இந்தியாவின் இளைஞர்கள் புதிய மற்றும் பெரிய அளவில் ஏதாவது செய்ய விரும்புகிறார்கள்: ‘மன் கீ பாத்’-தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
August 29th, 11:30 am
எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். இன்று மேஜர் தியான்சந்த் அவர்களின் பிறந்தநாள் என்பது நம்மனைவருக்கும் தெரியும். நமது தேசம் அவருடைய நினைவைப் போற்றும் வகையிலே இந்த நாளை தேசிய விளையாட்டுக்கள் தினமாகக் கொண்டாடவும் செய்கிறது. என் மனதில் ஓர் எண்ணம்…. ஒரு வேளை மேஜர் தியான்சந்த் அவர்களின் ஆன்மா எங்கே இருந்தாலும், மிகவும் சந்தோஷத்தை அனுபவிக்கும் இல்லையா? ஏனென்றால் உலகெங்கிலும் ஹாக்கி விளையாட்டில் இந்தியாவின் முரசை தியான்சந்த் அவர்களின் ஹாக்கி தான் ஓங்கி ஒலிக்கச் செய்தது. நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட 41 ஆண்டுகள் கழித்து, பாரதநாட்டின் இளைஞர்கள், ஆடவர் மற்றும் பெண்கள், ஹாக்கியில் மீண்டும் ஒரு முறை உயிரூட்டியிருக்கின்றார்கள். எத்தனைப் பதக்கங்கள் கிடைத்தாலும், ஹாக்கியில் பதக்கம் கிடைக்காத வரையில் பாரத நாட்டின் எந்த ஒரு குடிமகனுக்கும் முழுமையான ஆனந்தம் கிடைக்காது.