அதிபர் பைடன் அவர்களே,
முதல் பெண்மணி டாக்டர் ஜில் பைடன் அவர்களே,
மதிப்பிற்குரிய விருந்தினர்களே,
உற்சாகம் மிகுந்த இந்திய- அமெரிக்க நண்பர்களே,
அனைவருக்கும் வணக்கம்!
வெள்ளை மாளிகையில் இன்று அளிக்கப்பட்ட பிரம்மாண்டமான வரவேற்பு, இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களையும், அமெரிக்காவில் வசிக்கும் 4 மில்லியன் இந்திய வம்சாவளியினரையும் கௌரவித்ததைப் போல அமைந்திருந்தது. இதற்காக அதிபர் பைடன் மற்றும் டாக்டர் ஜில் பைடன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய சமூகத்தினர், தங்களது திறமை, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் இந்தியாவிற்கு மேலும் பெருமை சேர்க்கின்றனர். நீங்கள் அனைவரும் தான் நமது உறவின் உண்மையான ஆற்றல். இந்தியா மற்றும் அமெரிக்காவின் சமுதாயங்களும், அமைப்புமுறைகளும் ஜனநாயக கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்துள்ளன. கொவிட் தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் உலக வரிசை புதிய வடிவத்தை எடுத்து வருகிறது. இந்த காலகட்டத்தில் ஒட்டுமொத்த உலகின் திறன்களை மேம்படுத்துவதில் இந்திய- அமெரிக்க நட்புறவு முக்கிய காரணியாக விளங்கும். உலகளாவிய நன்மை, அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்பை நோக்கி இணைந்து பணியாற்றுவதில் நாம் உறுதி பூண்டிருக்கிறோம். நமது வலிமையான கேந்திர கூட்டுமுயற்சி, ஜனநாயக சக்திக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
நண்பர்களே,
இந்திய- அமெரிக்க உறவுகள், பிராந்திய மற்றும் உலகளாவிய விஷயங்கள் குறித்து அதிபர் பைடனும் நானும் இன்னும் சிறிது நேரத்தில் விரிவாக கலந்துரையாடவிருக்கிறோம். எங்களது பேச்சுவார்த்தை, எப்போதும் போல ஆக்கபூர்வமானதாக இருக்கும் என்று நம்புகிறேன். அமெரிக்க நாடாளுமன்றத்தில் மீண்டும் உரையாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும். இந்தியாவின் மூவர்ணங்களுடன், அமெரிக்காவின் “நட்சத்திரங்களும், வரிகளும்” எப்போதுமே புதிய உயரத்தை எட்ட வேண்டும் என்று இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களுடன், நானும் விழைகிறேன்.
ஜெய்ஹிந்த்!
அமெரிக்காவை இறைவன் ஆசீர்வதிக்கட்டும்.
மிக்க நன்றி!