22-வது இந்திய-ரஷ்ய வருடாந்தர உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யாவிற்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்கிறேன். அடுத்த மூன்று நாட்களில் ஆஸ்திரியாவிற்கு நான் முதன்முறையாக பயணம் மேற்கொள்கிறேன்.
எரிசக்தி, பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், கல்வி, கலாச்சாரம், சுற்றுலா, மக்களுக்கு இடையேயான பரிமாற்றங்கள் உள்ளிட்ட துறைகளில் கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான சிறந்த முன்னுரிமை பாதுகாப்பு கூட்டாண்மை முன்னேறியுள்ளது.
எனது நண்பர் அதிபர் திரு விளாடிமிர் புடினுடன் இருதரப்பு ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்யவும், பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொள்ளவும் நான் ஆவலுடன் உள்ளேன். அமைதியான மற்றும் நிலையான பிராந்தியத்திற்கு ஆதரவான பங்கை வகிக்க நாங்கள் விரும்புகிறோம். ரஷ்யாவில் உள்ள துடிப்பான இந்திய சமூகத்தினரை சந்திக்கும் வாய்ப்பையும் இந்தப் பயணம் எனக்கு வழங்கும்.
ஆஸ்திரியாவில் அதிபர் திரு அலெக்சாண்டர் வான் டெர் பெல்லன், பிரதமர் திரு கார்ல் நெஹாமர் ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பை நான் பெறவுள்ளேன். ஆஸ்திரியா, நமது உறுதியான மற்றும் நம்பகமான கூட்டு நாடாக உள்ளது. ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மையின் கொள்கைகளை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.
கடந்த 40 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் அங்கு செல்வது இதுவே முதல் முறையாகும். புதிய வளர்ந்து வரும் துறைகளில் புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம், நீடித்த வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் நமது கூட்டாண்மையை மேலும் உயரத்திற்குக் கொண்டு செல்வதற்கான எனது விவாதங்களை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். ஆஸ்திரிய பிரதமருடன் இணைந்து, பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்கு இரு தரப்பிலும் உள்ள வர்த்தகத் தலைவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதை நான் எதிர்நோக்கியுள்ளேன். தொழில்முறை, சிறந்த நடைமுறைக்காக நன்கு மதிக்கப்படும் ஆஸ்திரியாவில் உள்ள இந்திய சமூகத்தினருடனும் நான் கலந்துரையாட உள்ளேன்.