யோகா மற்றும் தியான பூமியான காஷ்மீருக்கு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வந்திருப்பது எனது அதிர்ஷ்டம். காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகரின் சூழல், சக்தி மற்றும் அனுபவங்கள் யோகாவிலிருந்து நாம் பெறும் வலிமையை நம்மை உணரச் செய்கிறது. யோகக்கலை தினத்தை முன்னிட்டு காஷ்மீர் மண்ணிலிருந்து தேசத்தின் அனைத்து மக்களுக்கும், உலகின் மூலை முடுக்கெங்கும் உள்ள யோகப் பயிற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
சர்வதேச யோகா தினம் 10 ஆண்டுகளைக் கடந்து வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை நிறைவு செய்திருக்கிறது. 2014-ம் ஆண்டு ஐ.நா.வில் சர்வதேச யோகா தினத்தை நான் முன்மொழிந்தேன். பாரதத்தின் இந்த முன்மொழிவை 177 நாடுகள் ஆதரித்தன. இது ஒரு சாதனையாகும். அன்று முதல் யோகா தினம் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. 2015-ம் ஆண்டில், தில்லியில் உள்ள கடமைப் பாதையில் 35,000 பேர் ஒன்றாக யோகா பயிற்சி செய்தனர். இது உலக சாதனையாகவும் இருந்தது. கடந்த ஆண்டு, அமெரிக்காவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற யோகா தினக் கொண்டாட்டத்திற்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இதில் 130-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். யோகாவின் இந்தப் பயணம் இடைவிடாது தொடர்கிறது. ஆயுஷ் துறை பாரதத்தில் யோகா பயிற்சியாளர்களுக்கான யோகா சான்றிதழ் வாரியத்தை நிறுவியுள்ளது. இன்று நாட்டில் 100-க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் இந்த வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வெளிநாடுகளில் உள்ள பத்து முக்கிய நிறுவனங்களும் இந்த வாரியத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.
நண்பர்களே,
உலகெங்கிலும் யோகா பயிற்சி செய்பவர்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது, அதே போல் யோகா மீதான ஈர்ப்பும் அதிகரித்து வருகிறது. யோகாவின் பயனை மக்கள் பெருமளவில் நம்புகிறார்கள். உலகின் எந்த மூலையிலும் உலகத் தலைவர்களை நான் சந்திக்கும் போதெல்லாம், கிட்டத்தட்ட எல்லோரும் என்னிடம் யோகா பற்றி பேசுகிறார்கள். உலகம் முழுவதிலுமிருந்து மூத்த தலைவர்கள் எப்போதும் என்னுடன் யோகா பற்றி விவாதித்து மிகுந்த ஆர்வத்துடன் கேள்விகளைக் கேட்பார்கள். பல நாடுகளில் யோகா அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறி வருகிறது. 2015-ம் ஆண்டு துர்க்மெனிஸ்தானில் யோகா மையம் ஒன்றைத் தொடங்கி வைத்தது எனக்கு நினைவிருக்கிறது. இன்று யோகா அங்கு மிகவும் பிரபலமாகிவிட்டது. யோகா சிகிச்சையும் துர்க்மெனிஸ்தான் மருத்துவ பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியா தனது கல்வி முறையில் யோகாவையும் சேர்த்துள்ளது. மங்கோலிய யோகா அறக்கட்டளையின் கீழ் மங்கோலியாவில் பல யோகா பள்ளிகள் நடத்தப்படுகின்றன. யோகா பயிற்சிமுறை ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக அதிகரித்து வருகிறது. இன்று ஜெர்மனியில் சுமார் 1.5 கோடி பேர் யோகாவைப் பயிற்சி செய்பவர்களாக மாறியுள்ளனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 101 வயது யோகா ஆசிரியைக்கு இந்த ஆண்டு பாரதத்தில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். அவர் ஒருபோதும் பாரதத்திற்கு வந்ததில்லை, ஆனால் அவர் தனது முழு வாழ்க்கையையும் யோகாவை ஊக்குவிப்பதற்காக அர்ப்பணித்தார். இன்று, உலகெங்கிலும் உள்ள முக்கிய நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் யோகா குறித்த ஆராய்ச்சிகளை நடத்தி ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடுகின்றன.
நண்பர்களே,
கடந்த பத்து ஆண்டுகளில் யோகாவின் விரிவாக்கம் யோகாவுடன் தொடர்புடைய கண்ணோட்டங்களை மாற்றியுள்ளது. யோகா இப்போது வரையறுக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி வளர்ந்து வருகிறது. புதிய யோகா பொருளாதாரத்தின் எழுச்சியை உலகம் காண்கிறது. பாரதத்தில், ரிஷிகேஷ் மற்றும் காசியிலிருந்து கேரளா வரை யோகா சுற்றுலாவின் புதிய அனுபவம் காணப்படுகிறது. உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் பாரதத்திற்கு வருகிறார்கள். ஏனென்றால் அவர்கள் பாரம்பரிய யோகா முறையை கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். யோகா ஓய்வு விடுதிகள், யோகா தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையங்களிலும், ஓட்டல்களிலும் யோகாவுக்கென பிரத்யேக வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. சந்தையில் யோகாவுக்கான டிசைனர் ஆடைகள் மற்றும் உபகரணங்கள் காணப்படுகின்றன. மக்கள் இப்போது தங்கள் உடற்தகுதிக்காக தனிப்பட்ட யோகா பயிற்சியாளர்களை நியமிக்கிறார்கள். ஊழியர்களின் ஆரோக்கிய முயற்சிகளின் ஒரு பகுதியாக நிறுவனங்கள் யோகா மற்றும் நினைவாற்றல் திட்டங்களையும் தொடங்குகின்றன. இவை அனைத்தும் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
நண்பர்களே,
இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் 'தனிமனித மற்றும் சமூகத்திற்கான யோகா' என்பதாகும். உலக நன்மைக்கான சக்திவாய்ந்த உந்துசக்தியாக யோகாவை உலகம் பார்க்கிறது. கடந்த காலத்தின் சுமைகள் இல்லாமல், தற்போதைய தருணத்தில் வாழ யோகா நமக்கு உதவுகிறது. இது நம்மையும், நமது ஆழ்ந்த உணர்வுகளையும் இணைக்கிறது. இது மனம், உடல் மற்றும் ஆன்மாவின் ஒற்றுமையைக் கொண்டுவருகிறது. நமது நலன் நம்மைச் சுற்றியுள்ள உலகின் நலனுடன் தொடர்புடையது என்பதை உணர யோகா உதவுகிறது. நமது மனம் அமைதியாக இருக்கும்போது, உலகில் நேர்மறையான தாக்கத்தை நம்மால் ஏற்படுத்த முடியும்.
நண்பர்களே,
யோகா என்பது ஒரு ஒழுக்கம் மட்டுமல்ல, அது ஒரு அறிவியலும் கூட. தகவல் புரட்சியின் இந்தச் சகாப்தத்தில், எல்லா இடங்களிலும் தகவல் வளங்கள் அதிகரித்துள்ளதால், ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவது மனித மனதிற்கு ஒரு பெரிய சவாலாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. யோகா இதற்கும் ஒரு தீர்வை வழங்குகிறது. மனதை ஒருமுகப்படுத்துவதே மனித மனதின் மிகப்பெரிய பலம் என்பதை நாம் அறிவோம். யோகா மற்றும் தியானம் மூலம் இந்த திறன் மேம்படுத்தப்படுகிறது. எனவே, விளையாட்டிலும், ராணுவத்திலும் யோகா சேர்க்கப்படுகிறது. விண்வெளி வீரர்களுக்கு அவர்களின் விண்வெளி திட்டப் பயிற்சியின் ஒரு பகுதியாக யோகா மற்றும் தியானப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. இது உற்பத்தித்திறன் மற்றும் சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது. இப்போதெல்லாம், பல சிறைகளில் கைதிகள் கூட யோகா பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் அவர்கள் தங்கள் மனதை நேர்மறையான எண்ணங்களில் ஒருமுகப்படுத்த முடியும். சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்க யோகா வழி வகுக்கிறது.
நண்பர்களே,
யோகாவின் உத்வேகம் நமது நேர்மறையான முயற்சிகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
மழை காரணமாக சில தடைகள் ஏற்பட்டதால் இன்று சிறிது தாமதம் ஏற்பட்டது. ஆனால் நேற்றிலிருந்து ஜம்மு காஷ்மீர் மக்கள், குறிப்பாக ஸ்ரீநகரில் உள்ள மக்கள் யோகக்கலையில் சேர ஆர்வமாக இருப்பதையும், யோகா மீதான ஈர்ப்பையும் நான் கண்டேன். ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாவை வலுப்படுத்த இது ஒரு வாய்ப்பாகும். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு யோகாவுடன் தொடர்புடையவர்களை நான் கண்டிப்பாக சந்திப்பேன். மழை காரணமாக, இன்று இங்கு நிகழ்ச்சியை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், ஜம்மு காஷ்மீரத்தைச் சேர்ந்த 50-60 ஆயிரம் பேர் யோகக்கலை நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டதை ஒரு பெரிய சாதனையாகக் கருதுகிறேன். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் யோகா தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகெங்கிலும் உள்ள அனைத்து யோகா ஆர்வலர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி!