புனித குடும்ப சபையின் பெண் காப்பாளர் அன்னை மரியம் திரேசியா அர்ச்சிப்பு செய்யப்படுவதற்கு, தமது “மனதின் குரல்” நிகழ்ச்சியின் மூலம் பாராட்டுத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, புனித குடும்ப சபை நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளது.
“புனித குடும்ப சபையின் தலைமைக் காப்பாளரான சகோதரி உதயா என்கிற நான், எங்களது சபையின் பெண் காப்பாளர் அன்னை மரியம் திரேசியா அர்ச்சிப்பு செய்யப்பட்டதற்காக, தமது “மனதின் குரல்” நிகழ்ச்சியின் மூலம் பாராட்டுத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, புனித குடும்ப சபை சார்பில் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன். தொலைநோக்கு சிந்தனையுடைய, புனிதப் பெண்ணான அவர் (மரியம் திரேசியா) ஆத்ம பலத்துடன், பல்வேறு நெருக்கடிகளை சமாளித்து, சபைக்காக சேவையாற்றி தமது கடமையை பூர்த்தி செய்தவர் ஆவார். அன்பு மற்றும் அமைதியை வெளிப்படுத்தி, கல்வியை போதித்து எங்களது புனித சபையை சேர்ந்த குடும்பத்தினரின் மேம்பாட்டிற்காக அரும்பாடுபட்ட புதிய இந்திய புனிதரான மரியம் திரேசியாவை, மனதார பாராட்டி இருக்கிறீர்கள். எனவே அந்தளவிற்கு அவர் இந்த தேசத்தை உருவாக்க பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார். மாண்புமிகு மோடி அவர்களே, ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் நீங்கள் தெரிவித்த பாராட்டுச் செய்தி, அனைவரையும் கவர்ந்ததுடன், எங்களது சபைக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள ஒவ்வொருவரும் பாராட்டும் வகையில் அமைந்திருந்தது” என்று புனித குடும்ப சபை சார்பில் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகோதரி மரியம் திரேசியா அர்ச்சிப்பு செய்யப்பட இருப்பது குறித்து தமது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “சகோதரி மரியம் திரேசியாவுக்கு மாட்சிமை தங்கிய போப்பாண்டவர் பிரான்சிஸ் வருகிற அக்டோபர் 13 அன்று புனிதர் பட்டம் வழங்க இருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமிதம் அளிக்கக் கூடியது. சகோதரி மரியம் திரேசியாவிற்கு எனது இதயமார்ந்த காணிக்கையை உரித்தாக்குவதுடன், இந்திய குடிமக்களை, குறிப்பாக நமது கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளின் இந்த சாதனைக்காக பாராட்டுகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.