இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு, கொரிய குடியரசின் அதிபர் திரு. மூன் ஜெயின், ஜிம்பாப்வே அதிபர் திரு. இ.டி. மினங்கக்வா, மொசாம்பிக் அதிபர் திரு. பிலிப் ஜசிந்தோ நியுஸி ஆகியோர் இன்று தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.
தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததற்காக கொரிய அதிபருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். 2019 பிப்ரவரியில் தான் கொரியாவிற்கு மேற்கொண்ட பயணத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார். மேலும், 2018 ஆம் ஆண்டு ‘தீபவுட்சவ்’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அதிபரின் மனைவி திருமிகு. கிம் இந்தியாவிற்கு வருகை தந்ததையும் நினைவு கூர்ந்த பிரதமர், அவரின் அந்தப் பயணம் இந்திய-கொரிய உறவில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்ததாகக் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள சிறப்பான உத்திசார் கூட்டுறவினை மேலும் வலுப்படுத்த தான் உறுதியோடு இருப்பதை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.
சமீபத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் திரு. மோடிக்கு ஜிம்பாப்வே அதிபர் திரு. மினங்கக்வா தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவரின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், இந்தியத் தேர்தலைக் குறித்த செய்திகளை வெளியிட ஜிம்பாப்வேவில் இருந்து இரண்டு பத்திரிகையாளர்கள் வருகை தந்ததற்கு பாராட்டு தெரிவித்தார். கடந்த ஆண்டு குடியரசுத் துணைத் தலைவர் ஜிம்பாப்வேவிற்கு பயணம் மேற்கொண்டதை நினைவு கூர்ந்த பிரதமர், இந்தியா-ஜிம்பாப்வே உறவினை தான் புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல விரும்புவதாகக் கூறினார்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மொசாம்பிக் நாட்டில் அடித்த சூறாவளி காரணமாக ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் இழப்புகளுக்கு மொசாம்பிக் அதிபர் திரு. நியூஸியிடம் பிரதமர் தனது இரங்கலை தெரிவித்தார். அந்த சமயத்தில் இந்திய கடற்படை செய்த உதவிகளுக்காக பிரதமருக்கு திரு. நியூஸி நன்றி தெரிவித்தார். ஒற்றுமை மற்றும் கூட்டுறவில் இந்தியா என்றும் மொசாம்பிக்குடன் துணை நிற்கும் என்றும் பிரதமர் கூறினார்.