பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஸ்ரீ குருநானக் தேவ்ஜியின் 550ஆவது பிறந்தநாளை, நாடு முழுவதும், உலகெங்கும் மிக பிரம்மாண்டமான அளவில் மாநில அரசுகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களின் ஒத்துழைப்புடன் கொண்டாடுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குருநானக் தேவ்ஜியின் அன்பு, அமைதி, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கான போதனைகள் என்றென்றும் பலன் தரக்கூடியதாகும்.
அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் பின்வருமாறு:
கர்தார்பூர் சாஹிப் தாழ்வாரத்தின் கட்டுமானம் மற்றும் மேம்பாட்டுக்கு ஒப்புதல்: பாகிஸ்தானில் உள்ள ரவி நதிக்கரையோரமாக உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப் கர்தார்பூருக்கு இந்தியாவிலிருந்து பக்தர்கள் சென்று வருவதற்கு வசதியாக கர்தார்பூர் தாழ்வாரம், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் தேரா பாபா நானக்-கிலிருந்து சர்வதேச எல்லை வரையும் மேம்படுத்தப்படவுள்ளது.
ஸ்ரீ குரு நானக் தேவ்ஜியின் வாழ்க்கையுடன் தொடர்புடைய வரலாற்று நகரமான சுல்தான்பூர் லோதியை மேம்படுத்தவும், சமயங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான மையத்தை ஏற்படுத்தவும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் ஸ்ரீ குருநானக் தேவ்ஜியின் போதனைகளைப் பரப்புவதற்கு அவரது பெயரில் இருக்கைகளை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குருநானக் தேவ்ஜியின் நினைவாக நாணயம் மற்றும் அஞ்சல் தலைகளை மத்திய அரசு வெளியிடவும் தீர்மானம்.
நாடு முழுவதும் சமய நிகழ்வுகள் நடத்தவும், ரயில்வே அமைச்சகம் ஸ்ரீ குருநானக் தேவ்ஜி தொடர்புடைய பல்வேறு புனித தலங்களுக்கு செல்லும் வகையில் சிறப்பு ரயிலை இயக்கும் ஏற்பாட்டுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.