பிரதமர் திரு.நரேந்திர மோடியை, தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் அனைத்து ஜம்மு-காஷ்மீர் பஞ்சாயத்து கூட்டமைப்பைச் சேர்ந்த 30 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு சந்தித்துப் பேசியது.
அனைத்து ஜம்மு-காஷ்மீர் பஞ்சாயத்து கூட்டமைப்பு என்பது, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பஞ்சாயத்து தலைவர்களின் முதன்மை அமைப்பாகும். இந்த அமைப்பில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள 4,000 கிராம பஞ்சாயத்துக்களைச் சேர்ந்த 4,000 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 29,000 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். அனைத்து ஜம்மு-காஷ்மீர் பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவர் திரு.சாஃபிக் மிர் தலைமையிலான குழு பிரதமரை சந்தித்தது.
மாநிலத்தின் வளர்ச்சி சார்ந்த விவகாரங்கள் குறித்து பிரதமரிடம் குழுவின் உறுப்பினர்கள் எடுத்துரைத்தனர். அப்போது அவர்கள், நாட்டின் மற்ற மாநிலங்களைப் போல, ஜம்மு-காஷ்மீரில் பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் வழங்கப்படாததால், மத்திய அரசின் உதவிகள், மாநிலத்துக்கு சென்றுசேரவில்லை என்று குறிப்பிட்டனர். மேலும், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளித்தனர். இந்திய அரசியல் சாசனத்தின், உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான 73 மற்றும் 74-வது சட்டத் திருத்தங்களை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கும் விரிவுபடுத்துவது குறித்து பரிசீலனை செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மாநிலத்தில் பஞ்சாயத்து மற்றும் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 2011-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில், வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்ததை அவர்கள் குறிப்பிட்டனர்.
அரசியல்சாசன வழிமுறைகளை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு விரிவுபடுத்துவதன் மூலம், கிராமப் பகுதிகளில் அடிப்படை வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள பஞ்சாயத்துக்கு அதிகாரம் கிடைக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர். இது மாநிலத்தின் வளர்ச்சி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். மேலும், மத்திய அரசு கொண்டுவரும் பல்வேறு திட்டங்களின் பலன்கள், மாநில மக்களுக்கு கிடைக்க வழி ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மாநிலத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைகள் குறித்து பிரதமரிடம் இந்தக் குழுவினர் எடுத்துரைத்தனர். பள்ளிகளை தேசவிரோத சக்திகள் எரித்ததற்கு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீரில் அடித்தட்டு மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட இந்த அமைப்பினர், ஜனநாயக அமைப்புகள் மற்றும் அதன் நடைமுறைகள் மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தனர்.
அப்போது பேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு. சாஃபிக் மிர், “மாநில மக்களில் பெரும்பான்மையானவர்கள், அமைதி மற்றும் கவுரவத்துடன் வாழ விரும்புகின்றனர். சில சுயநலவாதிகள், இளைஞர்களை தவறாக வழிநடத்துவதுடன், அவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுகின்றனர்” என்று தெரிவித்தார். எனவே, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்க தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமரை அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்கும் என்று குழுவினரிடம் பிரதமர் உறுதியளித்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சியும், மேம்பாடுமே தனது நோக்கம் என்று பிரதமர் குறிப்பிட்டார். மேலும், மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு, அதிக அளவில் மக்கள் வாழும் கிராமங்கள் மேம்பாடு அடைவது முக்கியம் என்று பிரதமர் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை மனிதநேய அடிப்படையில் அணுக வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். ஜம்மு-காஷ்மீர் மாநில வளர்ச்சிக்கான மத்திய அரசின் நடவடிக்கைகளில் வளர்ச்சியும் நம்பிக்கையும் தொடர்ந்து முக்கியமானதாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.