பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகள் சுமார் 100 பேர் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்கள்.
குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடத்திய சமையல் எரிவாயு பஞ்சாயத்தில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த பெண் பயனாளிகள் புதுதில்லி வந்திருந்தனர். பிரதமர் இந்த பெண்கள் தங்களது அன்றாட வாழ்வின் பல்வேறு அம்சங்கள் குறித்து பேசுவதற்கு ஊக்கமளித்தார். அவர்களது பதில்களுக்குப் பின்னர் பிரதமர், சவுபாக்கியா திட்டத்தை பற்றிக் குறிப்பிட்டார். இந்தத் திட்டம் ஒவ்வொரு வீட்டுக்கும் மின்சார இணைப்பு வழங்குவதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்டது. பெண் குழந்தைகளுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தங்களது கிராமங்களில் தூய்மையை உறுதி செய்ய உழைக்குமாறு அவர்களைப் பிரதமர் கேட்டுக் கொண்டார். உஜ்வாலா திட்டம் அவர்களது குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தியதுபோல தூய்மையாக வைத்திருப்பது மொத்த கிராமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றார்.
உஜ்வாலா திட்டத்துக்காக பிரதமருக்கு பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்ட பயனாளிகளில் சிலர் தங்களது பகுதிகளில் மேம்பாட்டு சவால்கள் குறித்தும் பிரதமருடன் விவாதித்தனர்.
மத்திய பெட்ரோலியம், இயற்கை வாயுத் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இந்த நிகழ்ச்சியின் போது உடனிருந்தார்.