தெற்காசிய கூட்டமைப்பான சார்க் அமைப்பு இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் மிக முக்கியமானதாகும். சார்க் நாடுகளில் இந்தியா பெரிய நாடு என்பதோடு மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் முக்கியத்துவம்வாய்ந்தது. பிரதமர் நரேந்திரமோடி பதவி ஏற்ற முதல்நாளிலேயே தனது வெளியுறவு கொள்கை எப்படி இருக்கும் என்பதை தனது செயல்ட்டின் மூலம் வெளிப்படுத்திவிட்டார்
2014-ம் ஆண்டு மே 26ம் தேதி பதவியேற்பு விழாவிற்கு சார்க் நாடுகளின் தலைவர்களை அழைக்க பிரதமர் முடிவு செய்தார் .மோடி பிரதமராக பதவி ஏற்றபோது ஆப்கானிஸ்தான் அதிபர் அமீத் கர்சாய், வங்கதேச சபாநாயகர் சர்மின் சவுத்திரி,(பிரதமர் ஹசீனா ஏற்கெனவே திட்டமிட்ட நிகழ்ச்சிபடி ஜப்பான் சென்றுவிட்டார்) பூட்டான் பிரதமர் ஷெரிங் தோப்கெ, மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன், நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்ஷே, ஆகியோர் கலந்துகொண்டனர். மறுநாள் அந்த தலைவர்களுடன் பிரதமர் மோடி பயனுள்ள பேச்சுவார்த்தை நடத்தினார். இதுபோன்ற சந்திப்புகள் ஒவ்வொன்றும் பிரதமரின் நல்ல தொடக்கத்தை வெளிப்படுத்துவதாகவும், சார்க் நாடுகளுடனான உறவை பலப்படுத்துவதற்கான நம்பிக்கையையும் ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.
அதுபோன்று பிரதமர் மோடி தனது முதல் வெளிநாட்டு பயணத்திற்காக பூட்டானை தேர்ந்த்தெடுத்தார். 2014ம் ஆண்டு ஜூன்15ம் தேதி பூட்டானில் அவர் கால்பதித்தார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், இந்த பயணத்தின் மூலம் முக்கியமான பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. பூடான் நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி தனது உரையை நிகழ்த்தினார்.
2014ம் ஆண்டு நேபாளத் தலைநகர் காத்மாண்டிற்கு பிரதமர் மோடி சென்றார். இருதரப்பு உறவை பலப்படுத்துவதற்காக அந்த நாட்டுக்கு 17 ஆண்டுகளுக்குப்பிறகு சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி என்ற சிறப்பையும் அவர் நிகழ்த்தி உள்ளார். இந்த பயணத்தின்போதும் பல்வேறு முக்கிய உடன்பாடுகள் கையெழுத்தாகின. இந்தியபிரதமரும், நேபாளத் தலைவர்களுக்கும் இடையிலான தீர்மானங்கள் இருநாட்டு உறவில் புதிய வரலாற்றை படைப்பதாக இருந்தது. அதே ஆண்டு நவம்பர் மாதம் சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மீண்டும் . நேபாளம் சென்றார். அப்போது சார்க் நாடுகளின் தலைவர்களை அவர் சந்தித்தார்.
2015ம் ஆண்டு இலங்கையின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஸ்ரீசேனா இந்தியா வந்தார். அவர் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி பதவி ஏற்றதுமே தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்குத்தான் வந்தார். அதன் பிறகு அதே ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் மோடி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார் அந்த நாட்டுக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற சிறப்பும் மோடிக்கு ஏற்பட்டது.. இந்த பயணத்தின்போதும் இருநாடுகளுக்கு இடையே உடன்பாடுகள் கையெழுத்தாகின. இலங்கை நாடாளுமன்றத்திலும் பிரதமர் உரை நிகழ்த்தினார். யாழ்ப்பாணத்திற்கும் சென்றார். அங்கு சென்ற முதல் இந்திய பிரதமர் மோடிதான். யாழ்ப்பாணத்திற்கு சென்ற 2வது உலகத்தலைவரும் மோடி தான். யாழ்ப்பாணத்தில் இந்திய உதவியுடன் கட்டப்பட்ட வீடுகளை பிரதமர் மோடி பயனாளிகளுக்கு வழங்கினார். அத்துடன் யாழ்ப்பாணம் கலாச்சார மையத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி 2015ம் ஆண்டு மே மாதம் இந்தியா வந்தார். அப்போது இருநாடுகளும் உறவை பலப்படுத்திக்கொள்ள ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.
மே 2015ம் ஆண்டு வங்கதேசத்துடனான எல்லை உடன்பாட்டிற்கு நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல் அளித்து வரலாறு படைக்கப்பட்டது. இது இந்தியா வங்கதேசம் இடையிலான உறவில் புதிய திருப்பு முனையாகும். இதற்காக பங்களிப்பு செய்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முதலமைச்சர்களுக்கும் பிரதமர் பாராட்டு தெரிவித்தார். அத்துடன் வங்கதேச பிரதமரிடம் இருந்தும் வாழ்த்துக்களை பெற்றார். அந்நாட்டுடனான உறவை மேலும் வலுப்படுத்த பிரதமர் மோடி விரையில் வங்க தேசம் செல்ல உள்ளார்.
ஆகையால் இருதரப்பு சந்திப்புகள், முக்கிய ஒப்பந்தங்கள், உள்ளிட்டவை சார்க் நாடுகளுடன் உறவை பலப்படுத்த மோடி தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார் என்பதை தெளிவு படுத்துகிறது.