பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி, பெங்காலி ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. செம்மொழிகள் பாரதத்தின் ஆழமான மற்றும் பண்டைய கலாச்சார பாரம்பரியத்தின் அரணாக செயல்படுகின்றன, ஒவ்வொரு சமூகத்தின் வரலாறு மற்றும் கலாச்சார மைல்கல்லின் சாரத்தை உள்ளடக்கியுள்ளன.
2004, அக்டோபர் 12 அன்று "செம்மொழிகள்" என்ற புதிய பகுப்பை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்தது.
இதையடுத்து செம்மொழி அந்தஸ்துக்கு முன்மொழியப்பட்ட மொழிகளை ஆய்வு செய்ய நவம்பர் 2004-ல் சாகித்ய அகாதமியின் கீழ் கலாச்சார அமைச்சகத்தால் மொழியியல் வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டது.
நவம்பர் 2005 இல் அளவுகோல்கள் திருத்தப்பட்டன. இதன் பின்னர்
மத்திய அரசு, இதுவரை கீழ்க்கண்ட மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்தை வழங்கியுள்ளது:
தமிழ்-12/10/2004, சமஸ்கிருதம்-25/11/2005, தெலுங்கு-31/10/2008, கன்னடம் -31/10/2008, மலையாளம்- 08/08/2013, ஒடியா-01/03/2014
மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து கோரி 2013 ஆம் ஆண்டில் மகாராஷ்டிர அரசிடமிருந்து ஒரு முன்மொழிவு அமைச்சகத்தால் பெறப்பட்டது, இது மொழியியல் வல்லுநர்கள் குழு (எல்.இ.சி) வுக்கு அனுப்பப்பட்டது. செம்மொழிக்கு மராத்தி மொழியை எல்.இ.சி பரிந்துரைத்தது. இதற்கிடையே, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் வங்காள மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க பீகார், அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலிருந்தும் கருத்துரு பெறப்பட்டது.
திருத்தப்பட்ட அளவுகோல்களின்படி செம்மொழியாகக் கருதப்படுவதற்கு பின்வரும் மொழிகளையும் குழு பரிந்துரைத்தது.
I. மராத்தி
II. பாலி
III. பிராகிருதம்
IV. அசாமி
V. பெங்காலி
செம்மொழியை வளர்க்க கல்வி அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சமஸ்கிருத மொழியை மேம்படுத்துவதற்காக 2020 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் மூன்று மத்திய பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன. பழந்தமிழ் நூல்களை மொழிபெயர்க்கவும், ஆய்வுகளை ஊக்குவிக்கவும், பல்கலைக்கழக மாணவர்களுக்கும், தமிழ் மொழி அறிஞர்களுக்கும் பாடத்திட்டங்கள் நடத்தவும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. செம்மொழிகளின் ஆய்வு மற்றும் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த, செம்மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா ஆகியவற்றில் படிப்பதற்கு சிறப்பு மையங்கள் மைசூருவில் உள்ள இந்திய மொழிகளின் மத்திய நிறுவன ஆதரவின் கீழ் நிறுவப்பட்டன. இந்த முயற்சிகளுக்கும் கூடுதலாக, செம்மொழிப் பிரிவில் சாதனைகளை அங்கீகரிப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் பல தேசிய, சர்வதேச விருதுகள் நிறுவப்பட்டுள்ளன. செம்மொழிகளுக்கான தேசிய விருதுகள், பல்கலைக்கழக இருக்கைகள், செம்மொழி மேம்பாட்டு மையங்கள் ஆகியவை கல்வி அமைச்சகத்தால் செம்மொழிகளுக்கு வழங்கப்படும் நன்மைகளில் அடங்கும்.
மொழிகளைச் செம்மொழியாகச் சேர்ப்பதன் மூலம், கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்புகள் உருவாகும். கூடுதலாக, இந்த மொழிகளின் பண்டைய நூல்களைப் பாதுகாத்தல், ஆவணப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்குதல் காப்பகம், மொழிபெயர்ப்பு, வெளியீடு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் வேலைகளை உருவாக்கும்.
செம்மொழிகளுக்கான மாநிலங்கள்:மகாராஷ்டிரா (மராத்தி), பீகார், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம் (பாலி, பிராகிருதம்), மேற்கு வங்கம் (பெங்காலி), அசாம் (அசாமி) ஆகியவை சம்பந்தப்பட்ட முதன்மை மாநிலங்கள். பரந்த கலாச்சார மற்றும் கல்விசார் தாக்கம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் நீட்டிக்கப்படும்.