தேசிய ஆயுஷ் இயக்கத்தை மத்திய நிதியுதவித் திட்டமாக 01-04-2021 முதல் 31-03-2026 வரை ரூ. 4607.30 கோடி மதிப்பில் (மத்திய அரசின் பங்காக ரூ. 3000 கோடி, மாநில அரசின் பங்காக ரூ. 1607.30 கோடி) தொடர பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தடுப்புமுறை, ஊக்குவித்தல் மற்றும் சிகிச்சை அளிப்பதில் அறிவுசார் பெட்டகமாகத் திகழும் ஆயுர்வேதம், சித்தா, சோவா, ரிக்பா, யுனானி மற்றும் ஹோமியோபதி முதலிய பாரம்பரிய மருத்துவ முறைகளை இந்தியா தன்னகத்தே கொண்டுள்ளது. பன்முகத்தன்மை மற்றும் நெகிழ்வுத்தன்மை, அணுகல், பொதுமக்களில் பெருவாரியான பிரிவினரால் ஏற்றுக்கொள்ளப்படும் தன்மை, ஒப்பீட்டளவில் குறைந்த செலவு மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார மதிப்பு உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளின் நேர்மறை அம்சங்கள், பெருவாரியான பிரிவினருக்கு தேவையான மருத்துவ வசதியை வழங்கும் சாத்தியக்கூறுகளை பெற்றுள்ளது.
குறைந்த செலவில் ஆயுஷ் சேவைகளை வழங்குவது, ஆயுஷ் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்கள், சமுதாய மருத்துவ மையங்கள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள வசதிகளை தரம் உயர்த்துவது, ஆயுஷ் கல்வி நிறுவனங்களின் தரத்தை உயர்த்துவதன் வாயிலாக நிறுவன திறனை வலுப்படுத்துவது, 50 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனைகள் மற்றும் ஆயுஷ் பொது மருத்துவத் திட்டங்களை உருவாக்குவது, 12500 ஆயுஷ் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு மையங்களை அமைப்பது உள்ளிட்டவை மத்திய நிதியுதவித் திட்டத்துடன் கூடிய தேசிய ஆயுஷ் இயக்கத்தின் நோக்கமாகும்.