Crossing the milestone of 140 crore vaccine doses is every Indian’s achievement: PM
With self-awareness & self-discipline, we can guard ourselves from new corona variant: PM Modi
Mann Ki Baat: PM Modi pays tribute to Gen Bipin Rawat, his wife, Gp. Capt. Varun Singh & others who lost their lives in helicopter crash
Books not only impart knowledge but also enhance personality: PM Modi
World’s interest to know about Indian culture is growing: PM Modi
Everyone has an important role towards ‘Swachhata’, says PM Modi
Think big, dream big & work hard to make them come true: PM Modi

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  இந்த நேரத்தில் நீங்கள் 2021ஆம் ஆண்டுக்கான விடையளிப்பு, 2022ஆம் ஆண்டுக்கான வரவேற்பு ஆகியவற்றுக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டிருப்பீர்கள்.  புத்தாண்டு தொடர்பாக ஒவ்வொருவரும், ஒவ்வொரு அமைப்பும், வரவிருக்கும் ஆண்டிலே சிலவற்றைச் செய்யவும், மேலும் சிறப்பாகச் செயலாற்றவும், ஆக்கம்  புரியவும் தீர்மானம் மேற்கொள்வது வழக்கம்.  கடந்த 7 ஆண்டுகளாக நமது மனதின் குரலும் தனிநபரின், சமூகத்தின், தேசத்தின் உச்சங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி, மேலும் சிறப்பாகச் செயலாற்றியும், மேலும் சிறப்பாகக், கருத்தூக்கம் அளித்தும் வந்திருக்கிறது.  இந்த ஏழாண்டுகளில், மனதின் குரலில், அரசாங்கத்தின் சாதனைகள் குறித்தும் பேசியிருக்க முடியும். அது உங்களுக்கும் பிடித்திருக்கும், நீங்களும் பாராட்டியிருப்பீர்கள், ஆனால், என்னுடைய பல பத்தாண்டுக்கால அனுபவம் என்னவென்றால், ஊடகங்களின் ஒளிர்விளக்குகளைத் தாண்டி, செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளுக்கு அப்பால், கோடானுகோடிப் பேர்கள் இருக்கிறார்களே, நிறைய நல்லனவற்றைச் செய்கின்றார்களே, அவர்கள் தேசத்தின் பிரகாசமான நாளைக்காக, தங்களுடைய இன்றைய பொழுதை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இவர்கள் தேசத்தின் வருங்காலச் சந்ததியினருக்காகத் தங்களுடைய முயற்சிகளை முழுமூச்சோடு ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  இப்படிப்பட்டவர்களின் விஷயங்கள், மிகவும் அமைதியைத் தருகிறது, ஆழமான உத்வேகத்தை அளிக்கிறது. என்னைப் பொறுத்த மட்டிலே, மனதின் குரலானது எப்போதுமே இப்படிப்பட்டவர்களின் முயற்சிகளால் நிரம்பிய, நன்கு அலங்கரிக்கப்பட்ட, பூத்துக் குலுங்கும் அழகானதொரு பூங்காவாகவே இருந்திருக்கிறது;  மேலும் மனதின் குரலில் மாதந்தோறும் என்னுடைய முயற்சி என்னவாக இருந்து வந்துள்ளது என்றால், இந்த அழகிய பூங்காவின் எந்த இதழை உங்களுக்காகக் கொண்டு வருவது என்பது தான். பல ரத்தினங்கள் நிறை நமது பூமியின் புண்ணிய செயல்களின் இடையறாத பிரவாஹம் தொடர்ந்து பெருகியோடிக் கொண்டே இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.  இன்று தேசம் அமிர்த மஹோத்சவத்தைக் கொண்டாடி வருகின்ற வேளையில், இந்த மக்களின்சக்தி, ஒவ்வொரு மனிதனின் சக்தி, இதைப் பற்றி விவரித்தல், அவருடைய முயல்வு, அவருடைய உழைப்பு ஆகியன, பாரதத்தின் மற்றும் மனித சமூகத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்கு ஒருவகையில் உத்திரவாதத்தை அளிக்கின்றது.  

 

நண்பர்களே, இந்த மக்கள் சக்தியின் வலிமை காரணமாகத் தான், அனைவரின் முயற்சிகளால் தான், பாரதம் 100 ஆண்டுகளிலே வந்த மிகப்பெரிய பெருந்தொற்றோடு போராட முடிந்திருக்கிறது. நாம் ஒவ்வொரு கடினமான வேளையிலும் ஒருவரோடு ஒருவர், ஒரு குடும்பத்தைப் போலத் துணை நின்றோம். நமது பகுதி அல்லது நகரத்தில் யாருக்காவது உதவிக்கரம் நீட்ட வேண்டுமென்றால், அவரவர் தங்களால் முடிந்த அளவைக் காட்டிலும் அதிகமாகவே உதவ முயன்றார்கள். இன்று உலகத்தில் தடுப்பூசி போடப்படும் புள்ளிவிவரங்கள் விஷயத்தில், பாரத நாட்டை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, தேசம் இதுவரை செய்யப்படாத எத்தகையதொரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறது, எத்தனை பெரிய இலக்கை எட்டி இருக்கிறது என்பது புலனாகும். தடுப்பூசியின் 140 கோடி தவணைகள் என்ற கட்டத்தைத் தாண்டுதல் என்ற சாதனை ஒவ்வொரு பாரதவாசிக்கும் சொந்தமாகும்.  இது ஒவ்வொரு பாரதவாசிக்கும் அமைப்பின் மீது இருக்கும் நம்பிக்கையைச் சுட்டுகிறது, விஞ்ஞானிகளின் மீது உள்ள விசுவாசத்தைத் தெரிவிக்கிறது, அதே வேளையில், சமூகத்தின் பொருட்டு தங்கள் கடமைகளை ஆற்றி வரும் நமது பாரத நாட்டவரின் மனவுறுதிப்பாட்டிற்கு சான்றும் பகர்கிறது.  ஆனால் நண்பர்களே, நாம் இப்போதும் கவனமாக இருக்க வேண்டும்; ஏனென்றால் கொரோனாவின் புதிய ஒரு மாற்றுரு வந்து விட்டது.  கடந்த ஈராண்டுகளாக நமது அனுபவம் என்னவாக இருந்தது என்றால், இந்த உலகளாவியப் பெருந்தொற்றை முறியடிக்க, ஒவ்வொரு குடிமகனும் தங்களுடைய பங்களிப்பை அளித்தார்கள்.  இப்போது வந்திருக்கும் புதிய ஓமிக்ரான் மாற்றுரு மீதான ஆய்வை நமது விஞ்ஞானிகள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் புதிய தரவுகள் அவர்களுக்குக் கிடைத்த வண்ணம் இருக்கின்றது, அவர்கள் அளிக்கும் ஆலோசனைகளின்படி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நாம் ஒவ்வொருவரும் விழிப்போடு, ஒழுங்குமுறையோடு செயல்படுவது, கொரோனாவின் இந்த மாற்றுருவுக்கு எதிராக ஒருங்கிணைக்கப்படும் தேசத்தின் மிகப்பெரிய சக்தியாகும். நம்முடைய சமூகசக்தியால்  மட்டுமே கொரோனாவை முறியடிக்க முடியும். இந்தக் கடமையுணர்வோடு நாம் 2022ஆம் ஆண்டிற்குள் நுழைய வேண்டும்.

 

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, மஹாபாரத யுத்தம் நடக்கும் வேளையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனைப் பார்த்துக் கூறினார் – ‘नभः स्पृशं दीप्तम्’, நப: ஸ்ப்ருஷம் தீப்தம், அதாவது பெருமிதத்தோடு விண்ணைத் தொட வேண்டும் என்பதே இதன் பொருள்.  இது பாரத நாட்டு விமானப் படையின் ஆதர்ச வாக்கியமும் கூட. பாரத அன்னையின் சேவையில் ஈடுபட்டுவரும் பலரின் வாழ்க்கை, வானத்தின் இந்த உச்சங்களை தினமும் பெருமிதம் பொங்கத் தொட்டு வருகின்றது, இது நமக்கு நிறைய கற்பித்தல்களை அளிக்கின்றது. இப்படிப்பட்டதொரு வாழ்க்கையை வாழ்ந்தவர் க்ரூப் கேப்டன் வருண் சிங் அவர்கள்.  வருண் சிங், இந்த மாதம் தமிழ்நாட்டில் விபத்துக்குள்ளான அந்த ஹெலிகாப்டரை இயக்கியவர். இந்த விபத்தில் நாம் நமது தேசத்தின் இராணுவ முப்படைகளின் முதல் தலைவரான ஜெனரல் பிபின் ராவத், இன்னும் பல வீரர்களை இழந்திருக்கிறோம்.  பிபின் ராவத் அவர்களின் மனைவியும் இறந்திருக்கிறார். வருண் சிங்கும் கூட, மரணத்தோடு பல நாட்கள் வரை சாகஸம் நிறைந்த யுத்தத்தை நிகழ்த்தினார், ஆனால் அவரும் நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்து சென்றார். வருண் மருத்துவமனையில் இருந்த வேளையில், நான் சமூக ஊடகத்தில் பார்த்த சில கருத்துக்கள், என் இதயத்தைத் தொட்டன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் அவருக்கு ஷௌர்ய சக்கரம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.  இந்த கௌரவம் அளிக்கப்பட்ட பிறகு தனது பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியருக்கு அவர் ஒரு கடிதம் எழுதினார். வெற்றியின் உச்சிக்கே சென்ற பிறகும் கூட, அவர் வேர்களுக்கு நீர் வார்க்க மறக்கவில்லை என்பது தான் இந்தக் கடிதத்தைப் படித்த பிறகு என் மனதிலே எழுந்த எண்ணம்.  மேலும், கொண்டாட்டங்களில் ஈடுபட அவரிடத்திலே நேரம் இருந்தாலும், அவருக்கு வருங்காலத் தலைமுறையினர் மீது அக்கறை இருந்தது. தனது கடிதத்திலே வருண் சிங் அவர்கள் தனது பராக்கிரமம் பற்றி விரித்துரைக்காமல், தனது தோல்விகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.  இந்தக் கடிதத்தில் ஓரிடத்திலே அவர் எழுதியிருந்தார் – ”சராசரியாக இருப்பதில் ஒன்றும் பாதகமில்லை.  அனைவருமே பள்ளியில் ஆகச் சிறந்தவர்களாக, 90 மதிப்பெண் என்ற அளவுக்கு மதிப்பெண்களைப் பெற முடியாமல் இருக்கலாம்.  அப்படி மதிப்பெண்கள் பெற்றால், அது ஒரு அபாரமான சாதனை, பாராட்டப்பட வேண்டியது.  ஆனால் பெறவில்லை என்றால், நீங்கள் சராசரியாக இருக்க வேண்டியவர் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். பள்ளியில் நீங்கள் சராசரியானவராக இருக்கலாம், ஆனால் வாழ்க்கையில் வரவிருப்பவைகளுக்கு இது ஒரு அளவுகோல் அல்ல. உங்கள் இதயத்தின் குரலுக்குச் செவி சாயுங்கள்; அது கலை, இசை, வரைகலை வடிவமைப்பு, இலக்கியம் என எதுவாகவும் இருக்கலாம்.  எதிலே நீங்கள் பணியாற்றுகிறீர்களோ, அதிலே அர்ப்பணிப்போடு இருங்கள், மிகச் சிறப்பாகச் செயல்படுங்கள்.  உறங்கச் செல்லும் முன், நான் மேலும் சிறப்பாக முயன்றிருக்கலாம் என்ற எண்ணத்தோடு உறங்கச் செல்லாதீர்கள்”.

 

    நண்பர்களே, சராசரியை விட மேலெழும்பி அசாதாரணமாக ஆக அவர் அளித்த மந்திரமும் கூட மிகவும் மகத்துவம் நிறைந்தது. இந்தக் கடிதத்திலே வருண் சிங் மேலும் எழுதுகிறார் – ”நம்பிக்கையை இழக்காதீர்கள். நீங்கள் ஆக விரும்பும் துறையில் உங்களால் சிறப்பாக ஆக முடியாது என்று எப்போதும் கருதாதீர்கள். அது சுலபமாகக் கைகூடாது, இதற்கு காலம் பிடிக்கும்,  சௌகரியங்களைத் தியாகம் செய்ய வேண்டியிருக்கலாம். நான் சராசரியாகவே இருந்தேன், ஆனால் இன்று நான் அடைவதற்குக் கடினமான மைல் கற்களை என் பணிவாழ்க்கையிலே அடைந்திருக்கிறேன். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அடையக் கூடியவற்றை, 12ஆம் வகுப்பு மதிப்பெண்களே தீர்மானம் செய்கின்றன என்று கருதாதீர்கள். உங்களின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள், இலக்கை நோக்கி உழையுங்கள்”.

 

தன்னால் ஒரு மாணவனுக்காவது உத்வேகம் அளிக்க முடிந்தால், அதுவே மிகப்பெரிய விஷயமாகும் என்று வருண் எழுதியிருக்கிறார்.  ஆனால் நான் ஒரு விஷயத்தை இன்று கூறுகிறேன் – அவர் நாடு முழுவதற்குமே உத்வேகம் அளித்திருக்கிறார்.  அவருடைய கடிதம், மாணவர்களோடு பேசுவதாக மட்டுமே இருக்கலாம் என்றாலும் நம்முடைய சமூகம் முழுமைக்கும் அது ஒரு செய்தியை அளிக்கிறது.

 

நண்பர்களே, ஒவ்வொரு ஆண்டும் இப்படிப்பட்ட விஷயங்கள் குறித்து தேர்வுகளை எதிர்கொள்வோம் என்ற நிகழ்ச்சியை நான் மாணவர்களோடு நடத்துகிறேன்.  இந்த ஆண்டும் கூட தேர்வுகளுக்கு முன்பாக நான் மாணவர்களோடு விவாதம் செய்யத் திட்டமிட்டு வருகிறேன்.  இந்த நிகழ்ச்சிக்காக, இரு நாட்கள் கழித்து டிசம்பர் மாதம் 28ஆம் தேதியன்று தொடங்கி MyGov.in தளத்தில் பதிவுகள் தொடங்கப்படவிருக்கின்றன.  இந்தப் பதிவு டிசம்பர் 28 முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை நடைபெறும்.  இதற்காக 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருக்கென இணையவழி போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படும்.  நீங்கள் அனைவரும் இதிலே கண்டிப்பாகப் பங்கெடுக்க வேண்டும் என்று நான் விழைகிறேன்.  உங்களைச் சந்திக்க எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கும்.  நாமனைவருமாக இணைந்து தேர்வுகள், தொழில், வெற்றி, கல்விக்காலத்தோடு தொடர்புடைய பல விஷயங்கள் குறித்து கலந்தாய்வு புரிவோம்.

 

என் மனம்நிறை நாட்டுமக்களே, மனதின் குரலில், நீங்கள் ஒன்றைக் கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன், இது எல்லைகளைக் கடந்து மிகத் தொலைவான இடத்திலிருந்து வந்திருக்கிறது.  இது உங்களுக்கு ஆனந்தத்தை அளிக்கும், ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

 

வந்தே மாதரம்.  வந்தே மாதரம்

சுஜலாம் சுஃபலாம் மலயஜசீதலாம்

சஸ்யஷாமலாம் மாதரம்.  வந்தே மாதரம்.

சுப்ரஜ்யோத்ஸ்னா புலகிதயாமினீம்

ஃபுல்லகுசுமித த்ருமதளசோமிபினீம்

சுஹாசினீம், சுமதுர பாஷிணீம்.

சுகதாம் வரதாம் மாதரம். 1

வந்தே மாதரம்.  வந்தே மாதரம்.

   

இதைக் கேட்டு, உங்கள் மனதுக்கு இதமாக இருந்திருக்கும், பெருமிதத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.  வந்தே மாதரத்தில் இருக்கும் உணர்வுகளின் களஞ்சியம், நமக்குள்ளே பெருமித உணர்வையும், பெரும்சக்தியையும் நிரப்பி விடும்.

 

    நண்பர்களே, இந்த அருமையான பாடல் எங்கிருந்து வந்தது, எந்த நாட்டிலிருந்து வந்தது என்று நீங்கள் கண்டிப்பாக யோசிப்பீர்கள். இதற்கான விடை உங்களை மேலும் ஆச்சரியத்திலே ஆழ்த்தும்.  வந்தே மாதரம் பாடலை அளிக்கும் இந்த மாணவர்கள் கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர்கள்.  அங்கே இவர்கள் இலியாவின் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இவர்கள் வந்தே மாதரத்தைப் பாடியிருக்கும் அழகும், உணர்வும், அற்புதமானது, போற்றுதற்குரியது.  இப்படிப்பட்ட முயல்வுகள் தாம் இரு நாட்டு மக்களிடத்திலும் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது.  நான் கிரேக்க நாட்டின் இந்த மாணவ மாணவியருக்கும் அவர்களுடைய ஆசிரியர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவ காலத்தில் செய்யப்பட்டிருக்கும் அவர்களுடைய முயற்சி பாராட்டுதற்குரியது. 

 

    நண்பர்களே, நான் லக்னௌவில் வசிக்கும் நிலேஷ் அவர்களுடைய ஒரு பதிவு பற்றி விவாதிக்க விரும்புகிறேன்.  நிலேஷ் அவர்கள் லக்னௌவில் நடைபெற்ற ஒரு வித்தியாசமான ட்ரோன் காட்சியை மிகவும் பாராட்டியிருக்கிறார்.  இந்த ட்ரோன் காட்சி லக்னௌவின் ரெசிடென்ஸி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  1857க்கு முன்பு நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தின் அத்தாட்சிகள், ரெசிடென்ஸியின் சுவர்களில் இன்றும் கூட காணப்படுகின்றன.  ரெசிடென்ஸியில் நடைபெற்ற ட்ரோன் காட்சியில் பாரத நாட்டு சுதந்திரப் போராட்டத்தின் பல்வேறு விஷயங்களுக்கு உயிரூட்டப்பட்டன.  அது சௌரி சௌரா போராட்டமாகட்டும், காகோரீ ரயில் சம்பவமாகட்டும், நேதாஜி சுபாஷின் அசாத்தியமான சாகஸம்-பராக்கிரமம் ஆகட்டும், இந்த ட்ரோன் காட்சியானது அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டு விட்டது.  நீங்களும் கூட உங்கள் நகரங்களிலே, கிராமங்களிலே, சுதந்திரப் போராட்டத்தோடு தொடர்புடைய வித்தியாசமான விஷயங்களை மக்கள் மத்தியிலே கொண்டு செல்லுங்கள். இதிலே தொழில்நுட்பத்தின் துணையையும் நம்மால் துணைகொள்ள முடியும்.  சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவமானது, நமக்கு சுதந்திரம் தொடர்பான நினைவுகளோடு வாழ்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தை நல்குகிறது, அதை அனுபவித்து உணரும் ஒரு வாய்ப்பை நமக்கு அளிக்கிறது.  இது தேசத்தின் பொருட்டு புதியதோர் உறுதிப்பாட்டை மேற்கொள்ளவும், சிறப்பாகச் சாதனை படைக்கவும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தவுமான உத்வேகம் அளிக்கும் கொண்டாட்டம், கருத்தூக்கமளிக்கும் சந்தர்ப்பம்.  வாருங்கள், சுதந்திரப் போராட்டத்தின் மகத்தான ஆளுமைகளால் தொடர்ந்து உத்வேகம் அடைந்து வருவோம், தேசத்திற்கான நமது முயற்சிகளை மேலும் பலமடையச் செய்வோம்.

 

    எனதருமை நாட்டுமக்களே, நம்முடைய பாரதம், பல அசாதாரணமான திறமைகள் நிறைந்தது.  இவர்களுடைய படைப்புகளும் செயல்களும் பிறருக்கும் உத்வேகம் அளிப்பவை.  இப்படிப்பட்ட ஒரு நபர் தான் தெலங்கானாவைச் சேர்ந்த டாக்டர் குரேலா விட்டலாச்சார்யா அவர்கள்.  இவருக்கு 84 வயதாகிறது.  தனது கனவினை நனவாக்குவது என்று வந்து விட்டால், வயது ஒரு தடையல்ல என்பதற்கு விட்டலாச்சார்யா அவர்கள் ஒரு வாழும் எடுத்துக்காட்டு.  நண்பர்களே, தனது சிறு வயது தொடங்கியே விட்டலாச்சார்யா அவர்களுக்கு ஒரு ஆசை உண்டு, அது பெரிய ஒரு நூலகத்தைத் திறக்க வேண்டுமென்பதே. தேசம் அப்போது அடிமைத்தளையில் இருந்தது, சில சூழ்நிலைகள் காரணமாக, சிறுவயதில் உருவான அந்தக் கனவு, கனவாகவே இருந்து விட்டது.  காலப்போக்கில் விட்டலாச்சார்யா அவர்கள் விரிவுரையாளராக ஆனார், தெலுகு மொழியை ஆழமாகக் கற்றார், இதிலே பல படைப்புக்களையும் அளித்தார்.  6-7 ஆண்டுகள் முன்பாக ஒரு முறை மீண்டும் தனது கனவுக்கு வடிவம் கொடுப்பதில் ஈடுபட்டார்.  முதலில் தன்னுடைய படைப்புக்களைக் கொண்டு நூலகத்தை ஏற்படுத்தினார்.  வாழ்க்கை முழுவதும் தான் சம்பாதித்த செல்வத்தை இதில் செலவு செய்தார்.  மெல்ல மெல்ல மக்கள் ஆதரவு அளித்தார்கள், தங்கள் பங்களிப்பை அளிக்கத் தொடங்கினார்கள்.  யதாத்ரி புவனகிரி மாவட்டத்தின் ரமன்னாபேட் மண்டலத்தில் உள்ள இந்த நூலகத்தில் கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் புத்தகங்கள் இருக்கின்றன.  கல்வி கற்பதில் தனக்கு ஏற்பட்ட கஷ்டங்களைப் போல பிறருக்கு ஏற்படக் கூடாது என்கிறார் விட்டலாச்சார்யா அவர்கள்.  இன்று இந்த நூலகத்தால் மாணவர்கள் பெருமளவில் பலனடைந்து வருவது இவருக்கு பெரும் நிறைவை அளிக்கிறது.  இவருடைய முயற்சிகளால் கருத்தூக்கம் பெற்று, இன்னும் பிற கிராமங்களைச் சேர்ந்தவர்களும் நூலகம் ஏற்படுத்துவதில் ஈடுபட்டு வருகிறார்கள். 

 

    நண்பர்களே, புத்தகங்கள் வெறும் அறிவை மட்டும் அளிப்பதில்லை மாறாக, தனித்துவத்தையும் பட்டை தீட்டுகிறது, வாழ்க்கையையும் உருவாக்குகிறது.  புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் ஒரு அற்புதமான மன நிறைவை அளிக்கக் கூடியது.  நான் இந்த ஆண்டு இத்தனை புத்தகங்களைப் படித்தேன் என்று சிலர் பெருமிதம் பொங்கக் கூறுவதை என்னால் இப்போதெல்லாம் காண முடிகிறது.  இனி நான் இந்திந்த புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்கிறார்கள்.  இது ஒரு நல்ல போக்கு, இதை நாம் வளர்க்க வேண்டும்.  நானும் மனதின் குரல் நேயர்களிடம் கூறுவதெல்லாம், இந்த ஆண்டுக்கான, உங்களுக்குப் பிடித்த, ஐந்து புத்தகங்களைப் பற்றிக் கூறுங்கள்.  2022ஆம் ஆண்டில் படிக்க வேண்டிய நல்ல புத்தகங்களை, இந்த வகையில் பிற வாசகர்களுக்கு நீங்கள் அடையாளப்படுத்த முடியும்.  திரைகளைப் பார்ப்பதில் நாம் செலவழிக்கும் நேரம் அதிகரித்து வரும் வேளையில், நூல்படிப்பில் பிடிப்பு மேலும் பிரபலமாக வேண்டும், அதிகப்பட வேண்டும் என்ற திசையில் நாமனைவரும் இணைந்து முயல வேண்டும். 

 

    என் இனிய நாட்டுமக்களே, தற்போது என்னுடைய கவனம் ஒரு சுவாரசியமான முயல்வு நோக்கிச் சென்றது.  இந்த முயற்சி நம்முடைய பண்டைய நூல்கள் மற்றும் கலாச்சார நற்பதிவுகளை, பாரதத்திலே மட்டுமல்ல, உலகெங்கிலும் அனைவருக்கும் பிரியமானதாக ஆக்குவது.  புணேயின் பண்டார்கர் ஓரியண்டல் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட், அதாவது, பண்டார்கர் கிழக்கத்திய ஆய்வுக் கழகம் என்ற ஒரு மையம் உள்ளது.  இந்த அமைப்பு, பிற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மஹாபாரதத்தின் மகத்துவத்தைப் புரிய வைக்க இணையவழிப் படிப்புக்களைத் தொடங்கி இருக்கிறது.  இந்தப் படிப்பு இப்போது தான் தொடங்கப்பட்டிருந்தாலும், இதில் கற்பிக்கப்படும் உள்ளடக்கத்தைத் தயார் செய்யும் பணிகளின் தொடக்கம் 100 ஆண்டுகளுக்கு முன்பே செய்யப்பட்டது என்பது உங்களுக்குப் பேராச்சரியத்தை அளிக்கலாம்.  இந்தக் கழகம் இதோடு தொடர்புடைய படிப்பைத் தொடங்கிய போது, இதற்கு மிக அருமையான பதில் குறிப்பு கிடைத்தது.  நமது பாரம்பரியத்தின் பல்வேறு விஷயங்களை எப்படி நவீன முறையில் அளித்திருக்கிறார்கள் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே, நான் இந்த அற்புதமான முயற்சி பற்றி விவாதிக்க விரும்புகிறேன்.  கடல்களைத் தாண்டி இருப்போருக்கும் இது எப்படி பலனளிக்கும் என்பதற்காக, நூதனமான வழிமுறைகள் கையாளப்பட்டிருக்கின்றன.

 

    நண்பர்களே, இன்று உலகம் முழுவதிலும் பாரத நாட்டுக் கலாச்சாரம் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்து வருகிறது.  பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும், நமது கலாச்சாரம் பற்றித் தெரிந்து கொள்ள விழைவதோடு, அதை மேலும் விரிவாக்கவும் உதவி வருகிறார்கள்.  இப்படிப்பட்ட ஒரு நபர் தான், செர்பிய நாட்டு அறிஞரான டாக்டர். மோமிர் நிகிச். இவர் சம்ஸ்கிருத-செர்பிய இருமொழி அகராதி ஒன்றினை ஏற்படுத்தி இருக்கிறார்.  இந்த அகராதியில் இடம் பெற்றிருக்கும் 70,000த்திற்கும் மேற்பட்ட சம்ஸ்கிருதச் சொற்களை செர்பிய மொழியில் மொழியாக்கமும் செய்திருக்கிறார்.  டாக்டர். நிகிச், தனது 70ஆவது வயதிலே சம்ஸ்கிருத மொழியைக் கற்றிருக்கிறார்.  காந்தியடிகளின் கட்டுரைகளைப் படித்த பிறகே தனக்கு உத்வேகம் பிறந்ததாக இவர் கூறுகிறார்.  இதைப் போலவே மேலும் ஒரு எடுத்துக்காட்டு, மங்கோலியா நாட்டைச் சேர்ந்த 93 அகவை நிறைந்த பேராசிரியர் ஜே. கேந்தேதரம் அவர்களுடையது.  கடந்த 40 ஆண்டுகளாக இவர் பாரதத்தின் சுமார் 40 பண்டைய நூல்கள், மஹாகாவியங்கள், படைப்புக்கள் ஆகியவற்றை மங்கோலிய மொழியில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.  நமது நாட்டிலேயும் கூட, பலர் இதே போன்ற ஒருமித்த சிந்தையோடு பணியாற்றி வருகின்றார்கள்.  கோவாவைச் சேர்ந்த சாகர் முலே அவர்களின் முயற்சிகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளூம் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது.  இவர் பல நூறு ஆண்டுகள் பழைமையான காவீ ஓவியக்கலை, வழக்கொழிந்து போவதிலிருந்து காப்பாற்றுவதில் ஈடுபட்டிருக்கிறார்.  காவீ ஓவியக்கலை என்பது பாரதத்தின் பண்டைய வரலாற்றைத் தன்னோடு இணைந்துக் கொண்டிருப்பது.  பார்க்கப் போனால், காவ் என்பதன் பொருள் சிவப்பு மண் என்பதாகும்.  பண்டைய காலத்தில் இந்தக் கலையில் செம்மண் பயன்படுத்தப்பட்டு வந்தது.  போர்ச்சுகல் நாட்டின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில், கோவாவிலிருந்து வெளியேறியவர்கள், பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கும் இந்த அற்புதமான ஓவியக்கலையை அறிமுகம் செய்தார்கள்.  காலப்போக்கில், இந்த ஓவியக்கலை வழக்கொழிந்து போகத் தொடங்கியது.  ஆனால் சாகர் முலே அவர்கள், இந்தக் கலைக்குப் புத்துயிர் அளித்தார்.  அவருடைய இந்த முயற்சிக்கு இப்போது முழு அளவிலான ஒத்துழைப்பும் கிடைத்து வருகிறது. நண்பர்களே, ஒரு சிறிய முயற்சி, ஒரு சிறிய முன்னெடுப்பும் கூட, நமது நிறைவான கலைகளைப் பாதுகாக்க, மிகப்பெரிய பங்களிப்பை அளிக்க முடியும்.  நமது நாட்டு மக்கள் உறுதிப்பாடு மேற்கொண்டு விட்டால், நாடெங்கிலும் நமது பண்டைய கலைகளைப் பாதுகாத்து, பராமரித்து, பேண வேண்டும் என்ற தீவிர ஆர்வம் ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுக்க முடியும்.  நான் இங்கே சில முயற்சிகளைப் பற்றி மட்டுமே விவரித்திருக்கிறேன். நாடெங்கிலும் இவை போன்று அநேக முயற்சிகள் நடந்தேறி வருகின்றன. இவை பற்றிய தகவல்களை நமோ செயலியின் வாயிலாக எனக்குக் கண்டிப்பாக அனுப்பி வையுங்கள்.

 

    எனதருமை நாட்டுமக்களே, அருணாச்சல் பிரதேசத்தின் மக்கள் ஆண்டு முழுவதும் ஒரு வித்தியாசமான இயக்கத்தைச் செயல்படுத்தி வருகிறார்கள், இதற்கு இவர்கள் இட்டிருக்கும் பெயர் அருணாச்சல் பிரதேசம் ஏர்கன் சரண்டர் இயக்கம் என்பதாகும். இந்த இயக்கத்திலே, மக்கள், தன்னிச்சையாக வேட்டைத் துப்பாக்கிகளை ஒப்புவிக்கிறார்கள், ஏன் தெரியுமா?  அருணாச்சல் பிரதேசத்தின் பறவைகள் தாறுமாறாகக் கொல்லப்படுவது தடுப்பதற்காக இப்படிச் செய்து வருகிறார்கள்.  நண்பர்களே, அருணாச்சல பிரதேசம் 500க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வசிக்கும் இடம்.  இவற்றில் சில உள்நாட்டு இனங்களும் அடங்கும், இவை உலகின் வேறு எந்தப் பகுதியிலும் காண முடியாதது. ஆனால் மெல்லமெல்ல இப்போது வனங்களின் புள்ளினங்கள் குறைந்து வருகின்றன.  இந்த நிலைமையைச் சீர்செய்யவே, இப்போது வேட்டைத் துப்பாக்கிகளை ஒப்புவிப்பது இயக்கம் நடைபெற்று வருகிறது.  கடந்த சில மாதங்களில், மலைப்பகுதிகள் தொடங்கி சமவெளிகள் வரை, ஒரு சமூகம் முதல் பிறிதொரு சமூகம் வரை, மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் உள்ள மக்கள் இதைத் திறந்த மனதோடு ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அருணாச்சலின் மக்கள், தன்னிச்சையாக இதுவரை 1600க்கும் மேற்பட்ட வேட்டைத் துப்பாக்கிகளை ஒப்படைத்திருக்கிறார்கள். நான் அருணாச்சல் மக்களை இதன் பொருட்டு பாராட்டுகிறேன், என் வாழ்த்துக்களை அவர்களுக்குத் தெரிவிக்கிறேன்.

 

    என் மனம் நிறை நாட்டுமக்களே, உங்கள் அனைவரிடமிருந்தும் 2022ஆம் ஆண்டு தொடர்பான நிறைய செய்திகளும் ஆலோசனைகளும் வந்திருக்கின்றன.  ஒரு விஷயம், ஒவ்வொரு முறையைப் போன்றும் பெரும்பாலான மக்களின் செய்தியாக இருக்கிறது.  அது தான் தூய்மை மற்றும் தூய்மை பாரதம் பற்றியது.  தூய்மையின் இந்த உறுதிப்பாடு, ஒழுங்குமுறையோடு, விழிப்புணர்வோடு, அர்ப்பணிப்போடு மட்டுமே முழுமையடையும்.  தேசிய மாணவர் படை வாயிலாகத் தொடங்கப்பட்ட புனீத் சாகர் இயக்கத்திலும் இதன் ஒரு காட்சியை நம்மால் காண இயலும்.  இந்த இயக்கத்தில் 30000த்திற்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படை உறுப்பினர்கள் பங்கெடுத்தார்கள்.  இந்த மாணவர்கள் கடற்கரைகளில் தூய்மைப் பணியை மேற்கொண்டார்கள், அங்கே இருந்த நெகிழிப் பொருட்களை அகற்றி, அவற்றை மறுசுழற்சிக்காகத் திரட்டினார்கள்.  நமது கடற்கரைப் பகுதிகள், நமது மலைகள் எல்லாம் நாம் சுற்றிப் பார்க்க ஏதுவானவையாக எப்போது இருக்கும் என்றால், அவை தூய்மையாக இருக்கும் போது தான்.  பலர் ஏதோ ஓரிடத்திற்குச் செல்லும் கனவைத் தங்கள் வாழ்க்கை முழுக்க காண்கிறார்கள்; ஆனால் அங்கே சென்ற பிறகு, தெரிந்தோ தெரியாமலோ குப்பைகளை விட்டுச் செல்கிறார்கள்.  எந்த இடம் நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறதோ, அதை நாம் மாசுபடுத்தக் கூடாது என்பது நாட்டுமக்களாகிய நம்மனைவரின் பொறுப்பாகும்.

 

    நண்பர்களே, எனக்கு சாஃப்வாட்டர் என்ற ஒரு ஸ்டார்ட் அப் பற்றித் தெரிய வந்தது.  இவர்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் internet of things துணையோடு, அவர்களின் பகுதிகளில் இருக்கும் தண்ணீரின் தூய்மை மற்றும் தரம் தொடர்பான தகவல்களை மக்களுக்கு அளிக்கிறார்கள்.  இது தூய்மை தொடர்பான அடுத்தகட்டம்.  மக்களின் தூய்மையான, ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக, இந்த ஸ்டார்ட் அப்பின் முக்கியத்துவத்தைக் கண்டு, இதற்கு ஒரு உலக விருதும் கிடைத்திருக்கிறது. 

 

    நண்பர்களே, தூய்மையை நோக்கி ஒரு படி என்ற இந்த முயற்சியில், அமைப்புகளாகட்டும், அரசாகட்டும், அனைவருக்கும் மகத்துவம் நிறைந்த பங்களிப்பு இருக்கிறது.  முந்தைய காலத்தில் அரசு அலுவலகங்களில் பழைய கோப்புகளும், காகிதங்களும் எத்தனை பெரிய மலை போலக் குவிந்திருந்தன என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்.  பழைய வழிமுறைகளை மாற்றத் தொடங்கிய பிறகு, இந்தக் கோப்புகளும், காகிதங்களும் அடங்கிய மலை, டிஜிட்டல் முறையில் கணிப்பொறியில் ஒரு உறைக்குள் அடங்கி விட்டது.  பழைய, நிலுவையிலிருக்கும் விஷயங்களை அகற்ற அமைச்சகங்களும், துறைகளும் சிறப்பு இயக்கத்தையும் செயல்படுத்தி வருகின்றன.  இந்த இயக்கம் காரணமாக, சில சுவாரசியமான விஷயங்கள் நடந்திருக்கின்றன.  தபால் துறையில் இந்தத் தூய்மை இயக்கம் செயல்படுத்தப்பட்ட போது, அங்கே இருந்த குப்பைக்கிடங்கு முழுவதுமாக காலியானது.  இப்போது இந்தக் குப்பைக்கிடங்கு முற்றம், தேநீர்-சிற்றுண்டி அருந்தும் இடம் என மாறி விட்டது.  மேலும் ஒரு குப்பைக்கிடங்கு இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறி விட்டது.  இதைப் போலவே சுற்றுச்சூழல் அமைச்சகம் தனது காலியாகவுள்ள குப்பைகிடங்கை நல்வாழ்வு மையமாக மாற்றியமைத்திருக்கிறது.  நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் ஒரு தூய்மை ஏடிஎம்மையும் அமைத்திருக்கிறது.  மக்கள் குப்பைகளை அளித்து, இதற்கு பதிலாக பணத்தைப் பெற்றுச் செல்லலாம் என்பதே இதன் நோக்கம்.  சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் துறைகளில் இருக்கும் மரங்களிலிருந்து விழும் காய்ந்த இலைகளையும், உயிரி குப்பைகளையும் கொண்டு கம்போஸ்ட் உரம் தயாரித்தல் தொடங்கப்பட்டு விட்டது.  இந்தத் துறை, குப்பைக் காகிதம் மூலம் எழுது பொருட்களைத் தயாரிக்கும் பணியைப் புரிந்து வருகிறது.  நமது அரசுத் துறைகளும் தூய்மை போன்ற விஷயங்களில் இந்த அளவுக்கு புதுமையாகச் செயல்பட முடியும். சில ஆண்டுகள் முன்பு வரை, யாருக்கும் இதன் மீது நம்பிக்கையேதும் இருக்கவில்லை ஆனால், இன்று இது அமைப்பின் ஒரு பகுதியாக மாறி வருகிறது.  இது தான் தேசத்தின் புதிய கருத்தோட்டம்.  இதற்கு நாட்டுமக்கள் அனைவரும் இணைந்து தலைமை தாங்குகிறார்கள்.

 

    எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் இந்த முறையும் நாம் பல விஷயங்கள் குறித்துப் பேசினோம்.  ஒவ்வொரு முறையைப் போன்றும், ஒரு மாதம் கழித்து, நாம் மீண்டும் சந்திப்போம், ஆனால், 2022ஆம் ஆண்டிலே.  ஒவ்வொரு புதிய தொடக்கமும், நமது திறமைகளை அடையாளம் கண்டு கொள்ள நமக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளிக்கிறது.  எந்த இலக்குகளை நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாமல் இருந்ததோ, இன்று தேசம் இவற்றுக்காக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  நம் நாட்டிலே,

    

क्षणशकणशश्चैवविद्याम् अर्थं  साधयेत् |

क्षणे नष्टे कुतो विद्याकणे नष्टे कुतो धनम् ||

க்ஷணச: கணஸ்சைவ, வித்யாம் அர்த்தம் ச சாதயேத்.

க்ஷணே நஷ்டே குதோ வித்யா, கணே நஷ்டே குதோ தனம், என்று கூறப்படுவதுண்டு.

 

அதாவது, நாம் கல்வி கற்பதாகட்டும், புதியதாக ஒன்றைத் தெரிந்து கொள்வதாகட்டும், நாம் ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  அதே போல செல்வத்தைத் திரட்டும் போது, அதாவது உயர்வு-வளர்ச்சி அடைய வேண்டும் போதும், ஒவ்வொரு கணத்தையும், ஒவ்வொரு ஆதாரத்தையும் நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  ஏனென்றால், கணம் இழந்து போனால், கல்வி, ஞானம் மறைந்து விடும், கணம் இழந்து போனால், செல்வம் மற்றும் வளர்ச்சிக்கான பாதை தடைப்பட்டுப் போகும்.  இது நாட்டுமக்களாகிய நம்மனைவருக்கும் உத்வேகம் அளிக்க வல்லது.  நாம் நிறைய கற்க வேண்டும், நிறைய புதுமைகள் படைக்க வேண்டும், புதியபுதிய இலக்குகளை அடைய வேண்டும் ஆகையால், நாம் ஒரு கணப் பொழுதைக் கூட வீணடித்து விடக் கூடாது.  நாம் தேசத்தை முன்னேற்றப் பாதையில், புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதால் நாம் நமது அனைத்து ஆதாரங்களையும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.  இது ஒரு வகையில், தற்சார்பு பாரதத்திற்கான ஒரு மந்திரம்; ஏனென்றால், நாம் நமது ஆதாரங்களை சரியான முறையில் பயன்படுத்தினால், அவற்றை விரயமாக்காதிருந்தால், அப்போது தான் நம்மால் சொந்த பலத்தை அடையாளம் கண்டு கொள்ள இயலும், அப்போது தான் தேசம் தற்சார்பு உடையதாக ஆகும்.  ஆகையால், நாம் நமது நெஞ்சுறுதிகளை மீண்டும் உரைப்போம், பெரியதாகச் சிந்திப்போம், பெரிய கனவுகளைக் காணுவோம், அவற்றை நிறைவேற்றும் பொருட்டு, முழுவீச்சில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வோம், வாருங்கள்!!  மேலும் நமது கனவுகள் நம்வரை மட்டுமே குறுகிப் போய் விடக் கூடாது.  நமது கனவுகள் எப்படிப்பட்டவையாக இருக்க வேண்டுமென்றால், இவற்றோடு நமது சமூகம் மற்றும் தேசத்தின் முன்னேற்றம் இணைந்திருக்க வேண்டும், நமது வளர்ச்சியால் தேசத்தின் வளர்ச்சிப் பாதை திறக்க வேண்டும்.  இதற்காக நாம் இன்றிலிருந்து ஈடுபட வேண்டும், ஒரு கணம் கூட வீணாக்காமல், ஒரு கணம் கூட விரயம் செய்யாமல்.  இந்த மனவுறுதிப்பாட்டோடு, இனிவரும் ஆண்டில் தேசம் முன்னேற்றம் காணும், 2022ஆம் ஆண்டு, ஒரு புதிய பாரதத்தை நாம் நிர்மாணம் செய்யும் பொன்னானதொரு அத்தியாயமாகும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இந்த நம்பிக்கையோடு, உங்கள் அனைவருக்கும் 2022ஆம் ஆண்டுக்கான பலப்பல நல்வாழ்த்துக்கள்.  பலப்பல நன்றிகள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...

Prime Minister Shri Narendra Modi paid homage today to Mahatma Gandhi at his statue in the historic Promenade Gardens in Georgetown, Guyana. He recalled Bapu’s eternal values of peace and non-violence which continue to guide humanity. The statue was installed in commemoration of Gandhiji’s 100th birth anniversary in 1969.

Prime Minister also paid floral tribute at the Arya Samaj monument located close by. This monument was unveiled in 2011 in commemoration of 100 years of the Arya Samaj movement in Guyana.