அமிர்தப் பெருவிழா மற்றும் சுதந்திரதின சிறப்பு நிகழ்வில் நாட்டின் கூட்டான பலத்தை நாம் கண்டிருக்கிறோம்: பிரதமர்
நீர் மற்றும் நீர்-சேமிப்பின் முக்கியத்துவம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன்பே நமது கலாசாரத்தில் விளக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி
அமிர்த நீர்நிலைகள் உருவாக்கம் மக்கள் இயக்கமாக மாறியிருக்கிறது: பிரதமர் மோடி
செப்டம்பரில் நடைபெறவுள்ள ஊட்டச்சத்து இயக்கத்தில் இணையுமாறு அனைவரையும் வலியுறுத்துகிறேன்: பிரதமர் மோடி
2023-ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது: பிரதமர்
உலகிலேயே அதிக அளவில் சிறுதானியங்களை இந்தியா உற்பத்தி செய்வதால், இது சிறு விவசாயிகளுக்குப் பயன்தரும்: பிரதமர் மோடி
டிஜிட்டல் இந்தியா முன்முயற்சி காரணமாக நாட்டில் டிஜிட்டல் தொழில்முனைவோர் அதிகரித்து வருகின்றனர்: பிரதமர்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.   ஆகஸ்ட் மாதமான இந்த மாதத்தில், உங்கள் அனைவருடைய கடிதங்கள், செய்திகள், தபால் அட்டைகள் ஆகியன என்னுடைய அலுவலகத்தை மூவண்ணமயமாக்கி விட்டன.  மூவண்ணம் இல்லாத அல்லது மூவண்ணமும் சுதந்திரமும் இடம்பெறாத ஒரு கடிதமே வரவில்லை என்று கூட சொல்லலாம்.  பிள்ளைகள், இளைஞர்கள் என அனைவரும் அமுதப் பெருவிழா பற்றிய அழகான ஓவியங்கள், கைவினைத்திறன் பயன்படுத்தி அனுப்பியிருக்கிறார்கள்.  சுதந்திரத்தின் இந்த மாதங்களில் நமது தேசமெங்கும், ஒவ்வொரு நகரிலும், ஒவ்வொரு கிராமத்திலும், அமுத காலத்தின் அமுதப்பெருக்கு பெருக்கெடுத்துக் கொண்டிருக்கிறது.  அமுதப் பெருவிழா மற்றும் சுதந்திரத் திருநாள் என்ற சிறப்பான சந்தர்ப்பத்தில் நாம் தேசத்தின் சமூக சக்தியை தரிசனம் செய்தோம்.  ஒரு விழிப்பு நிலையை அனுபவிக்க முடிந்தது.   இத்தனை பெரிய தேசம், இத்தனை பன்முகத்தன்மை; ஆனால் மூவண்ணக் கொடியைப் பறக்க விடுதல் எனும் போது, ஒவ்வொருவரும் ஒரே உணர்வோடு அதைப் பறக்க விடுவதைப் பார்க்க முடிந்தது.  முவண்ணத்தின் பெருமையின் முதல் காவலாளியாக ஆகி, மக்கள் தாங்களே முன்வந்தார்கள்.  அதே போல தூய்மை இயக்கத்தின் போதும், தடுப்பூசி இயக்கத்தின் போதும் தேசத்தின் உணர்வையும் ஊக்கத்தையும் நம்மால் காண முடிந்தது.  அமுதப் பெருவிழாவிலே மீண்டும் தேசபக்தியின் அதே போன்ற உணர்வை நம்மால் காண முடிகிறது.  நமது இராணுவ வீரர்கள், உயரமான சிகரங்களிலே, தேசத்தின் எல்லைகளிலே, கடல்களுக்கு நடுவினிலே மூவண்ணக் கொடியைப் பறக்க விட்டார்கள்.  மூவண்ண இயக்கத்தின் பொருட்டு, பல்வேறு நூதனமான கருத்துக்களும் வெளியிடப்பட்டன.  எடுத்துக்காட்டாக இளைஞரான கிருஷ்னீல் அனில் அவர்கள்.  அனில் அவர்கள் ஒரு புதிர் விளையாட்டுக் கலைஞர், இவர் சாதனை சமயத்தில் அழகான மூவண்ண மொசைக் கலையை வடிவமைத்தார்.  கர்நாடகத்தின் கோலாரிலே, மக்கள் 630 அடி உயரமும், 205 அடி அகலமும் கொண்ட மூவண்ணக் கொடியைப் பறக்கவிட்டு, பிரத்யேகமான காட்சியை அளித்தார்கள்.  அஸாமில் அரசு அலுவலர்கள் திகாலிபுகுரீ போர் நினைவுச் சின்னத்தில் மூவண்ணக் கொடியைப் பறக்க விட, தங்களுடைய கரங்களாலேயே 20 அடி மூவண்ணக் கொடியை உருவாக்கினார்கள்.  இதைப் போலவே மனிதச் சங்கிலி வாயிலாக இந்தியாவின் வரைபடத்தை இந்தோரில் மக்கள் ஏற்படுத்தினார்கள்.  சண்டீகரில், இளைஞர்கள், மனிதர்களால் ஆன விசாலமான ஒரு மூவண்ணக் கொடியை ஏற்படுத்தினார்கள். இந்த இரண்டு முயற்சிகளும், கின்னஸ் பதிவுகளில் இடம் பிடித்தன. இவற்றுக்கு இடையிலே, ஹிமாச்சல் பிரதேசத்தின் கங்கோட் பஞ்சாயத்திலிருந்து ஒரு மிகப்பெரிய ஊக்கமளிக்கும் எடுத்துக்காட்டையும் நம்மால் பார்க்க முடிந்தது. இங்கே பஞ்சாயத்திலே சுதந்திரத் திருநாள் நிகழ்ச்சியிலே, புலம்பெயர்ந்த தொழிலாளிகளின் குழந்தைகள் முக்கிய விருந்தினர்களாக ஆக்கப்பட்டார்கள்.

 

            நண்பர்களே, அமுதப் பெருவிழாவின் இந்த வண்ணம், பாரதத்திலே மட்டுமல்ல, உலகின் பிற நாடுகளிலும் காணக் கிடைத்தது. போத்ஸ்வானாவில் வசிக்கும் அந்த நாட்டைச் சேர்ந்த பாடகர்கள், பாரத சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் 75 தேசபக்தி கீதங்களைப் பாடினார்கள்.  இதிலே மேலும் சிறப்பான விஷயம் என்னவென்றால் இந்த 75 பாடல்கள், ஹிந்தி, பஞ்சாபி, குஜராத்தி, பாங்க்லா, அசமியா, தமிழ், தெலுகு, கன்னடம், சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளில் பாடப்பட்டன. இதைப் போலவே, நமீபியாவிலும் பாரதம்-நமீபியா ஆகிய நாடுகளின் கலாச்சார பாரம்பரியமான தொடர்புகள் பற்றிய விசேஷமான தபால்தலை வெளியிடப்பட்டது.

 

            நண்பர்களே, நான் மேலும் ஒரு சந்தோஷமான விஷயத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன்.  சில நாட்கள் முன்பாகத் தான், இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் நிகழ்ச்சி ஒன்றிலே பங்கெடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.  அங்கே அவர்கள் ஸ்வராஜ் என்ற ஒரு தொலைக்காட்சித் தொடரைக் காட்சிப்படுத்தினார்கள்.  அதன் முதல்காட்சியைக் காணும் வாய்ப்பு கிடைத்தது.  சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த, இதுவரை கேள்விப்படாத நாயகர்கள்-நாயகிகளின் முயற்சிகளை, தேசத்தின் இளைய தலைமுறையினருக்கு அடையாளம் காட்டும் ஒரு மிகச் சிறப்பான முயற்சியாகும் இது.  தூர்தர்ஷன் தொலைக்காட்சியில், ஞாயிற்றுக்கிழமை தோறும், இரவு 9 மணிக்கு இது ஒளிபரப்பு செய்யப்படும்.  இது 75 வாரங்கள் வரை ஒளிபரப்பப்படும் என்று என்னிடத்திலே கூறப்பட்டிருக்கிறது.  நீங்கள் அனைவரும் சற்று நேரம் ஒதுக்கி, இதைக் காணுங்கள், உங்கள் வீட்டில் உள்ள குழைந்தைகளும் கண்டிப்பாக இதைக் காண ஊக்கப்படுத்துங்கள்.  பள்ளிகள்-கல்லூரிகளின் நிர்வாகம் இதன் ஒளிப்பதிவினை, திங்கட்கிழமையன்று பள்ளிகள்-கல்லூரிகள் திறக்கும் போது சிறப்பான நிகழ்ச்சி என்ற வகையிலே காட்சிப்படுத்தலாம்.  சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த இந்த மாமனிதர்களிடத்திலே, நமது தேசத்தில் இதன் மூலம் ஒரு புதிய விழிப்புணர்வு ஏற்படும். இதை நான் உங்களிடத்திலே வேண்டுகோளாக வைக்கிறேன்.  சுதந்திரத்தின் அமுதப்பெருவிழா அடுத்த ஆண்டு, அதாவது ஆகஸ்ட் 2023 வரை நடைபெறும்.  தேசத்திற்காக, சுதந்திரப் போராட்ட வீரர்களுக்காக, கட்டுரைகளுக்கான ஏற்பாடுகள் போன்றவை செய்யப்பட்டிருந்ததை நாம் மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். 

 

            எனதருமை நாட்டுமக்களே, நமது முன்னோர்களின் ஞானம், தீர்க்க தரிசனம், அவர்களின் ஏகாக்ரசித்தம் ஆகியன இன்றும் கூட மிகவும் மகத்துவமானவை.  இவற்றின் ஆழங்களிலே நாம் மூழ்கிப் பார்த்தால், நமக்குள்ளே ஆச்சரியம் ஏற்படுகிறது.  ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான நம்முடைய ரிக்வேதம் என்ன கூறுகிறது!!

 

ஓமான் – மாபோ மானுஷீ: அம்ருதக்தம் தாத் தோகாய தனயாய ஷம் யோ:.

யூயம் ஹிஷ்டா பிஷஜோ மாத்ருதமா விஷ்வஸ்ய ஸ்தாது: ஜகதோ ஜனித்ரீ:

ओमान-मापो मानुषी: अमृक्तम् धात तोकाय तनयाय शं यो: |

यूयं हिष्ठा भिषजो मातृतमा विश्वस्य स्थातु: जगतो जनित्री: ||

அதாவது, ஏ ஜலமே, நீங்கள் மனித சமூகத்தின் அணுக்கமான நண்பர் ஆவீர்.  நீங்கள் உயிர் அளிப்பவர், உங்களிடமிருந்து தான் உணவு உற்பத்தி செய்யப்படுகிறது, மேலும் உங்களிடமிருந்தே எங்களுடைய மக்கட்செல்வங்களின் நலன்களும் ஏற்படுகின்றன.  நீங்கள் எங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பவர், அனைத்துத் தீமைகளையும் தூரப் போக்குபவர்.  நீங்கள், மிகவும் உத்தமமான மருந்தாவீர், மேலும் நீங்களே இந்த பிரும்மாண்டத்தைப் பேணிக்காப்பவர். 

 

            சற்றே சிந்தியுங்கள், நமது சம்ஸ்கிருதத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பாக நீர் மற்றும் நீர் பாதுகாப்பின் மகத்துவம் விளங்க வைக்கப்பட்டிருக்கிறது.  இந்த ஞானத்தை, நாம் இன்றைய காலகட்டத்திலே பார்த்தோமேயானால், நமக்கு சிலிர்ப்பு ஏற்படுகிறது.  ஆனால் இந்த ஞானத்தை தேசமானது, தனது வல்லமை என்ற வகையிலே ஏற்றுக் கொள்ளும் போது, அதன் சக்தி பலமடங்கு அதிகரிக்கின்றது.  உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம், மனதின் குரலிலே, நான்கு மாதங்கள் முன்பாக நான் அமிர்த சரோவர், அதாவது அமிர்த நீர்நிலை என்று கூறியிருந்தேன், அல்லவா?  அதன் பிறகு பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் வட்டார நிர்வாகத்தினர், தன்னார்வ அமைப்புகள், அந்தந்தப் பகுதி மக்கள் என இணைந்தார்கள், பார்த்துக் கொண்டிருக்கும் காலத்திலேயே அமிர்த நீர்நிலை உருவாக்கப்பட்டு இது ஒரு மக்கள் இயக்கமாகப் பரிமளித்தது.  தேசத்திற்காக சாதிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்தால், நமது கடமைகள் பற்றிய விழிப்பு இருந்தால், வரவிருக்கும் தலைமுறையினர் பற்றிய நினைப்பிருந்தால், வல்லமை பிறக்கிறது, மனவுறுதி நேரிய கோட்டிலே பயணிக்கிறது.  தெலங்கானாவின் வாரங்கல்லின் ஒரு அருமையான முயற்சி பற்றிய தகவல் கிடைத்தது.  இங்கே ஒரு புதிய கிராமப் பஞ்சாயத்து கூட்டப்பட்டது, இதன் பெயர் மாங்க்யா வாள்ள தாண்டா.  இந்த கிராமம் வனப்பகுதிக்கு அருகிலே அமைந்திருக்கிறது.  இங்கே கிராமத்திற்கருகிலே இருக்கும் ஒரு இடத்திலே, பருவமழைக்காலத்தில் கணிசமான நீர் நிறைந்து விடுகிறது.  கிராமவாசிகளின் முயல்வுகள் காரணமாக, இந்த இடம் அமிர்த நீர்நிலை இயக்கத்தின்படி மேம்படுத்தப்பட்டு வருகிறது.  இந்த முறை பருவமழை பெய்த போது, நீர்நிலையில் நீர் நிரம்பி விட்டது.

 

            மத்திய பிரதேசத்தின் மண்டலாவிலிருக்கும் மோசா கிராமப் பஞ்சாயத்திலே உருவாகியிருக்கும் அமிர்த நீர்நிலை பற்றியும் நான் உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன்.  இந்த அமிர்த நீர்நிலையானது கான்ஹா தேசிய பூங்காவிற்கருகிலே அமைந்திருக்கிறது. இதன் வாயிலாக, இந்தப் பகுதியின் அழகு கூடியிருக்கிறது.  உத்தர பிரதேசத்தின் லலித்பூரிலே, உயிர்த்தியாகி பகத் சிங் பெயரிலான புத்தம்புதிய அமிர்த நீர்நிலை மக்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.  இங்கே நிவாரி கிராமப் பஞ்சாயத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நீர்நிலை 4 ஏக்கர் நிலப்பரப்பு அளவுக்குப் பரந்திருக்கிறது.  நீர்நிலையின் கரையோரங்களில் மரங்கள் நடப்பட்டு, இதன் அழகுக்கு அழகு சேர்க்கின்றன.  நீர்நிலைக்கருகிலே நடப்பட்டிருக்கும் 35 அடி உயரமுள்ள மூவண்ணத்தைப் பார்க்கவும் கூட தொலைவான இடங்களிலிருந்து எல்லாம் மக்கள் வருகின்றார்கள்.  அமிர்த நீர்நிலையின் இந்த இயக்கம், கர்நாடகத்திலும் கூட தீவிரமாக நடைபெற்று வருகின்றது.  இங்கே இருக்கும் பாகல்கோட் மாவட்டத்தின் பில்கேரூர் கிராமத்தின் மக்கள் மிகவும் அழகானதொரு நீர்நிலையினை உருவாக்கி இருக்கின்றார்கள்.   உள்ளபடியே இந்தப் பகுதியில், மலையிலிருந்து வெளியேறும் நீர் காரணமாக, மக்களுக்கு நிறைய சிரமங்கள் ஏற்பட்டன, விவசாயிகளுக்கும் அவர்களின் விளைச்சலுக்கும் கூட பாதிப்பு ஏற்பட்டது.  அமிர்த நீர்நிலை உருவாக்கப்பட்ட பிறகு கிராமத்தவர்கள், நீர் அனைத்தையும் வழிப்படுத்தி ஒரு புறமாகச் செலுத்தினார்கள்.  இதனால் இந்தப் பகுதியில் வெள்ளப்பெருக்கு பிரச்சினையும் இல்லாமல் போனது.  அமிர்த நீர்நிலை இயக்கமானது, நமது இன்றைய அநேகப் பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குகிறது, நமது வரவிருக்கும் தலைமுறையினருக்கும் இது மிகவும் அவசியமானதும் கூட.  இந்த இயக்கத்திற்குட்பட்டு, பல இடங்களிலே, பழைமையான நீர்நிலைகளும் கூட உயிர்ப்படைந்து வருகின்றன.  அமிர்த நீர்நிலைகளால் விலங்குகளின் தாகம் தணிக்கப்படுவதோடு, விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் பயனளிப்பதாக இருக்கிறது.  இந்த நீர்நிலைகள் காரணமாக அருகிலே இருக்கும் பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கிறது.  அதே போல இவற்றின் நாலாபுறங்களிலும் பசுமையும் அதிகரித்திருக்கிறது. இது மட்டுமல்ல, பல இடங்களில் அமிர்த நீர்நிலைகளில் மக்கள் மீன்வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றார்கள்.  உங்களிடத்திலே, அதுவும் குறிப்பாக என்னுடைய இளைய நண்பர்களிடத்திலே சிறப்பான வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அமிர்த நீர்நிலை இயக்கத்திலே பெரிய அளவிலே பங்கெடுங்கள், நீர் சேமிப்பு, நீர்ப் பாதுகாப்புக்கான இந்த முயற்சிகளிலே முழுவீச்சோடு உங்கள் பங்களிப்பை அளியுங்கள், அதை முன்னெடுத்துச் செல்லுங்கள் என்பது தான்.

           

            என் மனம்நிறை நாட்டுமக்களே, அஸாமிலே போங்காயி கிராமத்திலே ஒரு சுவாரசியமான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, இது ப்ராஜெக்ட் சம்பூர்ணம்.  இந்தத் திட்டத்தின் பொருள் என்னவென்றால் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிரான போராட்டம் மற்றும் இந்தப் போராட்டத்தின் வழிமுறையுமே மிகவும் தனித்தன்மை வாய்ந்தவை. இதன்படி, ஒரு ஆங்கன்வாடி மையத்தில் ஒரு ஆரோக்கியமான குழந்தையின் தாய், ஊட்டச்சத்துக் குறைவான குழந்தையின் தாய் ஒருவரை, ஒவ்வொரு வாரமும் சந்தித்து, ஊட்டச்சத்துக் குறைபாடு தொடர்பான அனைத்துத் தகவல்களைப் பற்றியும் விவாதிக்கிறார்கள்.  அதாவது ஒரு தாய், பிறிதொரு தாயின் நண்பராகி, அவருக்கு உதவுகிறார், கற்பிக்கிறார்.  இந்தத் திட்டத்தின் உதவியால், இந்தப் பகுதியில் ஓராண்டிலே, 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு தொலைந்து விட்டது. ஊட்டச்சத்துக் குறைபாட்டினைப் போக்க பாடல்கள்-இசை, பஜனைப்பாடல்கள் கூட பயனாகும் என்பதை நீங்கள் எப்போதாவது கற்பனை செய்து பார்த்ததுண்டா?  மத்திய பிரதேசத்தின் ததியா மாவட்டத்திலே என்னுடைய குழந்தை இயக்கம்.  இந்த என்னுடைய குழந்தை இயக்கத்திலே இது வெற்றிகரமாகப் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இதன்படி, மாவட்டத்திலே பஜனைப் பாடல்கள்-கீர்த்தனைகள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, இதிலே ஊட்டச்சத்து குரு என்று அழைக்கப்படும் ஆசிரியர்கள் அழைக்கப்பட்டார்கள்.  மட்கா நிகழ்ச்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு, இதிலே பெண்கள், ஆங்கன்வாடி மையத்திற்காக கை நிறைய தானியங்களைக் கொண்டு வருவார்கள், இந்த தானியத்தால் சனிக்கிழமைகளில் பால்போஜுக்கு, அதாவது குழந்தைகளுக்கான உணவுக்கு ஏற்பாடு செய்வார்கள்.  இதனால் ஆங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் அதிகரிப்பதோடு, ஊட்டச்சத்துக் குறைபாடும் குறைந்திருக்கிறது.  ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு ஏற்பட வேண்டி, ஒரு பிரத்யேகமான இயக்கம் ஜார்க்கண்டிலே செயல்படுத்தப்பட்டு வருகிறது.  ஜார்க்கண்டின் கிரிடீஹிலே பாம்பும் ஏணியும் என்ற வித்தியாசமான பரமபத விளையாட்டு உருவாக்கப்பட்டது.  இந்த விளையாட்டின் வாயிலாகப் பிள்ளைகள், நல்ல மற்றும் தீய பழக்கங்களைப் பற்றிக் கற்றுக் கொள்கிறார்கள். 

 

            நண்பர்களே, ஊட்டச்சத்துக் குறைபாட்டோடு தொடர்புடைய இத்தனை புதிய முயற்சிகள் குறித்து நான் ஏன் உங்களிடம் தெரிவிக்கிறேன் என்றால், நாமனைவருமே கூட வரவிருக்கும் மாதங்களில் இந்த இயக்கத்தோடு இணைய வேண்டும். செப்டம்பர் மாதமானது பண்டிகைகளோடு கூடவே ஊட்டச்சத்தோடு தொடர்புடைய இயக்கங்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. நாம் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தை ஊட்டச்சத்து மாதமாகக் கடைப்பிடிக்கிறோம்.   ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிராக தேசத்தின் பல படைப்பாற்றலுடன், பன்முகமான முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.  தொழில்நுட்பத்தின் சிறப்பான பயன்பாடு, மக்கள் பங்களிப்பு ஆகியன ஊட்டச்சத்து இயக்கத்தின் மகத்துவமான பகுதியாக ஆகியிருக்கிறது. தேசத்தின் இலட்சக்கணக்கான ஆங்கன்வாடிப் பணியாளர்களுக்கு மொபைல் கருவிகள் அளிப்பது தொடங்கி ஆங்கன்வாடி சேவைகள் சென்று சேர்வதை கண்காணிப்பதற்காக Poshan Tracker என்ற ஊட்டச்சத்து கண்காணிப்பாளர் செயலியும் உருவாக்கப்பட்டிருக்கிறது. முன்னேற விரும்பும் அனைத்து மாவட்டங்களிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் 14 முதல் 18 வயதுடைய பெண் குழந்தைகளும் ஊட்டச்சத்து இயக்கத்திலே இணைக்கப்பட்டிருக்கிறார்கள்.  ஊட்டச்சத்துக் குறைபாட்டுப் பிரச்சினையைக் களையெடுப்பது இந்த முயற்சிகளோடு நின்று போகவில்லை.  இந்தப் போராட்டத்திலே மற்ற பிற முயற்சிகளுக்கும் முக்கியமான பங்கிருக்கிறது.  எடுத்துக்காட்டாக, ஜல்ஜீவன் இயக்கத்தையே எடுத்துக் கொள்வோமே!  பாரதத்தை ஊட்டச்சத்துக் குறைபாட்டிலிருந்து விடுவிக்க இந்த இயக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவிருக்கிறது.  ஊட்டச்சத்துக் குறைபாட்டுச் சவால்களை எதிர்கொள்ள, சமூக விழிப்புணர்வோடு இணைந்த முயற்சிகள் மகத்துவமான பங்களிப்பை ஆற்றுகின்றன.  நீங்கள் அனைவரும் வரவிருக்கும் ஊட்டசத்து மாதங்களில், ஊட்டசத்துக் குறைபாட்டைக் களையும் முயற்சிகளில் கண்டிப்பாகப் பங்காற்றுங்கள் என்று நான் உங்களனைவரிடத்திலும் விண்ணப்பித்துக் கொள்கிறேன். 

 

            என் கனிவு நிறை நாட்டுமக்களே,  சென்னையிலிருந்து ஸ்ரீதேவி வரதராஜன் அவர்கள் எனக்கு ஒரு நினைவூட்டல் செய்தியை அனுப்பி இருக்கிறார்.  மைகவ் தளத்திலே தனது கருத்தை எப்படி எழுதியிருக்கிறார் பாருங்கள்!  “புத்தாண்டு பிறக்க இன்னும் 5 மாதங்களுக்கும் குறைவான காலமே எஞ்சி இருக்கிறது; வரவிருக்கும் புத்தாண்டு International Year of Millets, அதாவது சர்வதேச சிறுதானிய ஆண்டு என்ற வகையிலே நாம் கொண்டாட இருக்கிறோம்” என்று தெரிவித்து, தேசத்தின் சிறுதானிய வரைபடம் ஒன்றை எனக்கு அனுப்பி இருக்கிறார்.  இது கூடவே, நீங்கள் மனதின் குரலின் வரவிருக்கும் பகுதியில், இது பற்றிப் பேசுவீர்களா என்றும் வினா எழுப்பியிருக்கிறார்.  நாட்டுமக்களின் இத்தகைய ஆர்வங்களைப் பார்க்கும் போது எனக்கு மிகுந்த ஆனந்தம் ஏற்படுகிறது.  ஐக்கிய நாடுகள் சபையானது, 2023ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்து, ஒரு முன்மொழிவை நிறைவேற்றியது உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கலாம்.  பாரதத்தின் இந்த முன்மொழிவிற்கு 70ற்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவு கிடைத்தது. இன்று உலகெங்கிலும் இதே சிறுதானியங்களின் மீதான பேரார்வம் அதிகரித்து வருகிறது.  நண்பர்களே, நாம் சிறுதானியங்கள் பற்றிப் பேசும் போது, எனது ஒரு முயற்சியையும் கூட இன்று உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  கடந்த சில காலமாகவே நாட்டிற்கு எந்த ஒரு அயல்நாட்டு விருந்தினர் வந்தாலும், குடியரசுத்தலைவர் வந்தாலும், உணவிலே இந்தியாவின் சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட பதார்த்தங்களை அவர்களுக்கு உண்ண அளிக்க முயற்சிக்கிறேன்; இதிலே என்னுடைய அனுபவம் என்னவாக இருக்கிறது என்றால், இந்த முக்கியஸ்தர்களுக்கு இந்தப் பதார்த்தங்கள் மிகவும் பிடித்துப் போய் விடுகின்றன, நமது சிறுதானியங்கள் பற்றிய பல தகவல்களைத் திரட்டவும் அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.  சிறுதானியங்கள் என்பவை பண்டைய காலம் தொட்டே நமது விவசாயம், கலாச்சாரம், நாகரிகம் ஆகியவற்றின் அங்கமாக இருந்து வருகின்றன. நமது வேதங்களிலே சிறுதானியங்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.  இதைப் போலவே புறநானூறு மற்றும் தொல்காப்பியத்திலும் கூட, இவற்றைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது.  நீங்கள் தேசத்தின் எந்த ஒரு பாகத்திற்குச் சென்றாலும், அங்கே இருக்கும் மக்களின் உணவு முறைகளில், பல்வேறு வகையான சிறுதானிய வகைகள் இடம் பெற்றிருப்பதை உங்களால் காண முடியும்.  நமது கலாச்சாரத்தைப் போலவே, சிறுதானியங்களிலும் கூட பலவகைகள் காணக் கிடைக்கின்றன.  வரகு, சோளம், சாமை, ராகி, கம்பு, தினை, குதிரைவாலி போன்றவை சிறுதானியங்கள் இல்லையா!  பாரதம் உலகிலேயே சிறுதானியங்களின் பெரிய ஏற்றுமதியாளர்; ஆகையால் இந்த முயற்சியை வெற்றி பெறச் செய்ய பெரும் பொறுப்பு பாரத நாட்டவரான நம் அனைவரின் தோள்களிலும் இருக்கிறது.  நாம் அனைவரும் இணைந்து இதை ஒரு மக்கள் இயக்கமாக ஆக்க வேண்டும், நாட்டு மக்களிடம் சிறுதானியங்கள் தொடர்பான விழிப்புணர்வையும் அதிகரிக்க வேண்டும். மேலும் நண்பர்களே, சிறுதானியங்கள் என்பன விவசாயிகளுக்கும் அதிக இலாபகரமானது, அதுவும் சிறப்பாக சிறிய விவசாயிகளுக்கு என்பதை நீங்கள் அனைவரும் நன்கறிவீர்கள்.  உள்ளபடியே மிகக் குறைந்த நேரத்தில் அறுவடைக்கு இவை தயாராகி விடும், அதுவும் இதற்கு நீருக்கான தேவையும் அதிகம் இருக்காது. நமது சிறிய விவசாயிகளுக்கு, சிறுதானியங்கள் குறிப்பாக ஆதாயமளிப்பவை. சிறுதானியங்களின் காய்ந்த தழைகள் மிகச் சிறப்பான தீவனமாகவும் கருதப்படுகிறது. இன்றைய இளைய தலைமுறையினர் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் உணவுமுறை தொடர்பாக மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.  இந்தக் கோணத்தில் பார்த்தால், சிறுதானியங்களில் புரதச்சத்து, நார்ச்சத்து, கனிமச்சத்து ஆகியன நிறைவான அளவில் இருக்கின்றன. பலர் இதை சூப்பர் உணவு என்றும் கூறுகிறார்கள். சிறுதானியங்களில் ஒன்றல்ல, பல ஆதாயங்கள் இருக்கின்றன. உடல் பருமனைக் குறைப்பதாகட்டும், நீரிழிவாகட்டும், உயர் இரத்த அழுத்தமோ, இருதயம் தொடர்பான நோய்கள் அபாயமாகட்டும், இவற்றைக் குறைக்கிறது. இதோடு கூடவே, வயிறு மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்களிலிருந்து காப்பாற்ற உதவுகிறது.  சற்று முன்பு தான் நாம் ஊட்டச்சத்துக் குறைவு பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். ஊட்டச்சத்துக் குறைபாட்டோடு போராடவும் சிறுதானியங்கள் கணிசமான உதவி புரிகின்றன, ஏனென்றால், இவை புரதங்களோடு கூடவே உடலுக்கு சக்தியையும் அளிக்கின்றன. தேசத்திலே இன்று சிறுதானியங்களுக்கு ஊக்கம் அளிக்க, நிறைய விஷயங்கள் செய்யப்படுகின்றன. இவற்றோடு தொடர்புடைய ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் மீது கவனம் செலுத்தப்படுவதோடு, விவசாயிகள்-உற்பத்தியாளர் சங்கங்களுக்கு ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது; இதன் வாயிலாக விளைச்சலை அதிகரிக்க முடியும். என்னுடைய விவசாய சகோதர சகோரிகளிடம் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், சிறுதானியங்களை நீங்கள் அதிக அளவு பயிர் செய்ய வேண்டும், இதனால் ஆதாயம் பெற வேண்டும் என்பது தான். இன்று பல ஸ்டார்ட் அப்புகளும் கூட, சிறுதானியங்கள் துறையில் பணி புரிவதைக் காணும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.  இவற்றிலே சிலர் சிறுதானிய குக்கீஸ், சிறுதானிய பேன் கேக்குகள், சிறுதானிய தோசை கூடத் தயாரிக்கிறார்கள். அதே போல, சிறுதானிய சக்தி வில்லைகளும், சிறுதானிய காலை உணவும் தயார் செய்யப்பட்டு வருகின்றது.  இந்தத் துறையில் பணிபுரியும் அனைவருக்கும் நான் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பண்டிகைகளுக்கான இந்த வேளையில் நாம் நமது பல தின்பண்டங்களிலும் சிறுதானிய வகைகளைப் பயன்படுத்துகிறோம். உங்கள் வீடுகளில் தயாரிக்கப்படும் தின்பண்டங்களின் படங்களை சமூக ஊடகங்களில் நீங்கள் கண்டிப்பாகப் பகிருங்கள்; மக்கள் மத்தியில் சிறுதானியங்கள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்க இது உதவியாக இருக்கும்.   

 

            என் அன்பு நிறை நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாக, நான் அருணாச்சல் பிரதேசத்தின் சியாங்க் மாவட்டத்தின் ஜோர்சிங்க் கிராமம் பற்றிய ஒரு செய்தியைக் காண நேர்ந்தது.  இந்தச் செய்தி, ஒரு மாற்றம் பற்றியது, இதற்காக இந்த கிராமவாசிகள் பல ஆண்டுகளாகவே காத்திருந்தார்கள்.    உள்ளபடியே ஜோர்சிங்க் கிராமத்திலே இந்த மாதம், சுதந்திரத் திருநாளின் போது 4ஜி இணையச் சேவைகள் தொடங்கப்பட்டு விட்டன.   முன்னர் கிராமத்தில் மின்சாரம் கொண்டு சேர்க்கப்பட்டதற்காக மக்கள் மகிழ்ந்தார்கள், இப்போது, புதிய பாரதம், 4ஜி கொண்டு சேர்க்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறது. அருணாச்சல் மற்றும் வடகிழக்கின் தொலைவான பகுதிகளில் 4ஜி என்ற வகையில் நாம் புதிய விடியலைக் காண்கிறோம்.   இணைய இணைப்பு ஒரு புதிய உதயத்தைக் கொண்டு சேர்த்திருக்கிறது. எந்த வசதிகள், ஒரு காலத்தில் நகரங்களில் மட்டுமே இருந்தனவோ, அவை எல்லாம் டிஜிட்டல் இந்தியா மூலமாக கிராமந்தோறும் கொண்டு சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக தேசத்திலே டிஜிட்டல் தொழில்முனைவோர் உருவாகி வருகின்றார்கள். ராஜஸ்தானத்தின் அஜ்மேர் மாவட்டத்தில் சேடா சிங் ராவத் அவர்கள், இணையவழித் தையலகம் ஒன்றை நடத்தி வருகின்றார். இதில் என்ன செய்ய முடியும் என்று நீங்கள் யோசிக்கலாம்.  உள்ளபடியே, சேடா சிங் ராவத் கோவிட்டுக்கு முன்பாக தையல் வேலையைச் செய்து வந்தார்.  கோவிட் வந்தது, ராவத் அவர்கள் இந்தச் சவாலை ஒரு சிரமமாகக் கருதவில்லை, அதைச் சந்தர்ப்பமாக மாற்றினார்.  இவர் பொதுச் சேவை மைய இணையவழிக் கடையிலே சேர்ந்தார், இணையவழியில் பணிகளை ஆரம்பித்தார்.  முகக்கவசங்கள் ஏராளமான எண்ணிக்கையில் வேண்டும் என்று நுகர்வோர் விரும்பும் போது, இவர் சில பெண்களைப் பணிக்கமர்த்தி, முகக்கவசங்களைத் தயாரிக்கத் தொடங்கினார்.  இதன் பிறகு, இவர் தர்ஜீ ஆன்லைன் என்ற பெயரில் தன்னுடைய இணையவழித் தையலகத்தைத் திறந்தார், இதிலே மேலும் பலவகையான ஆடைகளையும் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினார்.  இன்று டிஜிட்டல் இந்தியாவின் சக்தியால் சேடா சிங் அவர்களின் பணி எந்த அளவுக்கு அதிகரித்து விட்டது என்றால், இப்போது இவருக்கு நாடெங்கிலும் இருந்து ஆர்டர்கள் வந்து குவிகின்றன.  நூற்றுக்கணக்கான பெண்களுக்கு இவர் வேலைவாய்ப்பினை அளித்து வருகின்றார்.  டிஜிட்டல் இந்தியா, உத்தர பிரதேசத்தின் உன்னாவிலே வசிக்கும் ஓம் பிரகாஷ் சிங் அவர்களையும் கூட டிஜிட்டல் தொழில்முனைவோராக மாற்றி விட்டது. இவர் தனது கிராமத்தில் ஓராயிரத்துக்கும் மேற்பட்ட Broadband connection, அகண்ட அலைவரிசை இணைப்புக்களை நிறுவியிருக்கிறார்.  ஒம் பிரகாஷ் அவர்கள் தன்னுடைய பொதுச் சேவை மையத்திற்கு அருகிலே இலவசமாக வைஃபை பகுதியையும் நிறுவி இருக்கிறார், இதனால், தேவையிருக்கும் நபர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது.  ஓம் பிரகாஷ் அவர்களின் பணி, இப்போது எந்த அளவுக்குப் பெருகி விட்டது என்றால், இவர் 20க்கும் மேற்பட்ட நபர்களைப் பணிக்கமர்த்தி இருக்கிறார்.  கிராமப் பள்ளிகள், மருத்துவமனைகள், மாவட்ட அலுவலகங்கள், ஆங்கன்வாடி மையங்கள் வரை அகண்ட அலைவரிசை இணைப்புக்களை இவர்கள் கொண்டு சேர்த்து வருகிறார்கள், இதனால் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்படுகிறது.  பொதுச் சேவை மையத்தைப் போலவே அரசு இணையவழிச் சந்தை அதாவது ஜெம் தளத்திலும் கூட, இப்படிப்பட்ட எத்தனையோ வெற்றிக் கதைகளை நம்மால் காண முடியும். 

 

            நண்பர்களே, கிராமங்களிலிருந்து எனக்கு நிறைய செய்திகள் கிடைக்கின்றன, இணையம் காரணமாக ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை எனக்கு இவை தெரிவிக்கின்றன.  இணையத்தால் நமது இளைய நண்பர்களின் படிப்பு, கற்றல் முறைகளிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.  எடுத்துக்காட்டக, உபியில் உன்னாவின் அமோயியா கிராமத்தில் வசிக்கும் குடியா சிங் தனது புகுந்த வீடு சென்ற போது, அவருக்குத் தன்னுடைய படிப்பு பற்றிய கவலை இருந்தது.  ஆனால், பாரத்நெட் அவருடைய இந்தக் கவலையைப் போக்கியது.  குடியா, தனது படிப்பை இணையம் வாயிலாகத் தொடர்ந்தார், பட்டப்படிப்பு வரை முழுமை செய்தார்.  கிராமந்தோறும் இப்படி பலரது வாழ்க்கை, டிஜிட்டல் இந்தியா இயக்கத்தினால் புதிய சக்தியை அடைந்து வருகிறது.  நீங்களும், கிராமங்களில் இருக்கும் டிஜிட்டல் தொழில்முனைவோர் பற்றி எனக்கு அதிக அளவில் எழுதுங்கள், அவர்களின் வெற்றிக் கதைகளை சமூக ஊடகங்களில் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

            எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, சில காலம் முன்பாக, ஹிமாச்சல் பிரதேசத்தில், மனதின் குரலின் நேயர் ஒருவரான ரமேஷ் அவர்கள் எழுதிய ஒரு கடிதம் எனக்குக் கிடைத்தது.  ரமேஷ் அவர்கள் தனது கடிதத்தில், மலைகளின் பல அழகுகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.  மலைகளில் வீடுகள் தொலைதூர இடைவெளிகளில் இருந்தாலும், மக்களின் மனம் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக இருப்பதாக அவர் எழுதியிருந்தார்.  உண்மையிலேயே, மலைகளில் வசிப்போரின் வாழ்க்கையிலிருந்து நாம் பல கற்றல்களைப் பெற முடியும்.  மலைகளின் வாழ்க்கைமுறையிடமிருந்தும், கலாச்சாரத்திலிருந்தும் நாம் பெறும் முதல் படிப்பினை, சூழல்களின் அழுத்தத்தில் அழுந்திப் போகாமல், எளிதாக அவற்றை வெற்றி கொள்ள முடியும் என்பது தான்.  இரண்டாவதாக, எப்படி நாம் அந்தந்தப் பகுதியில் கிடைக்கும் ஆதாரங்களைக் கொண்டு தற்சார்பு நிலையை எட்ட முடியும் என்பது.  நான் கூறிய முதல் படிப்பினை பற்றிய அழகான வெளிப்பாட்டை, இப்போது ஸ்பீதீ பகுதியில் காண முடிகிறது.   ஸ்பீதி என்பது பழங்குடியினத்தவர் வசிக்கும் ஒரு பகுதி.  இங்கே இப்போதெல்லாம்  பட்டாணியைப் பிரித்தெடுக்கும் பணி புரியப்பட்டு வருகிறது.  மலைப்பகுதி வயல்களில் இது உழைப்பும் சிரமமும் நிறைந்த வேலையாகும். ஆனால் இங்கே, கிராமப்புறப் பெண்கள் ஒன்றிணைந்து, பரஸ்பரம் ஒருவர் மற்றவருடைய நிலங்களில் பட்டாணியைப் பிரிக்கிறார்கள்.   இந்தப் பணியோடு கூடவே பெண்கள் அந்தப் பகுதிப் பாடலான சப்ரா மாஜீ சப்ராவையும் பாடுகிறார்கள்.  அதாவது இங்கே பரஸ்பர உதவியோடு கூடவே நாட்டுப்புறப் பாரம்பரியமும் ஓர் அங்கமாகிறது.  ஸ்பீதியின் அந்தப் பகுதி ஆதாரங்களின் நற்பயன்பாட்டின் இதுவும் ஒரு மிகச் சிறப்பான எடுத்துக்காட்டாகும். ஸ்பீதியின் பசுபராமரிக்கும் விவசாயிகள், அவற்றின் பசுஞ்சாணத்தை உலர வைத்து, சாக்கு மூட்டைகளில் கட்டி வைக்கிறார்கள்.  பனிக்காலங்களில் இந்த மூட்டைகளை, பசுக்கள் கட்டி வைக்கப்பட்டிருக்கும் பகுதிகள், இவற்றை கூட் என்கிறார்கள், அங்கே பரப்பி விடுகிறார்கள்.  பனிபொழிவிற்கு இடையே, இந்த மூட்டைகள், பசுக்களுக்கு குளிரிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.  குளிர்காலம் கடந்த பிறகு, இதே பசுஞ்சாணம், வயல்களுக்கு உரமாகிறது. அதாவது பசுக்களின் கழிவுப்பொருளிலிருந்து அவற்றுக்கும் பாதுகாப்பு, வயல்களுக்கும் உரப்பொருள்.  விவசாயத்திற்கான குறைவான முதலீடு, வயல்களின் விளைச்சலும் அதிகம்.  ஆகையாலே தான் இந்தப் பகுதி இப்போதெல்லாம், இயற்கை விவசாயத்திற்கான கருத்தூக்கமாக ஆகி வருகிறது. 

 

            நண்பர்களே, இதைப் போன்றே பாராட்டத்தக்க முயற்சி, நமது மேலும் ஒரு மலைப்பகுதி மாநிலமான உத்தராக்கண்டிலே காணக் கிடைக்கிறது.  உத்தராக்கண்டிலே பல வகையான மூலிகைகளும், வேர்களும் கிடைக்கின்றன.  இவை நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனளிப்பவை.  இவற்றிலே ஒரு பழத்தின் பெயர் பேடூ.  இதை, himalayan fig, இமயமலைப்பகுதி அத்தி என்ற பெயராலும் அழைக்கிறார்கள்.  இந்தப் பழத்திலே தாது உப்புக்களும், விட்டமின்களும் செறிவாக இருக்கின்றன.  மக்கள் இதைப் பழமாகவும் உண்கிறார்கள், கூடவே பல நோய்களுக்கான சிகிச்சைக்காகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள்.  இந்தப் பழத்தின் சிறப்புக்களைப் பார்க்கும் போது, இப்போது பேடூவின் பழச்சாறு, இதனால் தயாரிக்கப்பட்ட பழ ஊறலான ஜாம், சட்டினி, ஊறுகாய், இதை உலர்த்தித் தயார் செய்யப்படும் உலர் பழங்கள் ஆகியவற்றைச் சந்தைப்படுத்தி இருக்கிறார்கள்.  பித்தௌராகட் நிர்வாகத்தினரின் முயற்சி மற்றும் அந்தப் பகுதி மக்களின் ஒத்துழைப்பு காரணமாக பேடூவை சந்தைக்குப் பல வடிவங்களில் கொண்டு செல்லும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.  பேடூவை மலைப்புற அத்தி என்ற பெயரிட்டு ப்ராண்டிங்க் செய்து, இணையவழிச் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.  இதனால் விவசாயிகளின் வருவாயில் புதிய வழிவகை செய்யப்பட்டிருப்பதோடு கூடவே, பேடூவின் மருத்துவ குணங்களினால் நன்மையும் தொலைவான தூரங்கள் வரை கொண்டு சேர்க்கப்பட்டிருக்கிறது. 

 

            எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலின் இன்றைய தொடக்கத்தை நாம் சுதந்திரத்தின் அமுதப் பெருவிழா பற்றிய விஷயத்தோடு செய்திருந்தோம்.  சுதந்திரத் திருநாளின் மகத்தான தினத்தோடு கூடவே, வரவிருக்கும் காலத்தில் மேலும் பல முக்கியமான தினங்கள் வரவிருக்கின்றன.  இன்னும் சில நாட்கள் கழித்து பிள்ளையார் சதுர்த்தி ஆராதனையும் வரவிருக்கிறது.  பிள்ளையார் சதுர்த்தி என்பது கணபதி பப்பாவின் ஆசிகளுக்கான தினம்.  பிள்ளையார் சதுர்த்திக்கு முன்னதாக ஓணம் பண்டிகையும் தொடங்க இருக்கிறது.  விசேஷமாக, கேரளத்தில் ஓணம் என்பது அமைதி-வளம் ஆகிய உணர்வுகளோடு கொண்டாடப்படுகிறது.  ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி என்பது ஹர்தாலிகா தீஜும் கூட.  ஓடிஷாவிலே செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியன்று நுஆகாயி பண்டிகையும் கொண்டாடப்படும்.  நுஆகாயி என்றால், புதிய உணவு, அதாவது, இதுவும் கூட, மற்ற பிற பண்டிகைகளைப் போலவே, நமது விவசாயப் பாரம்பரியத்தோடு தொடர்புடைய பண்டிகை.  இதற்கிடையே, ஜைன சமூகத்தின் சம்வத்சரி மகத்துவம் வாய்ந்த திருநாளும் வருகிறது.  நமது இந்த அனைத்துத் திருநாட்களும், நமது கலாச்சார வளத்தையும், உயிர்ப்புத் தன்மையையும் அடையாளப்படுத்துகின்றன.  உங்களனைவருக்கும், இந்தப் பண்டிகைகளுக்கும், சிறப்பான நாட்களுக்காகவும் என்னுடைய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்தத் திருநாட்களோடு கூடவே, மேஜர் தியான்சந்த் அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதியான நாளைய தினத்தை தேசிய விளையாட்டு தினமாக நாம் கொண்டாடுவோம்.  நமது இளைய விளையாட்டு வீரர்கள், சர்வதேசக் களங்களில் நமது மூவண்ணத்தின் பெருமையைப் பரப்பி வருகின்றார்கள், இதுவே நமது தியான்சந்த் அவர்களுக்கு நாம் செலுத்தக்கூடிய சிரத்தாஞ்சலிகளாக இருக்க முடியும்.  தேசத்தின் பொருட்டு நாமனைவரும் இணைந்து புரியும் செயல்கள், தேசத்திற்குப் பெருமை சேர்த்து வரட்டும் என்ற இந்த நல்விருப்பத்தோடு நான் நிறைவு செய்கிறேன்.  அடுத்த மாதம், மீண்டும் ஒருமுறை உங்களோடு மனதின் குரல் அரங்கேறும்.  பலப்பல நன்றிகள். 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
5 Days, 31 World Leaders & 31 Bilaterals: Decoding PM Modi's Diplomatic Blitzkrieg

Media Coverage

5 Days, 31 World Leaders & 31 Bilaterals: Decoding PM Modi's Diplomatic Blitzkrieg
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister urges the Indian Diaspora to participate in Bharat Ko Janiye Quiz
November 23, 2024

The Prime Minister Shri Narendra Modi today urged the Indian Diaspora and friends from other countries to participate in Bharat Ko Janiye (Know India) Quiz. He remarked that the quiz deepens the connect between India and its diaspora worldwide and was also a wonderful way to rediscover our rich heritage and vibrant culture.

He posted a message on X:

“Strengthening the bond with our diaspora!

Urge Indian community abroad and friends from other countries  to take part in the #BharatKoJaniye Quiz!

bkjquiz.com

This quiz deepens the connect between India and its diaspora worldwide. It’s also a wonderful way to rediscover our rich heritage and vibrant culture.

The winners will get an opportunity to experience the wonders of #IncredibleIndia.”