பிரதமர் பெற்ற நினைவுப் பரிசுப் பொருட்களின் கண்காட்சி மற்றும் மின்னணு ஏலம் இன்று (24.10.2019) நிறைவடைந்தது.
இந்த ஏலத்துக்கு மாபெரும் வரவேற்பு இருந்தது, பல்லாயிரக்கணக்கான ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டன. மின்னணு ஏல நடைமுறையில் சேர்ந்த பணம் நமாமி கங்கை இயக்கத்துக்கு நன்கொடையாக வழங்கப்படும்.
பிரதமருக்கு கிடைத்த மொத்தம் 2,772 நினைவுப் பரிசுப் பொருட்களை மின்னணு ஏலத்தில் விடுவதற்கான நடைமுறையை செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி முதல் மத்திய பண்பாட்டு அமைச்சகம் மேற்கொண்டது. புதுதில்லியில் உள்ள தேசிய நவீன கலைப்பொருள் கண்காட்சியில் இந்தப் பொருட்கள் அனைத்தும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஓவியங்கள், சிற்பங்கள், பொன்னாடைகள், மேலாடைகள் மற்றும் பாரம்பரிய இசைக்கருவிகள் என பல்வேறு வகைப்பட்ட நினைவுப் பரிசுப் பொருட்கள் இவற்றில் அடங்கும்.
தொடக்கத்தில் இந்த மின்னணு ஏலத்தை அக்டோபர் 3-ஆம் தேதி நடத்துவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஏலத்தில் பெரிய அளவில் பொதுமக்கள் ஆர்வம் காட்டியதாலும், மேலும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் இதில் பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கை காரணமாகவும், ஏல நடைமுறையை மேலும் மூன்று வார காலத்திற்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. இன்றைய நிலவரப்படி, ஏலத்துக்கான அனைத்துப் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு விட்டன. இந்த ஏலத்தில் முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், ஆர்வலர்கள் உள்ளிட்டோர் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். இந்தி திரைப்பட நடிகர்கள் அனில்கபூர், அர்ஜுன்கபூர் மற்றும் திரைப்பட பாடகர் கைலாஷ் கெர் உள்ளிட்டோர் இந்த ஏலத்தை வரவேற்றனர்.
காட்சியில் இருந்த பரிசுப்பொருட்களில் சிறிய விநாயகர் சிலை மற்றும் தாமரை வடிவத்திலான கலை நயம் மிக்க மரப்பெட்டி போன்றவற்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பிரதமர், மகாத்மா காந்தியுடன் தோன்றும் தேசியக்கொடி பின்னணியில் உள்ள அக்ரிலிக் ஓவியத்துக்கு அதிகபட்ச விலையாக ரூ.2.5 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த ஓவியம் இறுதியில் ரூ.25 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது.
பிரதமர் தனது தாயிடம் ஆசி பெறுவதைச் சித்தரிக்கும் சட்டமிடப்பட்ட புகைப்படத்துக்கு ஆதார விலை ரூ.1,000 என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் அது ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது. மணிப்பூரி கிராமியக்கலை (நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ.50,000. ஏலத்தொகை ரூ.10 லட்சம்), பசு தனது கன்றுக்கு பால் தருவதை சித்தரிக்கும் உலோக சிற்பம் (நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ.4,000, ஏலத்தொகை ரூ.10 லட்சம்), சுவாமி விவேகானந்தரின் 14 சென்டிமீட்டர் உயர உலோக சிலை (நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ.4,000 பெற்ற ஏலத்தொகை ரூ.6 லட்சம்) உள்ளிட்ட பல பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு, ஏலத்தில் விடப்பட்டன.