ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திரு ரமேஷ் பெய்ஸ் அவர்களே, முதலமைச்சர் திரு ஹேமந்த் சோரன் அவர்களே, மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, ஜார்க்கண்ட் மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு நிஷிகந்த் அவர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, தாய்மார்களே, அன்பர்களே,
பாபா வைத்தியநாதின் ஆசியுடன், இன்று சுமார் ரூ. 16,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் நவீன இணைப்பு, எரிசக்தி, சுகாதாரம், நம்பிக்கை மற்றும் சுற்றுலா வளர்ச்சி அடையும்.
நண்பர்களே,
இந்தத் திட்டங்களால் ஜார்க்கண்ட் மாநிலத்தின் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வு எளிதாக்கப்படுவதுடன் வர்த்தகம், வணிகம், சுற்றுலா, தொழில் மற்றும் சுய தொழிலில் ஏராளமான புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்தத் திட்டங்கள் ஜார்க்கண்டில் துவக்கப்பட்டாலும், பிகார் மற்றும் மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளும் இதனால் நேரடியாகப் பயனடையும்.
நண்பர்களே,
மாநில வளர்ச்சியின் மூலம் நாட்டின் மேம்பாடு என்ற அணுகுமுறையுடன் கடந்த எட்டு ஆண்டுகளாக நாடு பணியாற்றி வருகிறது. ஜோதிராதித்யா அவர்கள் குறிப்பிட்டவாறு சாமானிய மக்களும் விமானத்தில் மகிழ்ச்சியுடன் பயணிப்பதற்காக உடான் திட்டத்தை நமது அரசு அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த ஐந்து- ஆறு ஆண்டுகளில் விமான நிலையங்கள், ஹெலிபோர்ட் அல்லது நீர் விமான நிலையங்கள் வாயிலாக 70 இடங்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. தியோகரைத் தொடர்ந்து பொக்காரோ மற்றும் தும்காவில் விமான நிலையங்களைக் கட்டமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
நண்பர்களே,
நம்பிக்கை மற்றும் ஆன்மீகம் சம்பந்தமான முக்கிய தலங்களில் வசதிகளை மேம்படுத்துவதிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. பாபா வைத்தியநாத் தாமிலும் பிரசாத் திட்டத்தின் கீழ் நவீன வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. முழுமையான அணுகுமுறையுடன் இந்த பணிகள் நிறைவடைந்த பிறகு, சுற்றுலா என்ற வடிவத்தில் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவும், ஒவ்வொரு துறையும் வருவாய்க்கான புதிய வாய்ப்புகளைப் பெரும். பழங்குடி பகுதிகளில் இது போன்ற நவீன வசதிகளால் இப்பகுதியின் நிலை மாறவிருக்கிறது.
நண்பர்களே,
எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கிய நாட்டின் முயற்சியால் கடந்த எட்டு ஆண்டுகளில் ஜார்க்கண்ட் மாநிலமும் பெருமளவு பயனடைந்துள்ளது. உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மூலம் வளர்ச்சி, தொழில் மற்றும் சுய தொழில்களுக்கான புதிய வாய்ப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன. இது போன்ற வளர்ச்சியின் வேகத்தை நாம் அனைவரும் இணைந்து விரைவுபடுத்த வேண்டும். ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு மீண்டும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி!