வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயண பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். நாடு முழுவதிலும் இருந்து வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயண ஆயிரக்கணக்கான பயனாளிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தெலங்கானா மாநிலம் கரீம்நகரைச் சேர்ந்த கால்நடை பராமரிப்பு, தோட்டக்கலையில் ஈடுபட்டுள்ள விவசாயி திரு. எம். மல்லிகார்ஜுன ரெட்டியுடன் பிரதமரின் முதல் கலந்துரையாடல் நடைபெற்றது. பி.டெக் பட்டதாரியான மல்லிகார்ஜுன ரெட்டி ஒரு மென்பொருள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஆவார். இது குறித்து விவரித்த திரு. ரெட்டி, சிறந்த விவசாயியாக மாற கல்வி உதவியது என்று கூறினார். கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை, இயற்கை வேளாண்மை என ஒருங்கிணைந்த முறையை பின்பற்றி வருகிறார். இந்த அணுகுமுறையின் முக்கிய நன்மையாக அவருக்கு வழக்கமான தினசரி வருவாய் கிடைக்கிறது. மூலிகை விவசாயத்திலும் ஈடுபட்டு வரும் இவர், ஐந்து வழிகள் மூலம் வருவாய் ஈட்டி வருகிறார். பாரம்பரிய ஒற்றை விவசாய அணுகுமுறையில் 6 லட்சம் சம்பாதித்து வந்த அவர், தற்போது ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார், இது அவரது முந்தைய வருமானத்தை விட இரண்டு மடங்கு ஆகும்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் உட்பட பல அமைப்புகள், முன்னாள் குடியரசு துணைத்தலைவர் திரு வெங்கையா நாயுடு ஆகியோர் திரு ரெட்டிக்கு விருதுகள் வழங்கியுள்ளனர். ஒருங்கிணைந்த மற்றும் இயற்கை வேளாண்மை குறித்து பிரச்சாரம் செய்வதுடன், சுற்றுப்புற பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கும் பயிற்சி அளித்து வருகிறார். வேளாண் கடன் அட்டை, மண்வள அட்டை, சொட்டு நீர் பாசன மானியம், பயிர் காப்பீடு போன்ற பயன்களை பெற்றார். மத்திய அரசும், மாநில அரசும் வட்டி மானியம் வழங்குவதால், வேளாண் கடன் அட்டையில் பெற்ற கடனுக்கான வட்டி விகிதத்தை சரிபார்க்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்.
மாணவர்களை சந்தித்து படித்த இளைஞர்கள் வேளாண் துறையில் ஈடுபடுவதை ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். திரு ரெட்டியின் இரண்டு மகள்களுடனும் பிரதமர் கலந்துரையாடினார். படித்த இளைஞர்கள் வேளாண்மையில் ஈடுபடுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், வேளாண்மையில் உள்ள வாய்ப்புகளுக்கு நீங்கள் ஒரு வலுவான உதாரணம்" என்று கூறினார். தொழில் முனைவோருக்கு திரு. ரெட்டி மனைவியின் தியாகத்தையும், ஆதரவையும் அவர் பாராட்டினார்.