முஸ்லீம் உலமாக்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் மரியாதைக்குரியவர்கள் கொண்ட குழு பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தது. அப்போது, சிறுபான்மையினர் உள்ளிட்ட சமுதாயத்தின் எல்லாப் பிரிவினருக்கும் சமூகப் பொருளாதாரம், கல்வி அதிகாரமளித்தல் ஆகியவை உள்ளடக்கிய மேம்பாட்டுக்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்காகப் பிரதம மந்திரியை அக்குழு பாராட்டியது.
இந்தியாவிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக சவுதி அரசின் முடிவை அக்குழு பாராட்டியதுடன், அதற்காகத் தொடர்ந்து முயற்சி எடுத்த பிரதமருக்கும் நன்றி தெரிவித்தது.
ஊழல், கறுப்புப் பணம் ஆகியவற்றுக்கு எதிராக பிரதமர் மேற்கொண்டுள்ள பிரசாரத்துக்கு அந்தக் குழு ஒரு மனதாகத் தனது ஆதரவைத் தெரிவித்தது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கை சிறுபான்மையினர் உள்பட அனைத்து ஏழை மக்களுக்கும் பயன் அளிக்கும் என்ற கருத்தை குழு ஏற்றுக் கொண்டது.
உலகின் பல்வேறு நாடுகளுடன் நல்லுறவை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சிகளுக்காக பிரதம மந்திரியை அந்தக் குழு பாராட்டியது. “இன்று உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொண்டிருக்கிறார்” என்று அக்குழு தெரிவித்தது.
பிரதமர் மேற்கொண்டுவரும் “தூய்மை இந்தியா” முயற்சிகளை குழுவினர் பாராட்டினர்.
அப்போது பிரதமர், “இன்று உலகின் பல பகுதிகளையும் பாதித்துள்ள தீவிரவாதமயத்தை இந்தியாவில் உள்ள இளைஞர்கள் எதிர்த்து வெற்றி கண்டுள்ளனர். இதற்குக் காரணம், மிக நீண்ட, பன்முகத் தன்மை வாய்ந்த நமது பாரம்பரியத்திற்கே இந்தப் பெருமை போய்ச்சேர வேண்டும். தற்போது இந்தப் பாரம்பரியப் பெருமையை முன்னெடுத்துச் செல்வது நமது கூட்டுப் பொறுபாகும்” என்றார். இந்தியாவின் பண்பாடு, பாரம்பரியம், சமூகக் கட்டமைப்பு ஆகியவை தீவிரவாதத்தின் மிகக் கொடிய எந்த வடிவமோ, அதை ஆதரிப்பவரோ வெற்றிபெற அனுமதிக்காது. பயனுள்ள வேலைவாய்ப்பு, ஏழைகளின் மேம்பாடு ஆகியவற்றுக்கு ஆதாரமாக உள்ள கல்வி, திறன் மேம்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பிரதமர் வலியுறுத்தினார்.
இந்திய ஹஜ் புனிதப் பயணிகளின் எண்ணிக்கையை சவுதி அரசு அதிகரித்துள்ளது வரவேற்கத் தக்கது என்று குறிப்பிட்ட பிரதம மந்திரி, வெளிநாடுகளில் உள்ள இந்திய முஸ்லிம்களைப் பற்றிய பிம்பம் சாதகமாக அமைந்துள்ளது என்றார்.
இமாம் உமர் ஆகமது இலியாசி (இந்திய தலைமை இமாம், அகில இந்திய மசூதிகளின் இமாம் அமைப்பு), லெப்டி. ஜெனரல் ஜமீருதீன் ஷா (அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்), எம்.ஒய். இக்பால் (முன்னாள் நீதிபதி, இந்திய உச்ச நீதிமன்றம்), தலத் அகமது (துணைவேந்தர், ஜாமியா மிலியா இஸ்லாமியா) மற்றும் ஷாஹித் சித்திக் (உருது பத்திரிகையாளர்) ஆகியோர் அக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
பிரதமருடன் அக்குழுவினர் மேற்கொண்ட சந்திப்பின்போது மத்திய சிறுபான்மையினர் நலம் மற்றும் மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் திரு. முக்தர் அப்பாஸ் நக்வி, வெளியுறவுத் துறை இணையமைச்சர் திரு. எம்.ஜே. அக்பர் ஆகியோர் உடனிருந்தனர்.