முதல் அலையின் உச்சத்தை நாடு கடந்து விட்டது; முன்பை விட பரவல் விகிதம் அதிவிரைவாக உள்ளது : பிரதமர்
நமக்கு நல்ல அனுபவம், ஆற்றல் உள்ளதுடன் தற்போது தடுப்பூசியும் உள்ளது : பிரதமர்
பரிசோதனை, கண்டறிதல், சிகிச்சை அளித்தல் ஆகிய சரியான கொவிட் நடைமுறைகள், கொவிட் மேலாண்மை குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும் : பிரதமர்
மெத்தனம் காரணமாக நமது முயற்சிகளில் எந்தத் தளர்ச்சியும் இருக்கக் கூடாது : பிரதமர்
உயர் கவன மாவட்டங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 சதவீத தடுப்பூசி செலுத்துதல் இலக்கு எட்டப்படவேண்டும் : பிரதமர்
ஜோதிபாய் புலே, பாபாசாகிப் அம்பேத்கர் பிறந்த நாள்களுக்கு இடையே ( ஏப்ரல் 11-14) தடுப்பூசி விழா கடைப்பிடிக்க அழைப்பு

தற்போதைய நிலைமையின் தீவிரத்தை அலசும் போது நீங்கள் அனைவரும் பல்வேறு முக்கியமான கருத்துகளையும், அவசியமான ஆலோசனைகளையும் வெளிப்படுத்தினீர்கள். இறப்பு விகிதமும், தொற்று பரவலும் அதிகரித்து வரும் மாநிலங்களுடன் சிறப்பு ஆலோசனைகள் நடத்துவது என்பது இயற்கையானது. அதே சமயம், இதர மாநிலங்களிடமும் நல்ல ஆலோசனைகள் இருக்கலாம். எனவே, யுக்தி ஏதாவதை வகுக்கக்கூடிய நேர்மறை ஆலோசனைகள் ஏதேனும் இருந்தால் என்னிடம் தெரிவிக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

சுகாதார செயலாளர் வழங்கிய விளக்கக்காட்சியின் படி, மீண்டுமொரு முறை சவாலான நிலைமை உருவாகி வருகிறது. சில மாநிலங்களில் நிலைமை அச்சுறுத்தக்கூடியதாக உள்ளது. இத்தகைய சூழலில், ஆளுகை முறையை மேம்படுத்துவது மிகவும் முக்கியமாகும். ஒரு வருடமாக தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த போரின் காரணத்தால் அமைப்பில் சோர்வும், தொய்வும் ஏற்படுவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

நண்பர்களே,

நிலைமையை இன்று ஆய்வு செய்யும் போது, சில விஷயங்களின் மீது நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டுமென்பது தெளிவாக தெரிந்தது.

முதலாவதாக, முதல் அலையின் உச்சத்தை நாடு ஏற்கனவே கடந்து விட்டது, தொற்று பரவலும் இதுவரை இல்லாத அளவில் உள்ளது.

இரண்டாவதாக, மகாராஷ்டிரா, சத்திஸ்கர், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் முதல் அலையின் உச்சத்தை கடந்து விட்டன. இன்னும் சில மாநிலங்களிலும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நம்  அனைவருக்கும் கவலைத் தரக்கூடிய விஷயம் இது.

மூன்றாவதாக, முன்பை விட மிகவும் சாதரணமாக மக்கள் இதை தற்போது எடுத்துக்கொள்கின்றனர். பல்வேறு மாநிலங்களின் நிர்வாகங்களும் மந்தமாக உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், கொரோனா பாதிப்புகளின் திடீர் அதிகரிப்பு சிக்கலை பெரிதுபடுத்தியுள்ளது. போர்க்கால அடிப்படையில் பணியாற்றி கொரோனா பரவலை தடுப்பது அவசியமாகும்.

நண்பர்களே,

இந்த அனைத்து சவால்களுக்கு இடையிலும், முன்பை விட சிறப்பான வளங்கள் மற்றும் அனுபவங்கள் நம்மிடம் உள்ளன. தற்போது நம்மிடம் தடுப்பு மருந்து உள்ளது. பொது மக்களின் பங்களிப்போடு, கடுமையாக பணியாற்றும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் நிலைமையை கட்டுப்படுத்த தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். உங்களது முந்தைய அனுபவங்களை சிறப்பாக பயன்படுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

கடந்த வருடத்தின் நிலைமையை சற்றே நினைத்து பாருங்கள், அப்போது நம்மிடையே ஆய்வகங்கள் இல்லை. முகக்கவசங்கள், தனிநபர் பாதுகாப்பு கவசங்களுக்கு தட்டுப்பாடு இருந்தது. பொதுமுடக்கம் மட்டுமே தப்பிப்பதற்கான ஒரே வழியாக இருந்தது. இதன் மூலம் நம்மால் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முடிந்தது,

நமது சொந்த வசதிகள் மற்றும் திறன்களை உருவாக்க முடிந்தது. அது நமக்கு பலனளித்தது.

ஆனால் இன்று, நம்மிடம் அனைத்து வளங்களும் உள்ள போது,  நமது ஆளுகைக்காகான பரீட்சை இது. குறு கட்டுப்பாட்டு பகுதிகள் மீது கவனம் செலுத்த வேண்டும். எங்கெல்லாம் இரவு கட்டுப்பாடுகள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் கொரோனா கட்டுப்பாடு என்ற வாசகம் பயன்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம், விழிப்புணர்வு உருவாகும்.

கொரோனா இரவில் தான் பரவுமா என்று சில நபர்கள் அறிவு ஜீவித்தனமான விவாதங்களை நடத்துகிறார்கள். உண்மையில், இரவு கட்டுப்பாடு என்பது உலகளவில் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்று. ஏனென்றால், கொரோனா காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை ஒவ்வொருவருக்கும் இது நினைவு படுத்தும்.

இரவு 9 அல்லது 10 மணியில் இருந்து தொடங்கும் இரவு கட்டுப்பாடுகள் காலை 5 அல்லது 6 மணி வரை நீடிக்கலாம். இதன் மூலம், இதரப் பணிகள் பாதிக்கப்படாது. ஆளுகை முறையை மேம்படுத்தவும், அனைத்தையும் கூர்ந்து கவனிக்கவும் கூடுதல் முயற்சிகளை அரசு எடுத்துள்ளது. இது நன்மை பயக்கும், நம்புங்கள்.

இரண்டாவதாக, 10 லட்சமாக இருந்த சிகிச்சையில் இருந்தவர்களின் எண்ணிக்கையை 1.25 லட்சமாக கடந்த முறை நம்மால் கொண்டு வர முடிந்தது. அப்போது பயன்படுத்திய  யுக்தி இன்றைக்கும் பொருந்தும். வளங்கள் இல்லாத போதே வெற்றியை கண்ட நாம், நம்முடைய வளங்களையும், அனுபவத்தையும் தற்போது சிறப்பாக கையாண்டால் வெகு விரைவாக கொரோனா பரவலை கட்டுப்படுத்தி விட முடியும்.

‘பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை’, சரியான கொவிட் நடத்தை முறை மற்றும் கொவிட் மேலாண்மை ஆகியவற்றின் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று நம்முடைய அனுபவம் சொல்கிறது. 

உங்களது மாநில அரசு இயந்திரத்தை பயன்படுத்தி ஆய்வு ஒன்றை செய்யுமாறு அனைத்து முதல்வர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். முன்பெல்லாம் சிறு அளவிலான அறிகுறிகளுக்கே மக்கள் பயந்தார்கள், ஆனால் தற்போது அறிகுறிகள் இல்லாத நோயாளிகள் அதிகளவில் உள்ளனர். இதன் மூலமும் விரைவில் கொரோனா பரவுகிறது.

இதற்கு தீர்வு என்ன? துடிப்பான பரிசோதனையே இதற்கு தீர்வாகும். பரிசோதனையை நாம் அதிகப்படுத்தும் பட்சத்தில், அறிகுறிகள் இல்லாத நோயாளிகளை நாம் கண்டறிந்து வீட்டிலேயே தனிமைப்படுத்தலாம்.

இதன் மூலம் அவர்களது குடும்ப உறுப்பினர்களை தொற்றிலிருந்து நாம் காக்கலாம்.

கொரோனா நமது வீட்டுக்கு தானாக வராது. நாம் தான் அதை அழைத்து வருகிறோம். விதிகளை பின்பற்றுமாறு மக்களுக்கு நாம் விழிப்புணர்வை ஊட்ட வேண்டும். பரிசோதனைகளை நாம் அதிகப்படுத்த வேண்டும்.

மாநிலங்களை குறை சொல்வது ஒரு பழக்கமாகி விட்டது. முதல் முறையாக நடைபெற்ற கூட்டத்திலேயே, உங்களது செயல்பாடுகள் எதிர்ப்பார்த்த அளவு இல்லையென்றால் அது குறித்து கவலைப்படாமல், பரிசோதனைகளை தீவிரப்படுத்துமாறு நான் கூறினேன். அதையே நான் மீண்டும் சொல்கிறேன். தொற்றுகள் அதிகமாவதாலேயே நீங்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தமில்லை. அதிக பரிசோதனைகளால் அதிக பாதிப்புகள் தெரியவரலாம். ஆனால், அது தான் நமக்கிருக்கும் ஒரே வழி. விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும். நாம் அதை தாங்கிக் கொள்ள வேண்டும்.

70 சதவீதம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் என்பது நமது இலக்காக இருக்க வேண்டும். இதை சரியாக செய்யவில்லை என்றால், எதிர்மறை விளைவுகள் வரலாம். பரிசோதனையை சரியாக செய்யவில்லை என்றால், தொற்று குடும்பத்தில் பரவி, அப்பகுதி முழுவதும் பரவி விடும்.

ஆய்வகங்களின் செயல்பாடுகளையும் நாம் கண்காணிக்க வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிகளில் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். ஒருவர் கூட விடுபட்டுவிடக் கூடாது. இவை அனைத்தையும் நாம் துரிதமாக செய்ய வேண்டும்.

நண்பர்களே,

72 மணி நேரத்தில் குறைந்தது 30 தொடர்புகளையாவது பரிசோதிக்க நாம் இலக்கு நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். ஒருவர் பாதிக்கப்பட்டால், அவரது 30 தொடர்புகளை குறைந்தபட்சம் நாம் பரிசோதிக்க வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிகள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். ஒரு கட்டிடத்தில் சில தொற்றுகள் இருக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த பகுதியையும் கட்டுப்பாட்டு பகுதியாக ஆக்கிவிட வேண்டாம்.

நாம் எச்சரிக்கையாக இருப்பதில் எந்த வித தொய்வும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தொடர்பு கண்டறிதலில் சில மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாட்டு பகுதிகளுக்கான நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் மிகுந்த அனுபவத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளன. உடனுக்குடன் அவை புதுப்பிக்கவும் படுகின்றன. எங்கெல்லாம் இவை முறையாக பின்பற்றப்படுகின்றனவோ, அங்கெல்லாம் நல்ல பலன்கள் கிடைத்துள்ளன. எனவே, இதில் முறையான கவனம் செலுத்துமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர்களே,

இறப்பு விகிதம் குறித்து நாம் அனைவரும் கவலை அடைந்துள்ளோம். குறைந்தபட்ச அளவாக இதை நாம் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு முக்கிய காரணம், நிலைமை மோசமடைந்த பின்னர் மருத்துவமனைக்கு செல்வது தான். மருத்துவமனை வாரியாக இறப்புகள் குறித்து நம்மிடம் தரவுகள் இருக்க வேண்டும். அப்போது தான் இறப்புகளை கட்டுப்படுத்துவது எளிதாக இருக்கும்.

நண்பர்களே,

நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்காக ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எய்ம்ஸ், புதுதில்லி, கருத்தரங்குகளை நடத்துகிறது. இது தொடர வேண்டும். மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள் இதில் கலந்துகொள்ள வேண்டும். இதன் மூலம், கொரோனா கட்டுப்பாடு தொடர்பான பல்வேறு முக்கிய தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.

நண்பர்களே,

ஒரு நாளைக்கு 40 லட்சம் தடுப்பு மருந்துகள் எனும் எண்ணிக்கையை நாம் தாண்டியிருக்கிறோம். தடுப்பு மருந்து வழங்கல் குறித்த முக்கிய விஷயங்களை நாம் அலசினோம். உங்களது அதிகாரிகளை தடுப்பு மருந்து வழங்கலில் ஈடுபடுத்துங்கள். பணக்கார நாடுகளில் உள்ள அனைத்து தடுப்பு மருந்து வசதிகளும் இந்தியாவிலும் உள்ளன. தடுப்பு மருந்து உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நண்பர்களே,

மாநில அரசுகளுடன் ஆலோசித்த பின்னர் தான் நாடு தழுவிய யுக்தி உருவாக்கப்பட்டது. கவனம் அதிகம் தேவைப்படும் மாவட்டங்களில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடுவதன் மீது கவனம் செலுத்துமாறு உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

உங்களுக்கு ஒரு ஆலோசனையை நான் தருகிறேன். சில சமயம், சூழ்நிலையை மாற்ற அது உதவக்கூடும். ஏப்ரல் 11 அன்று ஜோதிபாய் புலேவின் பிறந்த தினமும், ஏப்ரல் 14 அன்று பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்த தினமும் வருகின்றன. தடுப்பு மருந்து திருவிழா ஒன்றை நாம் ஏற்பாடு செய்யலாமா?

எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கு நாம் தடுப்பு மருந்து வழங்க வேண்டும். தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை நாம் அதிகரிக்க வேண்டும். ஏப்ரல் 11 முதல் 14 வரை எவ்வாறு நாம் செயல்படுகிறோம் என்று நாம் பார்த்தால், நமக்கு சாதித்த உணர்வு ஏற்படும்.

தடுப்பு மருந்து திருவிழாவின் போது அதிகபட்சமானோருக்கு நாம் தடுப்பு மருந்தை வழங்க வேண்டும்.

45 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பு மருந்து பெற்று கொள்வதற்கு இளைஞர்கள் உதவ வேண்டும். இளைஞர்களுக்கு இது என்னுடைய சிறப்பு வேண்டுகோளாகும். நாட்டின் இளைஞர்கள் விதிகளை முறையாக பின்பற்றினால், அவர்களுக்கு அருகில் கூட கொரோனா வராது.

மக்கள் தடுப்பு மருந்தை பெற்றுக்கொள்வதற்காக டிஜிட்டல் அமைப்பு ஒன்றை அரசு உருவாக்கியுள்ளது. மக்கள் அதை பாராட்டுகின்றனர். ஆனால், சிலருக்கு இது குறித்து தெரியவில்லை. அத்தகையோருக்கு இளைஞர்கள் உதவ வேண்டும். தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்டம் ஆகியவற்றின் சேவைகளை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

விதிகளை பின்பற்றுமாறு மக்களை நாம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். ஆளுநர் அல்லது முதல்வரின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். சரியான கொவிட் நடத்தைமுறைகள், பரிசோதனை மற்றும் தடுப்பு மருந்து குறித்த விழிப்புணர்வு உருவாக்கப்பட வேண்டும்.

இந்த சூழ்நிலை அரசியலாக்கப்படுவதை பொருத்தவரை, முதல் நாளில் இருந்தே பல்வேறு விதமான அறிக்கைகளை நான் எதிர்கொண்டு வருகிறேன். ஆனால், நான் வாயை திறப்பதில்லை. மக்களுக்கு பணியாற்றுவது நம்முடைய புனித கடமை என்று நான் நினைக்கிறேன்.

அரசியல் செய்பவர்கள் செய்யட்டும். கடினமான நேரத்தில் மக்களுக்கு சேவையாற்றுவதற்கான பொறுப்பை கடவுள் நமக்கு வழங்கியுள்ளார்.

மருந்து மற்றும் விதிகளை பின்பற்றுதல் என்பதே எனது தாரக மந்திரம் என்று மீண்டுமொருமுறை நான் கூறிக்கொள்கிறேன். வெளியே செல்லும் போது மழை பெய்தால் நாம் குடையை எடுத்து செல்ல வேண்டும், அல்லது ரெயின் கோட் போட்டு செல்ல வேண்டும். கோரோனாவும் அது போல தான். அனைத்து விதிகளையும் நாம் பின்பற்ற வேண்டும்.

கடந்த முறை நாம் கொரோனாவை கட்டுப்படுத்தியதை போல, இந்த தடவையும் செய்ய வேண்டும். உங்கள் அனைவரின் மீதும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. தடுப்பு மருந்து வழங்கலை தீவிரப்படுத்துவோம். தடுப்பு மருந்து வழங்கல் திருவிழா மீது கவனம் செலுத்துவோம். சிறிய முயற்சி புதிய நம்பிக்கையை உருவாக்க உதவலாம்.

உங்கள் ஆலோசனைகளுக்காக நான் காத்திருக்கிறேன்.

நன்றிகள் பல.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Microsoft announces $3 bn investment in India after Nadella's meet with PM Modi

Media Coverage

Microsoft announces $3 bn investment in India after Nadella's meet with PM Modi
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜனவரி 8, 2025
January 08, 2025

Citizens Thank PM Modis Vision for a Developed India: Commitment to Self-Reliance