சன்சத் ஆதர்ஷ் கிராம திட்டம் தொடக்கத்தை ஒட்டி அதுகுறித்த தனது தொலைநோக்கு சிந்தனையை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.
‘நம்முடைய வளர்ச்சி மாடலானது சப்ளையை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது என்பதுதான் நமது மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக உள்ளது. லக்னோ, காந்தி நகர் அல்லது டெல்லியில் ஒரு திட்டம் தயாரிக்கப் படுகிறது. அதையே திணிப்பதற்கு முயற்சி செய்யப்படுகிறது. சப்ளை அடிப்படையில் இல்லாமல் தேவையை அடிப்படையாகக் கொண்டதாக ஆதர்ஷ் கிராம திட்டத்தின் மூலம் இதை மாற்றுவதற்கு நாம் விரும்புகிறோம். கிராமங்களிலேயே ஒரு உந்துதல் உருவாக்கப்பட வேண்டும்.
நமது மனதின் எண்ணத்தை நாம் மாற்ற வேண்டியுள்ளது. மக்களின் இதயங்களை நாம் ஒன்று சேர்க்க வேண்டும். சாதாரணமாக எம்.பி.க்கள் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டிருப்பார்கள். ஆனால் அதற்குப் பிறகு, அவர்கள் கிராமத்துக்கு வரும்போது, அரசியல் செயல்பாடுகள் ஏதும் இருக்காது. அது குடும்பம் போல இருக்கும். கிராமங்களின் மக்களுடன் அமர்ந்து முடிவுகள் எடுக்கப்படும். கிராமத்துக்கு அது புத்துயிரூட்டி, ஒன்று சேர்ப்பதாக அது அமையும்.’
முன்மாதிரியான இந்திய கிராமம் குறித்த மகாத்மா காந்தியின் ஒட்டுமொத்தமான தொலைநோக்கு சிந்தனையை, இப்போதுள்ள சூழ்நிலையில் செயல்படுத்தும் நோக்கத்துடன் 11 அக்டோபர் 2014ல் சன்சாத் ஆதர்ஷ் கிராம திட்டம் (SAGY) தொடங்கப்பட்டது. SAGY திட்டத்தின் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவரும் ஒரு கிராம பஞ்சாயத்தை தத்தெடுத்துக் கொண்டு, அடிப்படைக் கட்டமைப்புக்கு இணையாக சமூக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து முழுமையான முன்னேற்றத்துக்கு வழிநடத்திச் செல்ல வேண்டும். `ஆதர்ஷ் கிராமங்கள்' உள்ளூர் வளர்ச்சி மற்றும் நிர்வாகத்தை கற்பிக்கும் பள்ளிகளாக மாறி, மற்ற கிராம பஞ்சாயத்துகளை ஊக்குவிக்கும் வகையில் அமையும்.
கிராமத்தினரை ஈடுபடுத்தி, அறிவியல் உபகரணங்களை பயன்படுத்துவதன் மூலம், நாடாளுமன்ற உறுப்பினரின் தலைமையின் கீழ், ஒரு கிராம மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப் படுகிறது. அதன்பிறகு சம்பந்தப்பட்ட துறைகளால் விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு, மாநில அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். மாநில அளவிலான அதிகாரமளிக்கப்பட்ட கமிட்டி (SLEC) இதை ஆய்வு செய்து, மாற்றங்களுக்கு ஆலோசனை வழங்கி, நிதி ஆதாரங்கள் ஒதுக்குவதற்கு முன்னுரிமை அளிக்கும். இப்போதைய நிலவரப்படி, SAGY கிராம பஞ்சாயத்து திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக, இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் 21 திட்டங்களை திருத்தி அமைத்துள்ளன.
மாவட்ட அளவில், நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் மாதந்தோறும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும். திட்டங்களில் பங்கெடுத்துள்ள துறைகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் ஒவ்வொரு திட்டமும் ஆய்வு செய்யப்பட்டு, முன்னேற்றங்கள் மாநில அரசுக்கு தெரிவிக்கப்படும். 2016 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஒரு கிராம பஞ்சாயத்தில் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வார் என்றும், 2019க்குள் மேலும் இரண்டு அதன்பிறகு 2024க்குள் மேலும் ஐந்து பஞ்சாயத்துகளின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் எம்.பி.க்கள் 696 கிராம பஞ்சாயத்துகளை தத்தெடுத்துள்ளனர்.
உள்ளூர் அளவில் இத் திட்டம் அமல் செய்யப்படுவதை ஒருங்கிணைப்பதற்கு, போதிய அனுபவம் உள்ள மூத்தநிலை அதிகாரியை பொறுப்பு அதிகாரியாக ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் நியமித்துள்ளனர். இத் திட்டம் அமல் செய்யப்படுவதற்கு அவர்தான் முழு பொறுப்பாளராகவும், பதில்கூறும் நபராகவும் இருப்பார். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம், இந்தியா முழுக்க 9 பிராந்திய மையங்களில் 653 பொறுப்பு அதிகாரிகளுக்கு பயிற்சித் திட்டங்களை நடத்தியுள்ளது. ஊரக வளர்ச்சித் துறை போபாலில் 23-24 செப்டம்பர் 2015-ல் தேசிய அளவிலான பயிலரங்கத்தை நடத்தியது. அதற்கு எம்.பி.க்கள், மாநில அரசுகள், மாவட்ட ஆட்சியர்கள், அனைத்து மாநிலங்களில் இருந்தும் கிராம தலைவர்கள் அழைக்கப் பட்டிருந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல நடைமுறைகள், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தின் தேசிய அளவிலான கமிட்டி மூலம், விரிவான காண்காட்சி மூலமாக விளக்கப்பட்டன. SAGY கிராம பஞ்சாயத்துகளில் அந்த நல்ல நடைமுறைகளைப் பின்பற்றுவதற்காக அவ்வாறு விளக்கப்பட்டது. SAGY கிராம பஞ்சாயத்துகளின் முன்னேற்றத்தை கண்காணிப்பதற்கு `பஞ்சாயத்து தர்பன்' என்ற 35 அடையாளங்களையும் அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
வெற்றி பெற்ற சில தகவல்கள் :
ஜம்மு & காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் திரெஹ்கம் ஒன்றியம் லேடர்வன் கிராமத்தில், மக்களின் பெரும்பான்மையான பணி விவசாயம். அறிவியல் சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்க 379 விவசாயிகளின் செல்போன் எண்கள் கிரிஷி விக்யான் கேந்திராவுடன் (KVK) இணைக்கப்பட்டன. வானிலை முன்னறிவிப்புகள் பற்றியும், பயிர் வளர்ச்சியின் போது நெருக்கடியான கட்டங்களில் குறிப்பிட்ட பயிர்களுக்கான சாகுபடி உத்திகள் பற்றிய பரிந்துரைகளையும் KVK எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்புகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் திரு முஸாபர் ஹுசேன் பெய்க் வழிகாட்டுதலின் கீழ் இது செய்யப்படுகிறது. இதன் விளைவாக விவசாயிகள் வழக்கமான விவசாய-ஆலோசனைகளை செல்போன்கள் மூலமாகப் பெறுகின்றனர். அறிவியல்பூர்வமான விதைப்பு நடைமுறைகள், மண் பரிசோதனை, பயிர் பாதுகாப்பு, கிராம சூழ்நிலைக்கு ஏற்ற நடைமுறைகள், அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தை தகவல்கள் உள்பட முக்கியமான தகவல்கள் இதில் அனுப்பப்படும். பயிர் சாகுபடி செய்வதிலும், தங்களின் உற்பத்திப் பொருளை விற்பதிலும் தகவல்களை அறிந்து கொண்டு முடிவு எடுப்பதற்கு மக்களுக்கு இது உதவுகிறது.
தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் மறவமங்கலம் கிராமத்தை நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை) டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் தேர்வு செய்துள்ளார். வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள பகுதிகளையும், ஊரக வாழ்வியல் தேவைகளையும் மேம்படுத்தும் அம்சங்களையும் அவர் அடையாளம் கண்டார். கயிறு, தோல் மற்றும் தேங்காய் சார்ந்த தொழில்களில் அந்தப் பகுதி மக்களுக்கு பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு எம்.பி. ஏற்பாடு செய்தார். இந்திய கயிறு வாரியம், இந்திய தேங்காய் வளர்ச்சி வாரியம் மற்றும் மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றின் ஆதரவுடன் பயிற்சி அளிப்பதற்கு சிறப்பு பயிற்சியாளர்களை அவர் வரவழைத்தார்.
மக்களை வெற்றிகரமான தொழில்முனைவோராக ஆக்குவதற்கு சொல்லித் தர வேண்டும் என்ற நோக்கத்துடன் இரண்டு மாத கால கயிறு பயிற்சித் திட்டத்தை தொடங்க பயிற்சி நிலையங்களுடன் அவர் ஒருங்கிணைந்து செயல்பட்டார். கயிறு பயிற்சிக்கு 120 பெண்கள், தோல் பயிற்சிக்கு 112 பேர், தேங்காய் பயிற்சிக்கு 27 ஆண்கள் பட்டியலிடப்பட்டனர். பயிற்சிகள் முடிந்த பிறகு, வெற்றிகரமாக பயிற்சி முடிப்பவர்கள் தங்களுடைய சமூக நிறுவனத்தைத் தொடங்கவும், அவர்களுடைய வாழ்வியல் தேவைகளுக்கு ஆதரவு அளிக்கவும், மாவட்ட நிர்வாகம் மற்றும் பயிற்சி அளிக்கும் பங்கு நிறுவனங்களுடன் இணைந்து அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
ஜார்க்கண்ட்டில் கிழக்கு சிங்பூமில் எளிதில் அணுக முடியாத கிராமங்களில் வளர் இளம்பருவ பெண்களின் ஆரோக்கியம் மற்றும் தூய்மை தொடர்பாக மிகக் குறைந்த அளவுக்குதான் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் திரு பித்யுத் பரண் மஹதோ பங்குர்டா கிராம பஞ்சாயத்தை தத்து எடுத்ததின் மூலம் தெரிந்து கொண்டார். ரத்த சோகை மற்றும் வேறு குறைபாடுகள் அதிகமாக இருந்தன. குறிப்பாக பெண்கள் மற்றும் வளர் இளம்பருவ பெண்களிடம் இந்தக் குறைபாடுகள் இருந்தன. கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயாவில் சுகாதார முகாம்கள் நடத்தப்பட்டன. அவற்றில் 188க்கும் மேற்பட்ட வளர் இளம்பெண்களுக்கு மேலோட்டமான சோதனைகள் செய்யப்பட்டன. அதன்விளைவாக பெண்களின் நோய்கள், சிறுநீர்ப் பாதை தொற்று, தோல் நோய்கள் ஆகியவற்றால் பலரும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுவரை சமூக-கலாச்சார தடைகளால் இவையெல்லாம் மறைக்கப்பட்டு வந்திருந்தன. தற்போது கண்டுபிடிக்கப்பட்டன.
தூய்மை இல்லாத வாழ்க்கை முறை, அசுத்தமான சுற்றுப்புறங்கள் காரணமாகத்தான் பெரும்பாலான நோய்கள் ஏற்பட்டன என்பதும் கண்டறியப்பட்டது. தனிப்பட்ட தூய்மை குறித்து வளர் இளம்பெண்கள் மற்றும் பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. கிராமங்களில் தொடர்ச்சியான தலையீடுகள் மூலம் அவ்வப்போது முயற்சிகள் எடுக்கப்படும்.