உயிரி எரிபொருள் துறையில் சமீபத்திய வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கவும், அதிக முதலீடுகளை ஈர்க்கவும், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, மாற்றியமைக்கப்பட்ட பிரதமரின் ஜி-வன் யோஜனா திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
மாற்றியமைக்கப்பட்ட திட்டம் திட்டத்தை செயல்படுத்துவதற்கான காலக்கெடுவை ஐந்து ஆண்டுகளுக்கு அதாவது 2028-29 வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. லிக்னோசெல்லுலோசிக் மூலப்பொருட்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மேம்பட்ட உயிரி எரிபொருள்களை உள்ளடக்கியது இதுவாகும். அதாவது விவசாய, வனவியல் எச்சங்கள், தொழில்துறை கழிவுகள், தொகுப்பு வாயு, ஆல்கா போன்றவற்றின் மூலமான திட்டமாகும். "போல்ட் ஆன்" ஆலைகள், "பிரவுன்ஃபீல்ட் திட்டங்கள்" இப்போது தங்கள் அனுபவத்தைப் பயன்படுத்தவும் அவற்றின் நம்பகத்தன்மையை மேம்படுத்தவும் தகுதி பெறும்.
பல்வேறு தொழில்நுட்பங்கள், பன்முக மூலப்பொருட்களை ஊக்குவிப்பதற்காக, இத்துறையில் புதிய தொழில்நுட்பங்கள், புதுமைகளுடன் கூடிய திட்ட முன்மொழிவுகளுக்கு இப்போது முன்னுரிமை அளிக்கப்படும்.
விவசாயிகளுக்கு அவர்களின் விவசாய எச்சங்களுக்கு லாபகரமான வருமானத்தை வழங்குவது, சுற்றுச்சூழல் மாசுபாட்டை நிவர்த்தி செய்வது, உள்ளூர் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தன்னம்பிக்கைக்கு பங்களிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மேம்பட்ட உயிரி எரிபொருள் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை ஆதரிக்கிறது, மேக் இன் இந்தியா இயக்கத்தை ஊக்குவிக்கிறது. இது 2070-க்குள் நிகர பூஜ்ஜிய பசுமை இல்ல வாயு உமிழ்வுக்கான இந்தியாவின் லட்சிய இலக்கை அடைய இது உதவும்.
பிரதமரின் ஜி-வன் யோஜனா மூலம் மேம்பட்ட உயிரி எரிபொருளை ஊக்குவிப்பதில் மத்திய அரசின், நீடித்த, தற்சார்பு எரிசக்தித் துறைக்கான அர்ப்பணிப்பு பிரதிபலிக்கிறது.
பின்னணி:
எத்தனால் கலந்த பெட்ரோல் (EBP) திட்டத்தின் கீழ் பெட்ரோலில் எத்தனால் கலப்பதை அரசு ஊக்குவித்து வருகிறது. இதில் பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMCs) எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனை செய்கின்றன. இபிபி திட்டத்தின் கீழ், எத்தனால் வழங்கல் ஆண்டில் (ESY) 2013-14-ல் 38 கோடி லிட்டராக இருந்த பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு 2022-23-ல் 500 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது. அதனுடன் கலப்பு சதவீதம் 1.53% முதல் 12.06% வரை அதிகரித்துள்ளது. ஜூலை 2024 மாதத்தில் கலப்பு சதவீதம் 15.83%-ஐ எட்டியுள்ளது மற்றும் நடப்பு இஎஸ்ஒய் 2023-24-ல் ஒட்டுமொத்த கலப்பு சதவீதம் 13%-ஐ தாண்டியுள்ளது.
2025-26-ம் ஆண்டின் இறுதிக்குள் 20% கலப்பு இலக்கை அடைய ஓஎம்சி-க்கள் தயாராக உள்ளன. 20% கலவையை அடைய 2025-26 ஆம் ஆண்டில் 1100 கோடி லிட்டர் எத்தனால் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக 1750 கோடி லிட்டர் எத்தனால் வடிகட்டுதல் திறன் நிறுவப்பட வேண்டும்.
எத்தனால் கலப்பு இலக்குகளை அடைய, 2-வது தலைமுறை (2ஜி) எத்தனால் (மேம்பட்ட உயிரி எரிபொருட்கள்) போன்ற மாற்று ஆதாரங்களிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. செல்லுலோசிக், லிக்னோசெல்லுலோசிக் உள்ளடக்கங்களைக் கொண்ட உபரி உயிரி எரிபொருள் / விவசாய கழிவுகள், தொழில்துறை கழிவுகள் போன்றவற்றை மேம்பட்ட உயிரி எரிபொருள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எத்தனாலாக மாற்றலாம்.
நாட்டில் 2ஜி எத்தனால் திறனை ஊக்குவிப்பதற்கும், இந்தத் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், 2ஜி பயோ-எத்தனால் திட்டங்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக "பிரதமரின் ஜி-வன் (ஜெய்வ் இந்தான்- வடவரன் அனுகூல் ஃபசல் அவாஷேஷ் நிவாரணன்) திட்டம்" 07.03.2019 அன்று அறிவிக்கை செய்யப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், ஹரியானாவின் பானிபட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவிய முதல் 2ஜி எத்தனால் திட்டம் 10 ஆகஸ்ட் 2022 அன்று பிரதமரால் தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. பிபிசிஎல், ஹெச்பிசிஎல் மற்றும் என்ஆர்எல் ஆகியவை முறையே பார்கர் (ஒடிசா), பதிண்டா (பஞ்சாப்), நுமாலிகர் (அசாம்) ஆகிய இடங்களில் அமைக்கும் மற்ற 2ஜி வணிகத் திட்டங்களும் நிறைவடையும் தருவாயில் உள்ளன.