இந்திய கப்பல் நிறுவனங்களுக்கு மானியம் அளிப்பதன் மூலம், மத்திய அமைச்சகங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் உலகளாவிய டெண்டர்களில், இந்திய சரக்கு கப்பல்கள் பங்கேற்பதை அதிகரிக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தற்சார்பு இந்தியா நோக்கை அடைவதற்காக, இந்திய கப்பல் நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மேல் ரூ.1624 கோடி மானியம் வழங்கும் திட்டத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் மத்திய அரசின் சரக்கு இறக்குமதிக்காக, மத்திய அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வெளியிடும் டெண்டர்களில் இந்திய கப்பல் நிறுவனங்கள் பங்கேற்க முடியும். இதன் மூலம் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட சரக்கு கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
2021 பிப்ரவரி 1ம் தேதிக்குப்பின் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு இந்திய கொடியுடன் செல்லும் கப்பல், இந்தியாவில் பதிவு செய்த தேதியில் 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட கப்பலாக இருந்தால், அதற்கான மானிய உதவி, வெளிநாட்டு கப்பல் நிறுவனம் தெரிவிக்கும் விலையில் 15 சதவீதம் வரை மானியம் அளிக்கப்படும் அல்லது இந்திய கப்பல் நிறுவனம் தெரிவிக்கும் விலைக்கும், வெளிநாட்டு கப்பல் நிறுவனம் தெரிவிக்கும் விலையின் மாறுபாட்டில் எது குறைவோ அது வழங்கப்படும்.
2021 பிப்ரவரி 1ம் தேதிக்குப்பின் இந்தியாவில் பதிவு செய்யப்படும் கப்பல் 10 முதல் 20 ஆண்டு பழமையானதாக இருந்தால், மானிய உதவி 10 சதவீதம் அளிக்கப்படும்.
இந்த மானிய உதவி ஒவ்வொரு ஆண்டும் ஒரு சதவீதம் குறைக்கப்படும். 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட கப்பல்களுக்கும் 10 சதவீதம் வரையும், 10 முதல் 20 ஆண்டுகளுக்கு உட்பட்ட கப்பல்களுக்கு 5 சதவீதம் வரையும் குறைக்கப்படும்.
இந்தியாவில் ஏற்கனவே பதிவு செய்த கப்பல்கள், 2021ம் பிப்ரவரி 1ம் தேதி நிலவரப்படி 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட கப்பலாக இருந்தால், வெளிநாட்டு கப்பல் நிறுவனம் தெரிவிக்கும் விலையில் 10 சதவீதம் மானியம் வழங்கப்படும் அல்லது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கப்பல் நிறுவனங்களின் விலை மாறுபாட்டில் எது குறைவோ அது வழங்கப்படும். ஏற்கனவே இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல்கள் 10 முதல் 20 ஆண்டுகள் பழமையானதாக இருந்தால், 5 சதவீத மானிய உதவி அல்லது விலை மாறுபாட்டில் எது குறைவோ அது வழங்கப்படும்.
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பலை வெளிநாட்டு நிறுவனம் ஏலம் எடுத்திருந்தால், இந்த மானிய உதவி கிடைக்காது.
இந்த மானிய உதவி, அரசு அமைச்சகம் மற்றும் துறையிடம் நேரடியாக வழங்கப்படும்.
20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சரக்கு கப்பல்கள் மானிய உதவி பெற தகுதியில்லை.
பயன்கள்:
a) இந்திய வர்த்தக கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்திய மாலுமிகளுக்கு சிறந்த பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். உலகளாவிய கப்பல் போக்குவரத்தில், இந்திய நிறுவனங்களின் பங்கு அதிகரிக்கும்.
b) கடல்சார் படிப்புகளை படிப்பவர்கள், கப்பலில் பயிற்சி பெற முடியும். இந்திய மாணவர்களுக்கு இந்திய கப்பல்கள் பயிற்சி அளிக்க முடியும்.
c) உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் இந்திய மாலுமிகளின் பங்கு அதிகரிக்கும்.
d) கப்பல் கட்டுதல் மற்றும் பழுது பார்க்கும் நிறுவனங்கள் போன்றவை அதிகரித்து நேரடி வேலை வாய்ப்பை உருவாக்கும்.