திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலா விமான நிலையத்தின் பெயரை மகாராஜா பீர் பிக்ரம் மாணிக்ய கிஷோர் விமான நிலையம் என்று பெயர்மாற்றம் செய்ய பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. மகாராஜா பீர் பிக்ரம் மாணிக்ய கிஷோர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திரிபுரா மாநில மக்களும் அரசும் நெடுங்காலமாக கேட்டுக்கொண்டிருக்கும் கோரிக்கையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பின்னணி:
1923 –ஆம் ஆண்டு திரிபுரா மாகாணத்தின் மன்னராக பொறுப்பேற்ற மகாராஜா பீர் பிக்ரம் மாணிக்ய கிஷோர் சிறந்த அறிவாற்றலும் இரக்கமும் கொண்ட ஆட்சியாளராக திகழ்ந்தார். அகர்தலா விமான நிலையம் 1942 ஆம் ஆண்டு மகாராஜா பீர் பிக்ரம் மாணிக்ய கிஷோர் தானமாக அளித்த நிலத்தில் நிறுவப்பட்டது. உலகம் முழுவதிற்கும் பயணம் செய்த இவர் தொலைநோக்கு பார்வை உடைய அரசராக இருந்து திரிபுராவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அவரது முயற்சியில் தான், இன்று மிகவும் வடகிழக்கு பகுதியில் உள்ள இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான அகர்தலா விமான நிலையம் கட்டப்பட்டது. இந்த விமான நிலையம் திரிபுரா மாநிலத்தை இணைக்கும் முக்கிய விமான சேவையை வழங்குகிறது. அதனால், அகர்தலா விமான நிலையம் அவரது பெயரில் மாற்றம் செய்யப்படுவது சரியானதாகவே இருக்கும். இது மகாராஜா பீர் பிக்ரம் மாணிக்ய கிஷோருக்கு பொருத்தமான அஞ்சலியாக அமையும்.