
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தனியார் பண்பலை வானொலி மூன்றாம் கட்ட ஏலத்தின் கீழ் ரூ.784.87 கோடி மதிப்பில் 234 புதிய நகரங்களில் 730 அலைவரிசைகளுக்கான 3-வது தொகுதி மின்னணு ஏலத்தை நடத்துவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) நீங்கலாக மொத்த வருவாயில் பண்பலை அலைவரிசைகளுக்கான வருடாந்திர உரிமக் கட்டணம் (ஏஎல்எஃப்) 4% ஆக வசூலிக்கும் முன்மொழிவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது 234 புதிய நகரங்களுக்கும் பொருந்தும்.
இந்த 234 நகரங்களில் இதுவரை தனியார் பண்பலை வானொலி அலைவரிசைகள் தொடங்கப்படவில்லை. தற்போது இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதன் மூலம், இந்த நகரங்களில் பண்பலை வானொலிக்கான ஒலிபரப்புத் தேவை பூர்த்தி செய்யப்படும். மேலும் தாய்மொழியில் உள்ளூர் உள்ளடக்கத்தையும் இவை ஒலிபரப்பும்.
இதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், உள்ளூர் பேச்சு மொழி, கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும் வழிவகை ஏற்படும்.
ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளவற்றில் பல இடங்கள் முன்னேற்றத்தை அடைந்து வரும் மாவட்டங்கள், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளன. இந்தப் பகுதிகளில் தனியார் பண்பலை வானொலியை அமைப்பதன் மூலம், இந்தப் பகுதிகளில் அரசின் செயல்பாடுகள் மேலும் வலுப்பெறும்.
28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 234 நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் 730 அலைவரிசைகளைத் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 11 நகரங்களில் தலா 3 அலைவரிசைகளுக்கான ஏலத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நகரங்கள் பின்வருமாறு:
- குன்னூர்
- திண்டுக்கல்
- காரைக்குடி
- கரூர்
- நாகர்கோயில் / கன்னியாகுமரி
- நெய்வேலி
- புதுக்கோட்டை
- ராஜபாளையம்
- தஞ்சாவூர்
- திருவண்ணமலை
- வாணியம்பாடி