில் தோய்ந்திருக்கும் எண்ணப்பாட்டின் அழுத்தம் காரணமாக, தாங்கள் மிகவும் விரும்பும் செயலைக்கூடச் செய்ய முடியாமல் போக நேர்கிறது என்பதை நான் கவனித்திருக்கிறேன். ஆகையினாலே நீங்கள் அவ்வப்போது புதியதாக சிந்திக்கவும், புதிய வழியினில் செயல்படவும் எந்த கூச்சமும் படாதீர்கள். இதே போல, தூயவரான ரவிதாஸரும் ஒரு புதிய, மகத்துவம் வாய்ந்த செய்தியை அளித்திருக்கிறார். இந்தச் செய்தி, நாம் நமது கால்களில் நிற்பது என்பதே ஆகும். நாம் நமது கனவுகளை மெய்ப்பிக்க, வேறு ஒருவரைச் சார்ந்திருப்பது சரியான ஒன்று அல்ல. எது எப்படி இருக்கிறதோ, அப்படியே இருந்து விட்டுப் போகட்டும் என்பதன் தரப்பாளர் அல்ல புனிதர் ரவிதாஸர். இன்று நமது நாட்டின் இளைஞர்களும் அவரைப் போலவே சிந்தனை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நம்மால் காண முடிகிறது. இன்று தேசத்தின் இளைஞர்களிடம் இருக்கும் புதுமைகள் படைக்கும் உணர்வைப் பார்க்கும் போது, புனிதர் ரவிதாஸருக்கும் கண்டிப்பாகப் பெருமிதம் உண்டாகும் என்றே எனக்குப் படுகிறது.

 

என் மனம்நிறை நாட்டுமக்களே, இன்று தேசிய அறிவியல் நாளும் கூட. இன்றைய நாள், மகத்தான அறிவியலாளர், டாக்டர் சி.வி. இராமன் அவர்கள் வாயிலாகப் அறியப்பட்ட ராமன் விளைவு கண்டுபிடிப்புக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. கேரளத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் அவர்கள் நமோ செயலியில், ராமன் விளைவின் கண்டுபிடிப்பானது, ஒட்டுமொத்த அறிவியலின் போக்கையே மாற்றியமைத்து விட்டது என்று பதிவு செய்திருக்கிறார். இதோடு தொடர்புடைய ஒரு மிக அருமையான தகவலை, நாசிக் நகரைச் சேர்ந்த ஸ்நேஹில் அவர்களும் எனக்கு அனுப்பி இருக்கிறார். நமது தேசத்தில் எண்ணிலடங்கா அறிவியலாளர்கள் இருக்கிறார்கள், இவர்களின் பங்களிப்பு இல்லாது போயிருந்தால், அறிவியல் இந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்காது என்று ஸ்நேஹில் அவர்கள் எழுதியிருக்கிறார். எப்படி நாம் உலகின் பிற விஞ்ஞானிகள் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறோமோ, அதே போன்று, பாரதநாட்டின் விஞ்ஞானிகள் பற்றியும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமான ஒன்று. நானும் மனதின் குரல் நிகழ்ச்சியின் நேயர்களின் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். நமது இளைஞர்கள், பாரதநாட்டின் விஞ்ஞானிகள், அவர்களின் வரலாறு, அவர்களின் கண்டுபிடிப்புகள் ஆகியவை பற்றித் தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் நன்கு படிக்க வேண்டும் என்று நான் ஆழமாக விரும்புகிறேன்.

 

நண்பர்களே, அறிவியல் பற்றிப் பேசும் வேளையில், இயற்பியல்-வேதியல் அல்லது பரிசோதனைக் கூடங்கள் என்ற வரையறைகளோடு மட்டுமே பல வேளைகளில் இதைக் குறுக்கி விடுவதை நாம் பார்க்கிறோம். ஆனால் அறிவியல் என்பது இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டது, தற்சார்பு பாரத இயக்கத்தில் அறிவியலின் சக்திக்கு பெரும் பங்களிப்பு இருக்கிறது. அறிவியலை நாம் கூடங்களிலிருந்து களம் நோக்கிக் கொண்டு சென்றாக வேண்டும்.

 

ஹைதராபாத்தைச் சேர்ந்த சிந்தளா வெங்கட் ரெட்டி எடுத்துக்காட்டாக விளங்குகிறார். விட்டமின் டி பற்றாக்குறையால் ஏற்படக்கூடிய நோய்கள்-அபாயங்கள் குறித்து ரெட்டி அவர்களிடம் ஒருமுறை அவரது மருத்துவ நண்பர் குறிப்பிட்டிருந்தார். ரெட்டி அவர்கள் ஒரு விவசாயி. இந்தப் பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது குறித்து ரெட்டி அவர்கள் சிந்திக்கத் தொடங்கினார். இதன் விளைவாக, கடும் உழைப்பிற்குப் பிறகு, குறிப்பாக விட்டமின் டி சத்து நிறைந்த நெல்-கோதுமை ரகங்களை மேம்படுத்தினார் ரெட்டி அவர்கள். ஜெனீவாவில் இருக்கும் உலக அறிவுசார் காப்புரிமை அமைப்பிலிருந்து, இந்த மாதம் அவருக்கு இதற்கான காப்புரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. வெங்கட் ரெட்டி அவர்களுக்குக் கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவிக்கப்பட்டதை அரசின் பேறாகவே நான் கருதுகிறேன்.

 

இதே போன்ற புதுமையான வழிமுறைகளை லடாக்கைச் சேர்ந்த உர்கேன் ஃபுத்சௌக் அவர்களும் பின்பற்றியிருக்கிறார். உர்கேன் அவர்கள், மிக உயரமான பகுதிகளில், இயற்கைவழி வேளாண்மையைக் கைக்கொண்டு, கிட்டத்தட்ட 20 வகைப் பயிர்களை விளைவித்திருக்கிறார், அதுவும் சுழற்சி முறையிலே. அதாவது, அவர் ஒரு விளைச்சலின் கழிவுப் பொருட்களை, அடுத்த விளைச்சலில், உரமாகத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். அருமையாக இருக்கிறது, இல்லையா!!

 

இதே போன்று, குஜராத்தின் பாடன் மாவட்டத்தில், காம்ராஜ் பாய் சௌத்ரி அவர்கள், முருங்கை விதைகளை, தன் வீட்டிலேயே மேம்படுத்தியிருக்கிறார். நல்ல விதைகளின் உதவியோடு, முருங்கையை விளைவிக்கிறார், இதன் தரமும் சிறப்பாக இருக்கிறது. தனது விளைச்சலை அவர் இப்போது தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு அனுப்பி, தனது வருவாயைப் பெருக்கி வருகிறார்.

 

நண்பர்களே, சியா விதைகள் என்ற பெயரை உங்களில் பலர் கேள்விப்பட்டிருக்கலாம். ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வுடையோர் இதனைப் பெரிதும் மதிக்கிறார்கள், உலகில் இவற்றுக்கான தேவை அதிகம் இருக்கிறது. இந்தியாவில் இதை அதிக அளவில் இறக்குமதி செய்கிறோம். ஆனால் இப்போது சியா விதைகளிலும் கூட, தற்சார்பு என்ற சவாலையும் மக்கள் மேற்கொள்ளத் தொடங்கி விட்டார்கள். உத்திரப்பிரதேசத்தின் பாராபங்கியைச் சேர்ந்த ஹரிஸ்சந்திரன் அவர்கள் சியா விதைகளைச் சாகுபடி செய்யத் தொடங்கியிருக்கிறார். இந்தச் சியா விதைகளைப் பயிர் செய்வதால் இவருடைய வருவாயும் அதிகரிக்கும், சுயசார்பு பாரத இயக்கத்துக்கும் பலம் உருவாகும்.

 

நண்பர்களே, விவசாயக் கழிவுகளிலிருந்து செல்வத்தை உருவாக்கும் பல முயற்சிகள் நாடெங்கிலும் வெற்றிகரமாக நடந்தேறி வருகின்றன. எடுத்துக்காட்டாக, மதுரையைச் சேர்ந்த முருகேசன் என்பவர், வாழைக் கழிவுகளைக் கொண்டு, கயிறு உருவாக்கும் ஒரு இயந்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறார். முருகேசன் அவர்களுடைய இந்த நூதனமான கண்டுபிடிப்பால், சுற்றுச்சூழல் மற்றும் கழிவுகளுக்கான தீர்வு பிறக்கும், விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானத்திற்கான வழியும் உண்டாகும்.

 

நண்பர்களே, மனதின் குரல் நேயர்களிடத்தில், இத்தனை நபர்களைப் பற்றி நான் கூறுவதன் நோக்கம் என்னவென்றால், இவர்களிடமிருந்து நம்மனைவருக்கும் உத்வேகம் பிறக்க வேண்டும் என்பது தான். தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் தனது வாழ்க்கையில் அறிவியலைப் பயன்படுத்தத் தொடங்கினால், ஒவ்வொரு துறையிலும் இவ்வாறு செய்தால், முன்னேற்றப் பாதை தானே திறக்கும், தேசமும் சுயசார்புடையதாக ஆகும். இதை தேசத்தின் அனைத்துக் குடிமக்களாலும் செய்ய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

 

என் நேசம்நிறை நண்பர்களே, கோல்காத்தாவின் ரஞ்ஜன் அவர்கள், தனது கடிதத்தில் மிகவும் சுவாரசியமான, அதே வேளையில் அடிப்படை வினா ஒன்றை எழுப்பி இருக்கிறார். கூடவே, சிறப்பான வகையிலே இதற்கான விடையையும் அளிக்க முயன்றிருக்கிறார். நாம் தற்சார்பு பற்றிப் பேசும் போது, இதன் பொருள் என்ன என்று வினவியிருக்கிறார். இந்த வினாவிற்கான விடையையும் அவரே அளித்திருக்கிறார். அதாவது தற்சார்பு பாரத இயக்கம் என்பது, ஒரு அரசுக் கொள்கை மட்டுமே அல்ல, இது ஒரு தேசிய உணர்வு என்று கூறியிருக்கிறார். நம்முடைய விதியை நாமே தீர்மானிப்பது தான் தற்சார்புக்கான பொருள் என்று அவர் கருதுகிறார். ரஞ்ஜன் பாபுவுடைய கூற்று நூற்றுக்கு நூறு சரியானது தான். அவருடைய கூற்றை நான் மேலும் முன்னெடுத்துச் செல்கிறேன். தற்சார்புக்கான முதல் விதி, நமது நாட்டில் தயாராகும் பொருட்கள் மீது பெருமிதம் கொள்ளுதல், நமது தேசத்தவர்களின் தயாரிப்புகளின் பெருமை பாராட்டுதல். ஒவ்வொரு குடிமகனும் இப்படி பெருமிதம் கொள்வாரேயானால், ஒவ்வொருவரும் இணைவாரேயானால், தற்சார்பு பாரதம் என்பது, வெறும் ஒரு பொருளாதார இயக்கமாக இருக்காமல், ஒரு தேசிய உணர்வாகப் பரிமளிக்கத் தொடங்கும். விண்ணில் நம் நாட்டில் உருவான போர் விமானமான தேஜஸ் சீறிப்பாய்ந்து வித்தைகள் புரியும் போதும், நமது தேசத்தில் உருவாக்கம் பெற்ற கவசவாகனங்கள், நம் நாட்டின் ஏவுகணைகள், நமக்குப் பெருமை சேர்க்கும் போதும், வளர்ந்த நாடுகளில் நமது மெட்ரோ ரயிலின் இந்தியத் தயாரிப்புக் கோச்சுகள் என்பதைக் காணும் போதும், பல டஜன் நாடுகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் சென்று சேர்வதைப் பார்க்கும் போதும், நமது தலை மேலும் நிமிர்கிறது. ஏதோ பெரியபெரிய பொருட்கள் மட்டுமே இந்தியாவை தற்சார்புடையதாக ஆக்குகின்றன என்பது எல்லாம் கிடையாது. பாரத நாட்டிலே தயாரிக்கப்பட்ட துணிகள், பாரதத்தின் திறன்படைந்த கைவினைஞர்கள் தயாரித்த கைவினைப் பொருள்கள், பாரதத்தின் மின்னணுக் கருவிகள், பாரதத்தின் மொபைல்கள் என, அனைத்துத் துறைகளிலும், நாம் இந்த கௌரவத்தைப் பெருக்க வேண்டும். இந்த எண்ணப்பாட்டோடு நாம் முன்னேறும் போது தான், உண்மையாக நம்மால் தற்சார்பு உடையவர்களாக ஆக முடியும் நண்பர்களே. தற்சார்பு பாரதம் என்ற இந்த மந்திரம், தேசத்தின் கிராமங்கள்தோறும் சென்றடைந்து வருகிறது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பிகாரின் பேதியாவில் இது தான் நடந்திருக்கிறது என்பதை ஊடகத்தில் நான் படிக்க நேர்ந்தது.

 

பேதியாவில் வசித்துவரும் ப்ரமோத் அவர்கள், தில்லியின் எல்இடி பல்ப் தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழில்நுட்பப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் பல்ப் தயாரிக்கும் செயல்பாட்டை மிக நுணுக்கமான வகையில் புரிந்து கொண்டார். ஆனால் கொரோனா காலகட்டத்தில் பிரமோத் அவர்கள் வீடு திரும்ப வேண்டியிருந்தது. வீடு திரும்பிய ப்ரமோத் அவர்கள் என்ன செய்தார் தெரியுமா? இவர் எல்இடி பல்ப் தயாரிக்கும் ஒரு சிறிய அலகைத் தொடங்கி விட்டார். தனது பகுதியிலிருக்கும் சில இளைஞர்களைத் தன்னோடு இணைத்துக் கொண்டு, சில மாத காலத்திலேயே, ஆலைத் தொழிலாளர் என்ற நிலையிலிருந்து ஆலை முதலாளியாக மாறினார். அதுவும் தன் வீட்டில் இருந்தபடியே.

 

உபி கட்முக்தேஷ்வரின், மேலும் ஒரு எடுத்துக்காட்டும் உள்ளது. கட்முக்தேஷ்வரைச் சேர்ந்த சந்தோஷ் அவர்கள், இந்தக் கொரோனா காலத்தில், எப்படி சங்கடத்தை சந்தர்ப்பமாக மாற்றினார் என்பதை பதிவு செய்திருக்கிறார். சந்தோஷ் அவர்களின் மூதாதையர்கள் நேர்த்தியான கைவினைஞர்கள், பாய் பின்னுபவர்கள். கொரோனா காலத்தில், பிற பணிகள் தடைப்பட்டிருந்த வேளையில், இவர்கள் பெரும் உற்சாகத்தோடு பாய் பின்னுவதைத் தொடர்ந்தார்கள். விரைவிலேயே, உத்திரப் பிரதேசத்தில் மட்டுமல்லாமல், மற்ற மாநிலங்களிலிருந்தும் இவர்களுக்கு ஆர்டர்கள் வந்து குவியத் தொடங்கியது. இதனால் இந்தப் பகுதியின் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான, அழகான கலைக்கும் ஒரு புதிய சக்தி கிடைத்ததாக சந்தோஷ் அவர்கள் மேலும் தெரிவித்திருக்கிறார்.

 

நண்பர்களே, தற்சார்பு பாரத இயக்கத்தின் இப்படிப்பட்ட பல எடுத்துக்காட்டுகள் நாடெங்கிலும் இருக்கின்றன. வெகுஜனங்களின் மனங்களில் இது ஒரு உணர்வாக இன்று பெருக்கெடுத்து ஓடுகிறது.

 

எனதருமை நாட்டுமக்களே, குட்காவில் வசிக்கும் மயூருடைய ஒரு சுவாரசியமான பதிவை நான் நமோ செயலியில் பார்க்க நேர்ந்தது. இவர் பறவைகளைக் கூர்ந்து கவனிப்பவர், இயற்கையை விரும்புபவர். நான் ஹரியானாவில் வசிக்கிறேன் என்றாலும், நீங்கள் அசாம் பற்றி, குறிப்பாக, காசிரங்கா மக்களைப் பற்றிப் பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், இவ்வாறு மயூர் அவர்கள் எழுதியிருக்கிறார். அந்தப் பகுதியின் பெருமிதங்களான காண்டாமிருகங்களைப் பற்றி மயூர் அவர்கள் கூறுவார் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால், water fowl-களின் எண்ணிக்கை பெருகியிருப்பது குறித்து, மயூர் அவர்கள் அசாம் மாநில மக்களுக்குத் தன் பாராட்டுக்களைப் பதிவு செய்திருக்கிறார். இந்த water fowl-களை எளிய மொழியில் எவ்வாறு கூறுவது என்று நான் தேடிக் கொண்டிருந்த வேளையில், இவற்றை நீர்க்கோழிகள் எனக் கூறலாம் என்று கண்டுபிடித்தேன். இந்தப் பறவைகள் மரங்களில் வசிப்பவை அல்ல, மாறாக வாத்துக்களைப் போல நீரிலேயே வசிப்பவை. காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் பாதுகாப்பு ஆணையம், சில காலமாகவே வருடாந்திர நீர்க்கோழிகள் கணக்கெடுப்பைச் செய்து வருகின்றது. இந்தக் கணக்கெடுப்பின் வாயிலாக நீர்க்கோழிகளின் எண்ணிக்கை தெரிய வருகிறது, இவற்றின் விருப்பமான வசிப்பிடம் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. 2-3 வாரங்கள் முன்பு தான் மீண்டும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த முறை நீர்க் கோழிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், கிட்டத்தட்ட 175 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்பது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். இந்தக் கணக்கெடுப்பின்படி, காசிரங்கா தேசியப்பூங்காவில் பறவைகளின் 112 இனங்களைக் காண முடியும். இவற்றில் 58 இனங்கள், ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் கிழக்காசியா உள்ளிட்ட உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து வந்திருக்கும் பனிக்கால புலம்பெயர் இனங்கள். இங்கே சிறப்பான நீர்ப்பராமரிப்பும், மனிதக் குறுக்கீடுகள் குறைவாக இருப்பதுமே, இதற்கான மிக முக்கியமான காரணங்களாகும். இதே போன்று சில விஷயங்களில் ஆக்கப்பூர்வமான மனித முயற்சிகள் மிகவும் மகத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன.

 

அசாமைச் சேர்ந்த ஜாதவ் பாயேங்க் அவர்களைப் பற்றி உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். இவரது சேவைகளுக்காக இவருக்கு பத்ம விருதும் கிடைத்திருக்கிறது. ஜாதவ் பாயேங்க் அவர்கள், அசாமின் மஜூலித் தீவில் சுமார் 300 ஹெக்டேர் பண்ணையில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளித்து வருகிறார். இவர் வனப்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருவதோடு, பண்ணை மற்றும் உயிரிபன்முகத்தன்மைப் பாதுகாப்பில் மக்களுக்கு உத்வேகமூட்டும் பணியில் செயலாற்றியும் வருகிறார்.

 

நண்பர்களே, அசாமிலிருக்கும் நமது கோயில்களும் கூட, இயற்கைப் பாதுகாப்பில், தங்களுக்கே உரிய பிரத்யேகமான பங்களிப்பை நல்கி வருகின்றன. நீங்கள் நமது ஆலயங்களை கவனித்தால், ஒவ்வொரு ஆலயத்தின் அருகிலும் ஒரு நீர்நிலை இருப்பதைக் காணலாம். ஹஜோவில் இருக்கும் ஹயக்ரீவ மதேப் ஆலயம், சோனித்புரின் நாகசங்கர் ஆலயம், கவுஹாத்தியில் இருக்கும் உக்ரதாரா ஆலயம் ஆகியவற்றுக்கு அருகிலே இப்படிப்பட்ட பல ஏரிகள் இருக்கின்றன. வழக்கொழிந்து வரும் ஆமையினங்களைப் பாதுகாக்க இவை பயனாகின்றன. அசாமிலே மிக அதிக அளவில் ஆமை இனங்கள் காணப்படுகின்றன. ஆலயங்களின் இந்த நீர்நிலைகள், ஆமைகளின் பாதுகாப்பு, இனப்பெருக்கம், மேலும் இவை பற்றிய ஆய்வுகளுக்கான மிகச் சிறப்பான இடங்களாக ஆக முடியும்.

 

என் இனிய நாட்டுமக்களே, புதுமைகள் படைத்தலுக்கு, நாம் விஞ்ஞானிகளாக ஆக வேண்டும் என்றும், பிறருக்குக் கல்விபுகட்ட நாம் ஆசிரியர்களாக ஆக வேண்டும் என்றும் சிலர் கருதுகிறார்கள். இப்படிப்பட்ட எண்ணப்பாட்டுக்கு சவால் விடுப்பவர் எப்போதுமே பாராட்டுக்குரியவர். படை வீரனாக ஆக ஒருவருக்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றால், பயிற்சி அளிப்பவர் படைவீரனாக இருக்க வேண்டுமா என்ன? நீங்கள் என்ன நினைப்பீர்கள் – ஆம் என்று தானே! இங்கே தான் ஒரு திருப்புமுனை இருக்கிறது.

 

ஊடகத்திலிருந்து ஒரு அறிக்கையை கமல்காந்த் அவர்கள் மைகவ் தளத்தில் பதிவு செய்திருக்கிறார், இது வேறுபட்ட ஒரு விஷயத்தைக் கூறுகிறது. ஒடிஷாவின் அராகுடாவில் நாயக் சார் என்ற ஒருவர் இருக்கிறார். இவரது இயற்பெயர் என்னவோ சிலூ நாயக் தான், ஆனால் அனைவரும் இவரை நாயக் சார் என்றே அழைக்கின்றார்கள். இவர் இலக்கு நோக்கிய பயணத்தை மேற்கொள்பவர். இராணுவத்தில் சேரத் துடிக்கும் இளைஞர்களுக்கு இவர் இலவசப் பயிற்சியை அளித்து வருகிறார். நாயக் சாருடைய அமைப்பின் பெயர் மஹாகுரு பெடாலியன். இதில் உடல் உறுதி தொடங்கி, நேர்காணல்கள், எழுத்தாற்றல், பயிற்சி வரை அனைத்துக் கோணங்களைப் பற்றியும் பயிற்சி அளிக்கப்படுகிறது. தரைப்படை, கடற்படை, விமானப்படை, எல்லையோரக் காவல்படை, மத்திய ரிசர்வ் காவல்படை போன்ற அநேக சீருடைப் பணிகளில் இவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்பது உங்களுக்குப் பெருவியப்பை அளிக்கலாம். மேலும் ஒரு வியப்பான விஷயம் என்னவென்றால், சிலூ நாயக் அவர்களே கூட ஒடிஷாவின் காவல்துறையில் சேரும் முயற்சிகளை மேற்கொண்டார், ஆனால் இதில் இவரால் வெற்றி பெற இயலவில்லை என்பது தான். இதனைத் தாண்டி, இவர் தனது பயிற்சியளிக்கும் ஆற்றல் காரணமாக அநேக இளைஞர்களை நாட்டுப்பணிக்கு உகந்தவர்களாக ஆக்கி இருக்கிறார். நாமனைவரும் இணைந்து நாயக் சாருக்கு நமது நல்வாழ்த்துகளைத் தெரிவிப்போம் வாருங்கள், அவர் நமது நாட்டிற்காக மேலும் மேலும் நாயகர்களைத் தயார் செய்யட்டும்.

 

நண்பர்களே, சில வேளைகளில் மிகவும் எளிய வினாக்கள் கூட நம்மைப் பெரிதும் புரட்டிப் போட்டு விடக் கூடும். இந்த வினாக்கள் நீண்டவையாக இருப்பதில்லை, மிகவும் எளியவையாக இருக்கின்றன; என்றாலும் கூட, நம்மை சிந்திக்கத் தூண்டுபவையாக இருக்கின்றன. சில நாட்கள் முன்பாக ஹைதராபாத்திலே அபர்ணா ரெட்டி அவர்கள் என்னிடத்தில் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார். நீங்கள் இத்தனை ஆண்டுகளாக பிரதமராக இருக்கிறீர்கள், இத்தனை ஆண்டுகளாக முதல்வராக இருந்தீர்கள், ஏதேனும் குறைபாடு இருப்பதாக எப்போதேனும் உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா? அபர்ணா அவர்களின் கேள்வி எத்தனை இயல்பானதாக இருக்கிறதோ, அத்தனை கடினமானதாகவும் இருக்கிறது. நான் இந்தக் கேள்வி குறித்து ஆழமாக சிந்தித்துப் பார்த்தேன், என்னிடத்தில் என்ன குறை என்று கேட்டுக் கொண்டேன், தூண்டித் துருவி அலசிப் பார்த்தேன். ஆம், ஒரு குறை இருக்கிறது என்பதைக் கண்டுணர்ந்தேன். உலகின் மிகத் தொன்மையான மொழி, தமிழ் மொழியை கற்றுக் கொள்ள முயல என்னால் முடியவில்லையே, செம்மொழியாம் தமிழ் மொழியை என்னால் கற்க முடியவில்லையே என்ற குறை வாட்டுகிறது. தமிழ் அழகு கொஞ்சும் மொழி, உலகெங்கும் அனைவராலும் விரும்பப்படும் மொழி. தமிழ் மொழி இலக்கியத்தின் தரம், இவற்றில் இருக்கும் கவிதைகளின் ஆழம் ஆகியவை பற்றி பலர் என்னிடத்தில் பகிர்ந்திருக்கிறார்கள். பாரதம் பற்பல மொழிகள் உறையும் இடம், இவை நமது கலாச்சாரம் மற்றும் கௌரவத்தை எடுத்து இயம்புகின்றன. மொழி குறித்து நாம் பேசும் வேளையில், ஒரு சிறிய, சுவாரசியமான ஒலிக்குறிப்பை உங்களோடு பகிர விரும்புகிறேன்.

 

நீங்கள் இதுவரை கேட்டுக் கொண்டிருந்தது, ஒற்றுமைச் சிலை குறித்து ஒரு வழிகாட்டி, சர்தார் படேல் அவர்களுடைய உலகிலேயே மிக உயரமான சிலை பற்றி சம்ஸ்கிருதத்தில் விளக்கிய ஒரு ஒலிக்குறியீடு. கேவடியாவில் 15க்கும் மேற்பட்ட சுற்றுலா வழிகாட்டிகள், மக்களுக்கு தங்கு தடையேதும் இல்லாமல் சம்ஸ்கிருதத்தில் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு மகிழ்வை அளிக்கும். நான் இப்பொழுது உங்களுக்கு மேலும் ஒரு ஒலிக்குறிப்பை அளிக்க விரும்புகிறேன்.

நீங்களும் இதைக் கேட்டு வியப்பில் மூழ்கி இருப்பீர்கள். உள்ளபடியே, இது சம்ஸ்கிருதத்தில் செய்யப்பட்ட கிரிக்கெட் காட்சி வர்ணனை. வாராணசியில், சம்ஸ்கிருத கல்லூரிகளுக்கு இடையேயான ஒரு கிரிக்கெட் பந்தயம் நடக்கும். இந்தக் கல்லூரிகள், சாஸ்த்ரார்த்த கல்லூரி, ஸ்வாமி வேதாந்தி வேத வித்யாபீடம், ஸ்ரீ ப்ரும்ம வேத வித்யாலயம் மற்றும் இண்டர்நேஷனல் சந்திரமௌலி சேரிடபிள் ட்ரஸ்ட் ஆகியன. இந்தப் பந்தயத்தில் நடக்கும் போட்டிகளின் காட்சி வர்ணனை சம்ஸ்கிருதத்திலேயே செய்யப்படுகின்றது. இப்போது நான் அந்தக் காட்சி வர்ணனையின் ஒரு சிறிய பகுதியைத் தான் உங்கள் செவிகளுக்கு அளித்தேன். இதுமட்டுமல்ல, இந்தப் பந்தயத்தில், விளையாட்டு வீரர்களும், வர்ணனையாளரும் பாரம்பரிய உடுப்பில் பங்கெடுக்கிறார்கள். உங்களுக்கு சக்தி, உற்சாகம், விறுவிறுப்பு ஆகியவை அனைத்தும் ஒருங்கே தேவை என்றால், நீங்கள் இந்த விளையாட்டுக்களின் காட்சி வர்ணனையைக் கேட்டே ஆக வேண்டும். டிவி எல்லாம் வருவதற்கு வெகுகாலம் முன்பே கூட, ஹாக்கி மற்றும் கிரிக்கெட் ஆட்டங்களின் விறுவிறுப்பை நாடெங்கிலும் உணரச் செய்த பெருமை விளையாட்டுக் காட்சி வர்ணனைக்கு உண்டு. டென்னிஸ் மற்றும் கால்பந்தாட்டத்தின் காட்சி வர்ணனையும் கூட மிகச் சிறப்பான வகையிலே அளிக்கப்படுகின்றது. எந்த விளையாட்டுக்களின் காட்சி வர்ணனை நிறைவானதாக இருக்கிறதோ, அவற்றின் பரவலாக்கம் மிக விரைவாக நடப்பதை நாம் கவனித்திருக்கிறோம். நம் நாட்டிலேயே கூட, பல விளையாட்டுக்கள், காட்சி வர்ணனை கலாச்சாரமின்மை காரணமாக, வழக்கொழிந்து போகும் நிலையில் இருக்கின்றன. என் மனதிலே ஒரு எண்ணம்…… பல்வேறு விளையாட்டுக்கள், அதிலும் குறிப்பாக நம் நாட்டு பாரம்பரிய விளையாட்டுக்களின் சிறப்பான காட்சி வர்ணனை, பல மொழிகளில் இருக்க வேண்டும், இதை நாம் ஊக்கப்படுத்தும் திசையில் கண்டிப்பாக சிந்திக்க வேண்டும். விளையாட்டு அமைச்சகமும், தனியார் அமைப்புகளின் நண்பர்களும் இது குறித்து சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

எனக்கு மிகவும் பிரியமான இளைய நண்பர்களே, இனி வரவிருக்கும் சில மாதங்கள் உங்களனைவரின் வாழ்க்கையிலும் அதிக மகத்துவமானதாக இருக்கும். பெரும்பாலான இளைய நண்பர்களின் தேர்வுகள் நடைபெற உள்ளன. என் செல்வங்களே, நினைவிருக்கிறதா நான் முன்பு கூறியது!! நீங்கள் அனைவரும் வீரர்களாக வேண்டும், விசனப் படுபவர்களாக ஆகக் கூடாது, மலர்ந்த முகத்தோடு தேர்வுகளைச் சந்தியுங்கள், அதே மலர்ச்சியோடு வீடு திரும்புங்கள். நீங்கள் போட்டியிட வேண்டியது மற்றவர்களோடு அல்ல, உங்களோடு தான். போதுமான அளவு உறக்கம் தேவை, நேர மேலாண்மையும் தேவை. விளையாட்டையும் நீங்கள் துறந்துவிடக் கூடாது, ஏனென்றால் யார் விளையாடுகிறார்களோ, அவர்களே மலரவும் செய்கிறார்கள். மீளாய்வையும், நினைவில் கொள்ளும் ஆற்றலையும் நீங்கள் கைக்கொள்ள வேண்டும், அதாவது ஒட்டுமொத்தமாகக் கூற வேண்டுமென்றால், இந்தத் தேர்வுகளில், உங்களிடம் இருக்கும் சிறப்பானவற்றை நீங்கள் வெளிக்கொணர வேண்டும். இவையனைத்தும் எவ்வாறு சாத்தியப்படும் என்று தானே நீங்கள் சிந்திக்கிறீர்கள்!! நாமனைவரும் இணைந்து தான் இதைச் செய்யப் போகிறோம். ஒவ்வொரு ஆண்டினைப் போலவே, இந்த ஆண்டும் நாம் இணைந்து, தேர்வு பற்றிய ஒரு அலசல் புரிவோம். ஆனால் மார்ச் மாதம் நிகழவுள்ள தேர்வு பற்றிய ஒரு அலசலுக்கு முன்பாக நான் தேர்வை சந்திக்க இருக்கும் அனைத்து மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோரிடத்தில் ஒரு விண்ணப்பத்தை முன்வைக்கிறேன். நீங்கள் உங்கள் அனுபவங்கள், உதவிகரமான உங்களுடைய குறிப்புகள் ஆகியவற்றைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். நரேந்திரமோடி செயலியில் நீங்கள் பகிரலாம். இந்த முறை தேர்வு பற்றிய ஓர் அலசலில், நான் இளைஞர்களுடன் கூடவே, பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கிறேன். எப்படி பங்கெடுக்க வேண்டும், எப்படி பரிசுகளை வெல்ல வேண்டும், எப்படி என்னோடு கலந்தாய்வு செய்யும் வாய்ப்பைப் பெற வேண்டும் என்பது தொடர்பான அனைத்துத் தகவல்களும் ”மைகவ்” தளத்தில் உங்களுக்குக் கிடைக்கும். இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களும், சுமார் 40,000 பெற்றோரும், கிட்டத்தட்ட 10,000 ஆசிரியர்களும் பங்கெடுத்திருக்கிறார்கள். நீங்களும், இன்றே பங்கெடுத்துக் கொள்ளுங்கள். இந்தக் கொரோனா காலகட்டத்தில், நான் சற்று நேரம் ஒதுக்கி, “எக்ஸாம் வாரியர்” புத்தகத்திற்காக பல புதிய உத்திகளை இணைத்திருக்கிறேன். இப்பொழுது இதிலே பெற்றோர்களுக்காக பிரத்யேகமாக சில குறிப்புகளையும் இணைத்திருக்கிறேன். இந்த உத்திகளோடு இணைந்திருக்கும் பல சுவாரசியமான செயல்பாடுகள், நரேந்திரமோடி செயலியில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவை உங்களுக்குள்ளே இருக்கும் தேர்வு வீரனைத் தூண்டி விடப் பேருதவி புரியும். இவற்றை நீங்கள் கண்டிப்பாக முயன்று பாருங்கள். வரவிருக்கும் தேர்வுகள் குறித்து அனைத்து இளைய நண்பர்களுக்கும் பலப்பல நல்வாழ்த்துகள்.

 

எனதருமை நாட்டுமக்களே, மார்ச் மாதம் நமது நிதியாண்டின் இறுதி மாதம் ஆகையால், உங்களில் பலர் மிக சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இப்பொழுது, நாட்டில் பொருளாதார விதிமுறைகள் விரைவு படுவதால், நமது வியாபாரிகள் மற்றும் தொழில் முனைவோர் பலரும் முனைப்பாக செயல்படுகிறார்கள். இந்தப் பணிகளுக்கிடையே, நாம் கொரோனாவிடம் நமது எச்சரிக்கையை எள்ளளவும் குறைத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், சந்தோஷமாக இருக்க வேண்டும், கடமைப் பாதையில் உறுதியாக இருக்க வேண்டும், அப்போது தான் தேசம் விரைவான முன்னேற்றம் காணும்.

உங்கள் அனைவருக்கும் வரவிருக்கும் பண்டிகைகளுக்கான நல்வாழ்த்துகள், மேலும் கொரோனா தொடர்பான விதிமுறைகள் அனைத்தையும் விடாமல் பின்பற்றி வாருங்கள், இதிலே சற்றேனும் தளர்ச்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பலப்பல நன்றிகள்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India’s organic food products export reaches $448 Mn, set to surpass last year’s figures

Media Coverage

India’s organic food products export reaches $448 Mn, set to surpass last year’s figures
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister lauds the passing of amendments proposed to Oilfields (Regulation and Development) Act 1948
December 03, 2024

The Prime Minister Shri Narendra Modi lauded the passing of amendments proposed to Oilfields (Regulation and Development) Act 1948 in Rajya Sabha today. He remarked that it was an important legislation which will boost energy security and also contribute to a prosperous India.

Responding to a post on X by Union Minister Shri Hardeep Singh Puri, Shri Modi wrote:

“This is an important legislation which will boost energy security and also contribute to a prosperous India.”