ஆப்பிரிக்காவில் அடுத்த 4 ஆண்டுகளில் (2018-2021) 18 புதிய இந்திய தூதரகங்களை திறக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஆப்பிரிக்காவில் உள்ள புர்க்கினா ஃபாசா, கேமரூன், கேப் வெர்டி, சாட், காங்கோ குடியரசு, டிஜிபோட்டி, ஈக்குவட்டோரியல் கினி, எரித்ரியா, கினி, கினி பிசாவ், லைபீரியா, மவுரிடானியா, ருவாண்டா, சாவ்டோம்- பிரின்சிபி, சியராலோன், சோமாலியா, சுவாசிலாந்து, டோகோ ஆகிய நாடுகளில் அடுத்த 4 ஆண்டுகளில் இந்த புதிய தூதரகங்கள் திறக்கப்படும். இதன்மூலம் ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்களின் எண்ணிக்கை 29-லிருந்து 47 ஆக அதிகரிக்கும்.
இந்த முடிவின் மூலம் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இந்திய தூதரகச் செயல்பாடுகள் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் இந்தியா தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும். இந்த புதிய தூதரக அலுவலகங்களைத் திறப்பது ஆப்பிரிக்காவுடனான ஒத்துழைப்பு மற்றும் தொடர்புகளை விரிவுபடுத்த வேண்டும் என்ற இந்தியாவின் தொலைநோக்குத் திட்டத்தை செயல்படுத்துவதை நோக்கி முன்னெடுத்து வைக்கப்பட்டுள்ள முதல் படியாகும்.