சிங்கப்பூர் துணைப் பிரதமரும், அந்நாட்டு நிதியமைச்சருமான திரு.ஹெங் ஸ்வீ கீட், இன்று (04.10.2019) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
பிரதமர் லீ சீன் லூங் மற்றும் கவுரவ அமைச்சர் கோ சோ டோங் ஆகியோரின் வாழ்த்துக்களை துணைப் பிரதமர் கீட் பிரதமரிடம் தெரிவித்தார். இவர்களுடன் தாம் நடத்திய பயனுள்ள சந்திப்புகளை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, அவர்களுக்கு தமது நல்வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு துணைப் பிரதமர் கீட்டிடம் கேட்டுக் கொண்டார்.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபையில் கடந்த மாதம் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் லீ சீன் லூங் பங்கேற்றதற்காக தமது பாராட்டுதல்களை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
துணைப் பிரதமர் கீட் பேசுகையில், இந்தியாவில், குறிப்பாக கட்டமைப்புத் துறையில் இந்திய அரசு மேற்கொண்டுள்ள மாற்றத்திற்கான முயற்சிகள், முதலீட்டு வாய்ப்புகளை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். ஃபின்டெக் உள்ளிட்ட தொழில்நுட்பத் துறைகளில் இந்தியா-சிங்கப்பூர் இடையேயான ஒத்துழைப்புகள் அதிகரித்து வருவது குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.
இருநாடுகளிடையே முதலீடு மற்றும் வர்த்தக உறவுகள் அதிகரித்து வருவதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டார். சிங்கப்பூரில் ரூபே கார்டு மற்றும் பீம் செயலி சேவை தொடங்கப்பட்டிருப்பது நிதி பரிவர்த்தனைகளை பெரிதும் எளிதாக்கி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் சிங்கப்பூர் மாணவர்களின் பங்கேற்புடன் இரண்டாவது கூட்டு ஹேக்கத்தான் போட்டிகளை சென்னையில் வெற்றிகரமாக நடத்தியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இது போன்ற நடவடிக்கைகள் இரு நாடுகள் இடையே சமூக ரீதியாகவும், வர்த்தகம் மற்றும் கண்டுபிடிப்பு துறைகளிலும் நெருங்கிய ஒத்துழைப்பு அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுவதாக அவர் எடுத்துரைத்தார்.