கேரள ஆளுநர் திரு ஆரிஃப் முகமதுகான் அவர்களே, முதலமைச்சர் திரு பினராய் விஜயன் அவர்களே, கேரள அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களே, கொச்சி நகரின் சகோதர சகோதரிகளே!
இன்று கேரளாவின் அனைத்துப் பகுதிகளும் ஓணம் பண்டிகையில் மூழ்கியிருக்கிறது. இந்த உற்சாகமான விழாவின் போது கேரளாவிற்கு ரூ.4,600 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போக்குவரத்துத் திட்டங்கள் பரிசளிக்கப்பட்டுள்ளன.
நண்பர்களே,
கொச்சி மெட்ரோவின் அலுவா-பலரிவட்டம் பிரிவை 2017 ஜூன் மாதத்தில் தொடங்கி வைக்கும் வாய்ப்பை நான் பெற்றிருந்ததை நினைவு கூர்கிறேன். கொச்சி மெட்ரோ முதல் கட்டத்தின் விரிவாக்கத்தை இன்று தொடங்கி வைத்துள்ளேன். மேலும், இரண்டாவது கட்டத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
கொச்சியின் இந்தத் திட்டம் ஒட்டுமொத்த தேசத்தின் நகர்ப்புற மற்றும் போக்குவரத்து வளர்ச்சிக்கு புதிய திசையை வழங்கும். கொச்சியில், ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த ஆணையம் மெட்ரோ, பேருந்து, நீர்வழித் தடங்கள் ஆகிய அனைத்து போக்குவரத்து முறைகளையும் ஒருங்கிணைக்கும்.
தலைநகரிலிருந்து மாநிலத்தின் மற்ற முக்கிய நகரங்களுக்கு மெட்ரோ வலைப்பின்னலை, மத்திய அரசு விரிவுப்படுத்தியுள்ளது. முதலாவது மெட்ரோ ரயில், நாற்பது ஆண்டுகளுக்கு முன் இயக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 30 ஆண்டுகளில், நாட்டில் 250 கிலோ மீட்டருக்கும் குறைவாகவே மெட்ரோ வலைப்பின்னல் தயாரானது. ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளில் 500 கிலோ மீட்டருக்கும் அதிகமான புதிய வழித்தடங்கள் தயாராகி உள்ளன. ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான மெட்ரோ வழித்தடப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கேரளாவின், போக்குவரத்துத் தொடர்புக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. கேரளாவின் வாழ்வாதாரம் என்று அழைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலை-66, ஆறு வழித்தடமாக மத்திய அரசால் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு ரூ.55,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது.
சமூகத்தின் மீது அக்கறையும், கவலையும் வாழ்க்கையின் பகுதியாக இருப்பது கேரள மக்களின் தனிச்சிறப்பாகும். ஒரு சில நாட்களுக்கு முன் கேரள மண்ணில் தோன்றிய அன்னை அமிர்தானந்தமயி அவர்களின் ஆசிகளை நான் பெற்றேன். அவரது கருணையால் ஹரியானாவில் அமைக்கப்பட்டுள்ள அம்ரிதா மருத்துவமனையை திறந்து வைக்கும் வாய்ப்பை நான் பெற்றேன்.
நண்பர்களே,
இத்தகைய வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்களுக்கு நான் மீண்டும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது இனிய ஓணம் வாழ்த்துகள்
மிக்க நன்றி