மரியாதைக்குரிய ஓமன் சுல்தான் அவர்களே,
இரு நாட்டு பிரதிநிதிகளே,
உங்கள் அனைவரையும் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியாவுக்கும் ஓமனுக்கும் இடையிலான உறவில் இன்று ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள்.
26 ஆண்டுகளுக்குப் பிறகு ஓமன் சுல்தான் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார்.
நானும் 140 கோடி இந்தியர்களும் உங்களை வரவேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம்.
நாட்டு மக்கள் அனைவரின் சார்பிலும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இந்தியாவுக்கும் ஓமனுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக ஆழமான நட்புறவு இருந்து வருகிறது.
அரபிக்கடலின் ஒரு முனையில் இந்தியாவும், மறுமுனையில் ஓமனும் உள்ளன.
நமது பரஸ்பர நெருக்கம் புவியியலோடு நின்றுவிடாமல், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்த நமது வர்த்தகம், நமது கலாச்சாரம் மற்றும் நமது பொதுவான முன்னுரிமைகளிலும் பிரதிபலிக்கிறது.
இந்தச் சிறப்பான வரலாற்று வலிமை.யுடன், நாம் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கி வருகிறோம்.
இன்று நாம் ஒரு புதிய அம்சத்துடன் கூடிய இந்தியா-ஓமன் கூட்டு தொலைநோக்கு எதிர்காலத்திற்கான கூட்டுச் செயல்பாட்டைப் பின்பற்றுகிறோம்.
இந்த கூட்டுப் பார்வையில், 10 வெவ்வேறு துறைகளில் உறுதியான செயல்திட்டங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டுப் பார்வை நமது கூட்டுச் செயல்பாட்டுக்கு ஒரு புதிய மற்றும் நவீன வடிவத்தை அளிக்கும் என்று நான் நம்புகிறேன்.
இரு தரப்பினருக்கும் இடையில் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்த உடன்படிக்கை தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இது தொடர்பாக இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன, இதில் பல முக்கிய பிரச்சினைகளில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் நாம் விரைவில் கையெழுத்திட முடியும் என்று நான் நம்புகிறேன். இது நமது பொருளாதார ஒத்துழைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும்.
உலக அளவிலும், இந்தியாவும் ஓமனும் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் முன்னேறி வருகின்றன.
இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்தின் வெற்றிக்கு ஒரு விருந்தினர் நாடாக ஓமன் மிகவும் மதிப்புமிக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் ஓமனை தங்கள் இரண்டாவது வீடாகக் கருதுகின்றனர்.
இவர்கள் நமது நாடுகளுக்கு இடையேயான நெருங்கிய உறவுக்கும் நட்பிற்கும் நேரடி எடுத்துக்காட்டுகள்.
அவர்களின் நலன்களைக் காப்பதற்காக மாண்புமிகு சுல்தான் ஹைதமுக்கு தனிப்பட்ட முறையில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய கூட்டம் ஒவ்வொரு துறையிலும் நமது பன்முக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.
மாட்சிமை தங்கிய ஓமன் சுல்தான் அவர்களே,
மீண்டும் உங்களை இந்தியாவுக்கு வரவேற்கிறேன்.
2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கு ஓமன் அணி தகுதி பெற்றுள்ளது. இதற்காக நான் உங்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறேன்,
இப்போது உங்களைத் தொடக்க உரையாற்ற அழைக்கிறேன்.