மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்திறன் மிக்க ஆளுமை மற்றும் உரிய நேரத்தில் அமலாக்கத்திற்கான தகவல் தொடர்பு தொழில்நுட்ப அடிப்படையிலான பன்முக தளமான பிரகதியின் 44-வது கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தலைமை வகித்தார். அவரது மூன்றாவது பதவிக்காலத்தில் இது முதல் கூட்டமாகும்.
இந்தக் கூட்டத்தில், சாலை இணைப்பு தொடர்பான இரண்டு திட்டங்கள், இரண்டு ரயில் திட்டங்கள் மற்றும் நிலக்கரி, மின்சாரம் மற்றும் நீர்வளத் துறைகளில் தலா ஒரு திட்டம் உட்பட ஏழு முக்கிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், ஒடிசா, கோவா, கர்நாடகா, சத்தீஸ்கர் மற்றும் தில்லி ஆகிய 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த இந்தத் திட்டங்களின் மதிப்பு ரூ.76,500 கோடிக்கும் அதிகமாகும்.
திட்டங்களில் தாமதம் ஏற்படுவது செலவை அதிகரிப்பது மட்டுமின்றி, திட்டத்தின் பலன்களை பொதுமக்கள் இழக்க நேரிடும் என்ற உண்மையை மத்திய அல்லது மாநில அளவில் உள்ள ஒவ்வொரு அதிகாரியும் உணர வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
தாயின் பெயரில் ஒரு மரம் என்ற திட்டங்களை மேம்படுத்தும் போது சுற்றுச்சூழலையும் பாதுகாக்க உதவும் என்று பிரதமர் கூறினார்.
இந்தக் கலந்துரையாடலின் போது, அம்ருத் 2.0 திட்டம் மற்றும் ஜல் ஜீவன் இயக்கம் தொடர்பான பொதுமக்கள் குறைகள் குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார். இந்தத் திட்டங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும். தண்ணீர் என்பது மனிதனின் அடிப்படை தேவை என்றும், மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் குறைகளை தரமான முறையில் தீர்ப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். ஜல் ஜீவன் திட்டங்களின் வெற்றிக்கு போதுமான செயல்பாடு மற்றும் பராமரிப்பு அமைப்பு மிகவும் முக்கியமானது என்று கூறிய பிரதமர், சாத்தியமான இடங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஈடுபடுத்தவும், இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளில் இளைஞர்களின் திறனை மேம்படுத்தவும் ஆலோசனை தெரிவித்தார். மாவட்ட அளவில் நீர்வள ஆய்வு நடத்துவதை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், நீராதாரங்களின் நிலைத்தன்மையை வலியுறுத்தினார்.
அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தனிப்பட்ட முறையில் கண்காணிக்குமாறு தலைமைச் செயலாளர்களுக்கு அறிவுறுத்திய பிரதமர், நகரங்களின் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மற்றும் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு மாநில அரசுகள், திட்டங்கள் வகுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். நகரங்களுக்கான குடிநீர் திட்டங்களை உருவாக்கும் போது, புறநகர் பகுதிகளையும் மனதில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார், ஏனெனில், காலப்போக்கில் இந்த பகுதிகளும் நகர எல்லைக்குள் இணைக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டார். நாட்டில் விரைவான நகரமயமாக்கலைக் கருத்தில் கொண்டு, நகர்ப்புற நிர்வாகம், விரிவான நகர்ப்புற திட்டமிடல், நகர்ப்புற போக்குவரத்து திட்டமிடல் மற்றும் நகராட்சி நிதி ஆகியவற்றில் சீர்திருத்தங்கள், காலத்தின் முக்கியமான தேவைகளாகும் என்று கூறினார். நகரங்களின் வளர்ந்து வரும் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய பிரதமரின் மேற்கூரை சூரிய மின் சக்தித் திட்டம் போன்ற முன்முயற்சிகளின் பலனை ஒருவர் பெற வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். நகரமயமாதல் மற்றும் குடிநீர் தொடர்பான பல அம்சங்கள் தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டதையும், அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் தலைமைச் செயலாளர்களால் தாங்களே ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதையும் பிரதமர் நினைவுகூர்ந்தார்.
அமிர்த நீர்நிலை இயக்கத் திட்டத்தில் தொடர்ந்து பணியாற்றுமாறு மத்திய அரசின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் செயலாளர்களை பிரதமர் கேட்டுக் கொண்டார். அமிர்த நீர்நிலை நீர்ப்பிடிப்புப் பகுதியை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும், இந்த நீர்நிலைகளை தூர்வாரும் பணியை கிராம குழுவின் ஈடுபாட்டுடன் தேவைக்கேற்ப மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்த 44-வது பிரகதி கூட்டத்தில், ரூ.18.12 லட்சம் கோடி மதிப்பிலான 355 திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.