குஜராத்தில் கோச்ராப் ஆசிரமத் தொடக்க விழா மற்றும் சபர்மதி ஆசிரமப் பெருந்திட்டத் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

March 12th, 10:45 am

பூஜ்ய பாபுவின் சபர்மதி ஆசிரமம் தொடர்ந்து இணையற்ற சக்தியை வெளிப்படுத்தி, ஒரு துடிப்பான மையமாக செயல்பட்டு வருகிறது. மற்ற பலரைப் போலவே, நாமும் அங்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும் போதெல்லாம், அண்ணலின் நீடித்த உத்வேகத்தை உணர்வோம். சபர்மதி ஆசிரமம், உண்மை, அகிம்சை, தேசத்தின் மீதான பக்தி, அண்ணலால் போற்றப்படும் ஏழைகளுக்கு சேவை செய்யும் உணர்வு ஆகியவற்றின் விழுமியங்களை இன்றும் உயர்த்திப் பிடித்து வருகிறது. சபர்மதி ஆசிரமத்தின் மறுமேம்பாடு மற்றும் விரிவாக்கத்திற்கு இன்று நான் அடிக்கல் நாட்டியிருப்பது உண்மையிலேயே புனிதமானது. மேலும், தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு அண்ணல் வசித்த கோச்ராப் ஆசிரமமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது; இன்று அதன் திறப்பு விழாவை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். கோச்ராப் ஆசிரமத்தில்தான் காந்திஜி முதன்முதலில் ராட்டை நூற்பதில் ஈடுபட்டு தச்சு வேலைகளைக் கற்றுக்கொண்டார். அங்கு இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்த பிறகு, காந்திஜி சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்றார். அதன் புனரமைப்புடன், காந்திஜியின் ஆரம்ப நாட்களின் நினைவுகள் கோச்ராப் ஆசிரமத்தில் சிறப்பாக பாதுகாக்கப்படும். நான் வணக்கத்துக்குரிய அண்ணலுக்கு என் வணக்கத்தைக் காணிக்கையாக்குகிறேன். இந்த முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் ஊக்கமளிக்கும் இடங்களை உருவாக்கியதற்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குஜராத் மாநிலம் சபர்மதியில் கோச்ராப் ஆசிரமத்தை பிரதமர் திறந்து வைத்தார்

March 12th, 10:17 am

சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை தந்த பிரதமர் திரு நரேந்திர மோடி, கோச்ராப் ஆசிரமத்தை திறந்து வைத்து, காந்தி ஆசிரம நினைவிடத்தின் பெருந்திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்திய பிரதமர், ஹ்ரிதய் குஞ்ச் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி மற்றும் கஸ்தூரிபாய் காந்தி இல்லத்தையும் பார்வையிட்டார். மேலும் கண்காட்சியை பார்வையிட்டு மரக்கன்று நட்டார்.