பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் 2023-24-ம் ஆண்டு சர்க்கரைப் பருவத்திற்கான (அக்டோபர் முதல் செப்டம்பர் வரை) நியாயமான விலை நிர்ணயத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் 10.25 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்புக்கு குவிண்டாலுக்கு ரூ. 315 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 0.1 சதவீத பிழி திறன் அதிகரிப்புக்கு குவிண்டாலுக்கு ரூ.3.07 உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கரும்பு விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதைக் கருத்தில்கொண்டு, 9.5 சதவீத சர்க்கரை கட்டுமானத்திற்கும் கீழே உள்ள கரும்புக்கு எந்தவித விலைக் குறைப்பும் செய்யக் கூடாது என அரசு முடிவெடுத்துள்ளது. அத்தகைய விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.291.97 வழங்கப்படும். நடப்பு 2022-23 சர்க்கரைப் பருவத்தில் குவிண்டாலுக்கு ரூ. 282.12 வழங்கப்படுகிறது.
இந்தப் பருவத்திற்கான கரும்பு உற்பத்திச் செலவு குவிண்டாலுக்கு ரூ. 157-ஆக உள்ளது. தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை உற்பத்திச் செலவை விட 100.6 சதவீதம் அதிகமாகும். நடப்பு பருவத்தைவிட 2023-24 பருவத்திற்கான விலை 3.28 சதவீதம் அதிகமாகும்.
2023-24 பருவத்தில், 2023 அக்டோபர் 1 முதல் விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்வதற்கு இந்த விலைப் பொருந்தும். இந்த சர்க்கரைத்துறை மிக முக்கியமான விவசாயம் சார்ந்த துறையாக உள்ளது. இது 5 கோடி கரும்பு விவசாயிகளுக்கும், அவர்களைச் சார்ந்திருப்போருக்கும் வாழ்வாதாரம் வழங்கி வருகிறது. மேலும் சர்க்கரை ஆலைகளில், பணிபுரியும் 5 லட்சம் தொழிலாளர்களும், கரும்பு அறுவடை மற்றும் போக்குவரத்தில் பங்கேற்கும் தொழிலாளர்களுக்கும் இதனால் பயன்கிட்டும்.
பின்னணி
2022-23 நடப்பு கரும்பு பருவத்தில், ரூ. 1,11,366 கோடி மதிப்பிலான 3,353 லட்சம் டன் கரும்பை சர்க்கரை ஆலைகள் கொள்முதல் செய்துள்ளன. குறைந்தபட்ச ஆதரவு விலையில், நெல் கொள்முதல் நடைபெறுவதற்கு அடுத்தபடியாக 2-வது பெரிய கொள்முதல் இதுவாகும். விவசாயிகள் நலனுக்கு உகந்த நடவடிக்கைகள் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு உரிய காலத்தில் அவர்களது பங்கைப் பெறுவதை அரசு உறுதிசெய்யும்.