இரண்டாம் கட்ட பசுமை மின்சக்தி வழித்தடம் அமைப்பதில் மாநிலங்களுக்கு இடையேயான பகிர்வு அமைப்புக்கு , பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
இதன் மூலம் சுமார் 10,750 சுற்று கி.மீ தூரத்துக்கு மின்பகிர்மான வழித்தடம் மற்றும் சுமார் 27,500 மெகா வோல்ட்-ஆம்பியர் அளவுக்கு மின்பரிமாற்ற திறன் கொண்ட துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும். இத்திட்டம் குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம் , கர்நாடகா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இடையே மின்தொகுப்பு ஒருங்கிணைப்புக்கும் மற்றும் சுமார் 20 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க மின்சக்தியை அனுப்பவும் உதவும்.
இத்திட்டம் மொத்தம் ரூ.12,031.33 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளது மற்றும் இதில் மத்திய நிதி உதவி, திட்ட செலவில் 33 சதவீதமாக அதாவது ரூ.3970.34 கோடியாக இருக்கும். இந்த மின்பகிர்வு அமைப்பு 2021-22ம் ஆண்டு முதல் 2025-26ம் வரை 5 ஆண்டு காலத்தில் அமைக்கப்படும். மத்திய அரசின் நிதியுதவி, மாநிலங்களுக்கு இடையேயான மின்பகிர்வு கட்டணங்களை ஈடுசெய்யவும், மின்சாரத்தை குறைந்த விலையில் வைத்திருக்கவும் உதவும். மத்திய அரசின் உதவியால், நாட்டு மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் கிடைக்கும். இத்திட்டம் 2030ம் ஆண்டுக்குள், 450 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் அமைக்கும் இலக்குக்கு உதவும்.
இத்திட்டம், நாட்டின் நீண்ட கால மின்சக்தி பாதுகாப்புக்கும் மற்றும் கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதன் மூலம் நிலையான சுற்றுச்சூழல் வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும். மேலும், இத்திட்டம் மின்சாரம் மற்றும் இது தொடர்பான துறைகளில் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை ஏற்படுத்தும்.
முதல்கட்ட பசுமை மின்சக்தி வழித்தட திட்டம் ஆந்திரபிரதேசம், குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் தமிழகத்தில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டு வருகிறது. 24 ஜிகாவாட் திறனுள்ள புதுப்பிக்கத்தக்க மின்சக்தி திட்டம் 2022ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.