நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் கெவாடியாவிற்கு ரயில்கள் இணைக்கப்பட்டிப்பதற்கு அனைவரும் பெருமை கொள்ள வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து குஜராத் மாநிலம் கெவாடியாவிற்கு 8 ரயில்களையும், குஜராத் மாநிலத்தில் ரயில்வே துறை சம்பந்தமான பல்வேறு திட்டங்களையும் காணோலி வாயிலாகத் தொடங்கி வைத்துப் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
கெவாடியா முதல் சென்னை, வாரணாசி, ரேவா, தாதர் மற்றும் தில்லி இடையேயான புதிய இணைப்புகள், கெவாடியா- பிரதாப் நகர் இடையே மின்மயமாக்கப்பட்ட ரயில் சேவைகள், தபோய்- சந்தோத் அகல ரயில் பாதை, சந்தோத்- கெவாடியா புதிய அகல ரயில் பாதை ஆகியவை கெவாடியாவின் வளர்ச்சி என்னும் புதிய அத்தியாயத்திற்கு வடிவம் கொடுக்கும் என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் சுய வேலைவாய்ப்பும், வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படுவதால் சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் பழங்குடி மக்களும் பயனடைவார்கள்.
நர்மதை ஆற்றங்கரையில் உள்ள நம்பிக்கையூட்டும் பகுதிகளாகக் கருதப்படும் கர்னாலி, போய்சா, கருடேஷ்வர் ஆகியவையும் இணைக்கப்படும்.