தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அவர்களே, நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்களே, நீதிபதி சூர்ய காந்த் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது நண்பர் திரு. அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களே, அட்டர்னி ஜெனரல் திரு. வெங்கடரமணி அவர்களே, பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா அவர்களே, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் திரு. கபில் சிபல் அவர்களே, உச்சநீதிமன்ற நீதிபதிகளே, முன்னாள் தலைமை நீதிபதிகளே, இதர சிறப்பு விருந்தினர்களே, தாய்மார்களே, அன்பர்களே!
உங்களுக்கும், அனைத்து குடிமக்களுக்கும் அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு வாழ்த்துகள். பாரதத்தின் அரசியலமைப்புச் சட்டத்தின் 75-வது ஆண்டு நிறைவு என்பது ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமிதம் அளிக்கும் விஷயமாகும். இன்று, பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் அரசியல் நிர்ணய சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நான் தாழ்மையுடன் மரியாதை செலுத்துகிறேன்.
நண்பர்களே,
இந்த மகத்துவம் வாய்ந்த ஜனநாயகத் திருவிழாவை நாம் கொண்டாடும் வேளையில், இன்று, மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் நினைவு தினமும் ஆகும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்தத் தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன், இந்தியாவின் பாதுகாப்புக்கு சவால் விடும் எந்தவொரு பயங்கரவாத அமைப்புக்கும் தீர்க்கமாக பதிலளிப்பதற்கான தேசத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
நண்பர்களே,
அரசியல் நிர்ணய சபையில் நடந்த விரிவான பேச்சு வார்த்தைகளின் போது பாரதத்தின் ஜனநாயக எதிர்காலம் குறித்து தீவிர விவாதங்கள் நடந்தன. அந்த விவாதங்களை நீங்கள் அனைவரும் நன்கு அறிந்திருப்பீர்கள். அப்போது, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், "அரசியலமைப்பு என்பது வெறும் வழக்கறிஞர்களின் ஆவணம் அல்ல... அதன் ஆன்மா எப்போதும் யுகத்தின் உணர்வாக இருக்கும்" என்று குறிப்பிட்டார். பாபாசாகேப் குறிப்பிடும் ஆன்மா மிக முக்கியமானது. மாறிவரும் காலங்கள் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நமது அரசியலமைப்பின் விதிகள் அதை விளக்க அனுமதிக்கின்றன. பாரதத்தின் விருப்பங்களும் கனவுகளும் காலப்போக்கில் புதிய உச்சங்களை எட்டும் என்பதையும் சுதந்திர பாரதம் மற்றும் பாரத குடிமக்களின் தேவைகளும் சவால்களும் காலப்போக்கில் உருவாகும் என்பதையும் நமது அரசியலமைப்பின் வடிவமைப்பாளர்கள் அங்கீகரித்தனர்.
நண்பர்களே,
நமது அரசியலமைப்பு நமது நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் வழிகாட்டியாக செயல்படுகிறது. கடந்த 75 ஆண்டுகளில், நாடு எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும், நமது அரசியலமைப்பு பொருத்தமான தீர்வுகளை வழங்கியது. நெருக்கடி நிலையின் போதும், ஜனநாயகத்திற்கு குறிப்பிடத்தக்க சவாலாக இருந்த காலகட்டத்திலும், நமது அரசியலமைப்பு வலுவாக உருவெடுத்தது. நமது அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் ஒவ்வொரு தேவைக்கும், ஒவ்வொரு எதிர்பார்ப்புக்கும் ஏற்ப செயல்பட்டுள்ளது. அரசியலமைப்பின் இந்த வலிமை, இன்று பாபாசாகேப்பின் அரசியலமைப்புச் சட்டத்தை ஜம்மு கஷ்மீரிலும் முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்திருக்கிறது. முதன்முறையாக அரசியலமைப்பு தினம் அங்கு கொண்டாடப்படுகிறது.
நண்பர்களே,
பாரதத்தின் முன்னோக்கிய பாதை என்பது மகத்தான கனவுகள் மற்றும் தீர்மானங்களை நிறைவேற்றுவதாகும். இன்று, ஒவ்வொரு குடிமகனும் ஒரே நோக்கத்தால் ஒன்றுபட்டுள்ளனர், அதுதான் 'வளர்ந்த இந்தியாவின்’ உருவாக்கம். 'வளர்ந்த இந்தியா' என்பது, ஒவ்வொரு குடிமகனும் தரமான வாழ்க்கை மற்றும் கண்ணியமான வாழ்க்கையை அனுபவிக்கும் நாடு என்று பொருள்படும். இது சமூக நீதிக்கான ஒரு முக்கிய அம்சமாகவும் அரசியலமைப்பின் முக்கிய உணர்வாகவும் உள்ளது. எனவே, சமீபத்திய ஆண்டுகளில் பொருளாதார மற்றும் சமூக சமத்துவத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மிக்க நன்றி.