பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், நவோதயா வித்யாலயா திட்டத்தின் (மத்திய துறைத் திட்டம்) கீழ், நாட்டில் நவோதயா பள்ளிகள் இதுவரை திறக்கப்படாத மாவட்டங்களில் 28 நவோதயா வித்யாலயா பள்ளிகளை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2024-25 முதல் 2028-29 வரையிலான ஐந்தாண்டு காலத்திற்கு 28 நவோதயா வித்யாலயா பள்ளிகளை நிறுவுவதற்கு மொத்தம் ரூ. 2359.82 கோடி நிதி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் மூலதனச் செலவினம் ரூ.1944.19 கோடியும், செயல்முறை செலவினம் ரூ.415.63 கோடியும் அடங்கும்.
புதிய 28 பள்ளிகள் மூலம் 15, 680 மாணவர்கள் பயனடைவார்கள். நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி, ஒரு முழுமையான நவோதயா பள்ளி 47 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. அதன்படி அங்கீகரிக்கப்பட்ட 28 நவோதயா வித்யாலயா 1316 நபர்களுக்கு நேரடி நிரந்தர வேலைவாய்ப்பை வழங்கும்.
அருணாச்சலப் பிரதேசத்தில் 8, அசாமில் 6, மணிப்பூரில் 3, தெலங்கானாவில் 7, மேற்கு வங்கத்தில் 2, கர்நாடகா, மகாராஷ்டிராவில் தலா 1 புதிய நவோதயா பள்ளிகளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உத்தேசமாக 49,640 மாணவர்கள் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்படுகிறார்கள். தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் 661 அனுமதிக்கப்பட்ட நவோதயா வித்யாலயாக்கள் உள்ளன. சமீபத்திய ஆண்டுகளில், நவோதயா வித்யாலயாக்களில் பெண்கள் (42%), எஸ்சி (24%), எஸ்டி (20%), ஓபிசி (39%) குழந்தைகளின் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதன் மூலம் அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
சிபிஎஸ்இ நடத்தும் பொதுத் தேர்வுகளில் நவோதயா வித்யாலயா மாணவர்களின் செயல்திறன் அனைத்து கல்வி முறைகளிலும் தொடர்ந்து சிறப்பாக இருந்து வருகிறது.