இன்று, உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்தியாவைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி.
October 27th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே வணக்கம். இன்றைய மனதின் குரலில் உங்கள் அனைவருக்கும் நல்வரவேற்பு. உங்கள் வாழ்க்கையின் மிகவும் நினைவில் கொள்ளத்தக்க கணம் என்ன என்று நீங்கள் என்னிடம் கேட்டீர்கள் என்றால், அப்படி ஏராளமாக இருக்கின்றன என்றாலும், இவை அனைத்திலும் கூட ஒரு குறிப்பிட்ட கணம் மிகவும் விசேஷமானது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதியன்று பகவான் பிர்ஸா முண்டாவின் பிறந்த நாளை ஒட்டி, அவர் பிறந்த இடமான ஜார்க்கண்டின் உலிஹாதூ கிராமத்திற்கு நான் சென்ற கணம் தான் அது. இந்தப் பயணம் எனக்குள்ளே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பவித்திரமான இந்த பூமியின் மண்ணை என் நெற்றியில் இட்டுக் கொள்ளும் பெரும்பேறு கிடைத்த, தேசத்தின் முதல் பிரதமர் என்ற சௌபாக்கியம் எனக்கு வாய்க்கப்பெற்றது. அந்தக் கணத்தில் சுதந்திரப் போராட்ட்த்தின் சக்தியை மட்டும் நான் உணரவில்லை, இந்த மண்ணின் சக்தியோடு என்னை நானே இணைத்துக் கொள்ளும் சந்தர்ப்பமும் எனக்கு வாய்த்தது. மேற்கொண்ட ஒரு உறுதிப்பாட்டை நிறைவேற்றும் வல்லமை இருந்தால், எப்படி அதனால் தேசத்தின் கோடிக்கணக்கான மக்களின் எதிர்காலத்தையே மாற்றியமைக்க முடியும் என்பதை நான் ஆழமாக உணர்ந்தேன்.