பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசின் தொலைநோக்குப் பார்வை குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று விரிவாக விளக்கம் அளித்தார். வீடு, மின்சாரம், கழிவறைகள், எரிவாயு, சாலைகள், மருத்துவமனை மற்றும் பள்ளி போன்ற அடிப்படைத் தேவைகள் இல்லாதது, பெண்களிடையே, குறிப்பாக ஏழைப் பெண்களிடையே மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். இன்று, சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டில் நாம் நுழையும் தருணத்தில், கடந்த 7 தசாப்தங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சியைக் காணும் போது, இதுபோன்ற அடிப்படை பிரச்சினைகள் பல தசாப்தங்களுக்கு முன்னரே எதிர் கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்ற உணர்வு மேலோங்குவதாக பிரதமர் குறிப்பிட்டார். உத்தரப் பிரதேசத்தின் மஹோபாவில் உஜ்வாலா 2.0 திட்டத்தை இன்று காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்த பிறகு அவர் உரையாற்றினார்.
புகை மற்றும் வெப்பத்தில் நமது அன்னையர் துயருற்றதைப் பார்த்து நமது தலைமுறையினர் வளர்ந்ததாக பிரதமர் கூறினார். அடிப்படை வசதிகளைப் பெறுவதற்கு ஓர் குடும்பமோ, சமூகமோ போராடி வரும் வேளையில் அவர்கள் எவ்வாறு பெரும் கனவைக் காண்பார்கள்? சமூகத்தின் கனவுகளை நனவாக்குவதற்கு அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். “தன்னம்பிக்கை இல்லாமல் ஒரு தேசம் எவ்வாறு தன்னிறைவு அடைய முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இல்லத்திலிருக்கும் பிரச்சினைகள் முதலில் தீர்க்கப்பட்டால் தான் நமது புதல்விகளால் வீடு மற்றும் சமையல் அறைகளை விட்டு வெளியேறி, தேச கட்டமைப்பில் விரிவானப் பங்களிப்பை வழங்க முடியும் என்று அவர் தெரிவித்தார். எனவே, கடந்த 6-7 ஆண்டுகளில் இதுபோன்ற ஒவ்வொரு தீர்வும் இயக்க கதியில் மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் கூறினார். பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் பட்டியலிட்டார்:
• தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் கோடிக்கணக்கான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.
• பெரும்பாலும் பெண்களின் பெயரில் இரண்டு கோடிக்கும் அதிகமான வீடுகள், ஏழைக் குடும்பங்களுக்காக அமைக்கப்படுகிறது.
• கிராமப்புற சாலைகள்.
• சௌபாக்கியா திட்டத்தின் கீழ் மூன்று கோடி குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
• ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 50 கோடி பேருக்கு ரூ. 5 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது.
• மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் கர்ப்பகாலத்தின் போது தடுப்பூசி மற்றும் ஊட்டச்சத்துக்காக வங்கிகளில் நேரடியாக பணப் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
• கொரோனா காலகட்டத்தில் பெண்களின் ஜன் தன் கணக்குகளில் ரூ. 30,000 கோடி செலுத்தப்பட்டது.
• ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் நமது சகோதரிகள் குழாய் மூலம் தண்ணீரை பெறுகிறார்கள்.
இது போன்ற திட்டங்கள் பெண்களின் வாழ்வில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பெண்களின் சுகாதாரம், வசதி மற்றும் அதிகாரமளித்தலுக்கு பிரதமரின் உஜ்வாலா திட்டம் பெரும் முக்கியத்துவம் அளித்துள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் முதல் கட்டத்தில், 8 கோடி ஏழைகள், பட்டியலினத்தவர், நலிவடைந்தோர், பிற்படுத்தப்பட்டோர்,பழங்குடியின குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டது. இந்த இலவச எரிவாயு இணைப்பின் பலன், கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் உணரப்பட்டதாக அவர் தெரிவித்தார். வர்த்தகம் முடங்கியபோது, இயக்கம் தடைப்பட்ட போது, பல மாதங்களுக்கு கோடிக்கணக்கான ஏழை குடும்பங்கள் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றன. “உஜ்வாலா திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்றால், இது போன்ற ஏழை சகோதரிகளின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்”, என்று பிரதமர் கூறினார்.