அவரது உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு;

  1. இன்று விடுதலையின் அமிர்தப் பெருவிழா நாளில், நாடு தனது விடுதலைப் போராட்ட வீரர்கள் அனைவருக்கும், நாட்டைப் பாதுகாப்பதில் இரவு பகலாகப் பாடுபட்டு வரும் துணிச்சல் மிக்க வீரர்களுக்கும் தலைவணங்குகிறது. விடுதலைப் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றிய மகாத்மா காந்தியடிகள் விடுதலைக்காக அனைத்தையும் தியாகம் புரிந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அல்லது பகத் சிங், சந்திரசேகர் ஆசாத், பிஸ்மில், அசாபகுல்லா கான் போன்ற புரட்சியாளர்கள், ஜான்சிராணி லட்சுமி பாய், கிட்டூர் ராணி சென்னம்மா அல்லது கைடின்லு ராணி அல்லது மதன்கினிஹஸ்ரா, நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் நேரு, நாட்டை ஒன்றுபட்ட தேசமாக்கிய சர்தார் வல்லபாய் பட்டேல், இந்தியாவுக்கு எதிர்கால வழியைக் காட்டிய பாபா சாகிப் அம்பேத்கர் உள்ளிட்ட அனைவரையும் நாடு நினைவு கூருகிறது. இப் பெரும் ஆளுமைகளுக்கு நாடு நன்றிக்கடன்பட்டுள்ளது.
  1. நமது விடுதலையை நாம் இன்று கொண்டாடும்போது, அனைத்து இந்தியர்களின் இதயத்தை  இன்னும் துளைத்துக் கொண்டிருக்கும் பிரிவினை வேதனையை நம்மால் மறக்க முடியாது. கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சோகங்களில் இதுவும் ஒன்று. விடுதலை அடைந்தபின்னர் இந்த தலைவர்கள் மிகவிரைவாக மறக்கடிக்கப்பட்டனர். நேற்றுதான் இந்தியா ஒரு உணர்வுபூர்வமான முடிவை எடுத்தது. பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக, இனி, ஆகஸ்ட் 14-ம் தேதியை ‘’ பிரிவினை துயரங்கள் நினைவு நாள்’’ என நாம் கடைப்பிடிப்போம். மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்தப்பட்டவர்கள், கண்ணியமான இறுதிச்சடங்குகளைக்கூட பெறமுடியாதவர்களாக இருந்தனர். அவர்கள் அனைவரும் வாழ்கின்றனர். அவர்களது நினைவுகளை அழிக்க முடியாது. 75-வது சுதந்திர தினத்தையொட்டி, பிரிவினைதுன்பங்கள் நினைவுதினத்தை அனுசரிக்கும் முடிவு ஒவ்வொரு இந்தியரிடமிருந்தும் அளிக்கப்படும் உரிய மரியாதை ஆகும்.
  1. நவீன உள்கட்டமைப்புடன், உள்கட்டமைப்பு கட்டுமானத்தில் முழுமையான, ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டிய பெரும் அவசியம் உள்ளது. அடுத்து வரும் காலத்தில், பிரதம மந்திரி காட்டி சக்தி தேசிய பெருந்திட்டத்தை நாம் தொடங்கவுள்ளோம். இது கோடிக்கணக்கான நாட்டு மக்களின் கனவுகளை நனவாக்கும் மிகப்பெரிய திட்டமாகும். 100 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான இத்திட்டம், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும்.
  1. நமது விஞ்ஞானிகளின் பெருமுயற்சியால் நம்மால் இரண்டு மேக் இன் இந்தியா கோவிட் தடுப்பூசிகளை உருவாக்க முடிந்தது. இது பெருமைக்குரிய விஷயமாகும். இதன் மூலம் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை நாம் மேற்கொண்டோம்.
  1. பெருந்தொற்று உலகம் முழுவதையும் அச்சுறுத்திக்கொண்டிருந்த மிகவும் நெருக்கடியான சூழலில், தடுப்பூசிகளைப் பெறுவது மிகவும் சிரமமாக இருந்தது. இந்தியா அதைப் பெற முடியுமா, முடியாதா என்பது ஒருபக்கம் இருந்தாலும், அதை உரிய நேரத்தில் பெறுவதில் நிச்சயமற்ற நிலை இருந்தது.ஆனால், இன்று உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை நாம் நடத்தி வருவதை நாம் பெருமையுடன் கூறிக்கொள்ள முடிகிறது. 54 கோடிக்கும் அதிகமானோர் தடுப்பூசி டோஸ்களைப் பெற்றுள்ளனர். கோவின் ஆன்லைன் முறை, டிஜிட்டல் சான்றிதழ்கள் ஆகியவை இன்று உலகை ஈர்த்து வருகின்றன.
  1. நமது மருத்துவர்கள், செவிலியர்கள், துணைமருத்துவ பணியாளர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் தடுப்பூசிகளை உருவாக்குவதில் ஈடுபட்டு வந்தனர். கோடிக்கணக்கான நாட்டு மக்கள் கொரோனா பெருந்தொற்று காலத்தில் சேவைபுரிவதில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் போற்றுதலுக்குரியவர்கள் ஆவர்.
  1. இந்தியாவின் இளம் தலைமுறையினர் டோக்கியோ ஒலிம்பிக்கில் நமது நாட்டுக்கு பெருமை தேடித் தந்துள்ளனர். இத்தகைய அனைத்து வீரர்களும் இன்று நம்மிடையே உள்ளனர். அவர்கள் நமது இதயங்களை மட்டும் வெல்லவில்லை. நமது இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிப்பவர்களாகவும் திகழ்கின்றனர்.
  1. கொரோனா காலத்தில் 80 கோடி நாட்டுமக்களுக்கு தொடர்ந்து பல மாதங்களாக இலவச உணவு தானியங்கள் வழங்கி ஏழைகளின் வீடுகளில் அடுப்பெரிய இந்தியா உதவியிருப்பது, உலகத்தை அதிசயிக்க வைத்துள்ளதுடன், இது எப்படி சாத்தியம் என்ற விவாதத்தையும் ஏற்டுத்தியுள்ளது.
  1. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவானவர்களே இந்தியாவில் தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்பது உண்மை .உலகின் பிற நாடுகளின் மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால், இந்தியாவில் அதிக மக்களை நம்மால் காப்பாற்ற முடிந்துள்ளது என்பதும் உண்மையே. ஆனால், இது பெருமைக்குரிய விஷயமல்ல. இந்தப் பெருமையுடன் நாம் திருப்தி அடையமுடியாது. சவால் இல்லை என்ற நிலை நமது முன்னேற்றப் பாதையில் தடை ஏற்படுத்தும் சிந்தனையாக அமைந்து விடும்.
  2. உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதுடன், ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை’ என்னும் மந்திரத்துடன் முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதே நமது குறிக்கோளாகும்.
  3. இந்தியாவின் 75 வது ஆண்டு சுதந்திரத்தை வெறும் ஒரு நிகழ்ச்சியாக மட்டும் நாம் சுருக்கிவிடக்கூடாது. புதிய தீர்மானங்களுக்கான களப்பணியாற்றி நாம் புதியதீர்மானங்களுடன் முன்னேற வேண்டும். இங்கிருந்து, அடுத்த 25 ஆண்டுகளுக்குரிய முழுப்பயணத்தை முன்னெடுக்க வேண்டும். நாட்டின் நூறாவது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடும்போது, புதிய இந்தியாவை உருவாக்கும் அமிர்த காலமாக அது இருக்க வேண்டும். இந்தக் காலத்திற்கான நமது தீர்மானங்களை நனவாக்கும் வகையில் இந்திய சுதந்திரத்தின் நூறாவது சுதந்திர தினம் பெருமையுடன் அமையவேண்டும்.
  4. அமிர்த கால இலக்கு இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும்    முன்னேற்றத்தின் புதிய உச்சங்களைத் தரவுள்ளது. அமிர்த கால இலக்கு நகரங்களையும், கிராமங்களையும் பிரிக்காத வசதிகள் கொண்ட இந்தியாவை உருவாக்குவதாக இருக்கும். அமிர்த கால இலக்கு, மக்களின் வாழ்க்கையில் அரசு தேவையின்றி தலையிடாத இந்தியாவை உருவாக்குவதாக இருக்கும். அமிர்த கால இலக்கு உலகின் அனைத்து நவீன வசதிகளும் கொண்ட இந்தியாவை கட்டமைப்பதாக இருக்கும்.
  5. அமிர்தகாலம் என்பது 25 ஆண்டுகளாகும். ஆனால், நமது இலக்குகளை அடைய நம்மால் நீண்டகாலம் காத்திருக்க முடியாது. இப்போதே நாம் தொடங்க வேண்டும். சிறிது நேரத்தைக்கூட நாம் இழக்கக்கூடாது. இதுதான் சரியான நேரம். நமது நாடும் மாறவேண்டும். குடிமக்கள் என்ற வகையில் நாமும் மாறவேண்டும். மாறும் காலத்துக்கு ஏற்ப நாமும் அணுகுமுறைகளைக் கையாள வேண்டும். ‘ சப்கா சாத் சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்’ என்ற எழுச்சியை நாம் தொடங்கிவிட்டோம். இன்று செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து நான் வேண்டிக் கொள்வது, ‘ சப்கா சாத் சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்’ என்பதுடன் நமது இலக்குகளை அடைய சக்காபிரயாஸ் மிகவும் முக்கியமாகும்.
  1. இந்தப் பாரத வளர்ச்சி பயணத்தில், தற்சார்பு இந்தியா என்னும் நமது இலக்கை நாம் 100 ஆண்டு இந்திய சுதந்திரத்தைக் கொண்டாடும்போது அடைவதை உறுதி செய்ய வேண்டும்.
  1. 100% வீடுகளுக்கு நாம் மின்சார வசதி அளித்ததுபோல, 100% வீடுகளுக்கும் கழிப்பறைகள் கட்டுவதற்கு அதிகாரப்பூர்வமான முயற்சிகளை நாம் மேற்கொண்டோம். இதுபோல, திட்டங்களை நிறைவு செய்யும் இலக்கை நோக்கி நாம் முன்னேற வேண்டும்.இதற்கு, நீண்ட அவகாசத்தை நாம் நிர்ணயிக்க முடியாது. சில ஆண்டுகளிலேயே நமது இலக்குகள் நனவாக்கப்பட வேண்டும்.
  1. இப்போது நாம் இன்னும் கூடுதலாக நகரவேண்டும்.100% கிராமங்கள் சாலைகள் பெறவேண்டும். 100% வீடுகள் வங்கி கணக்குகளைப் பெறவேண்டும். 100% பயனாளிகளுக்கும் ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் இருக்க வேண்டும். 100% தகுதியான நபர்கள் அனைவரும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்பு பெற்றிருக்க வேண்டும்.100% பயனாளிகளுக்கும் வீடுகள் இருக்க வேண்டும்.
  2. நூறு சதவீத இலக்கு என்ற மனப்பான்மையுடன் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும்.  இதுவரை ரயில் பாதைகள், சாலைகள், தள்ளு வண்டிகள், நடைபாதைகளில் பொருட்களை விற்கும் தெருவோர வியாபாரிகளைப்பற்றி யாரும் சிந்தித்தது இல்லை. நமது இந்த தோழர்கள் அனைவரும் இப்போது ஸ்வநிதி திட்டத்தின் மூலம் வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
  3. குடிமக்கள் ஒவ்வொருவரும் அரசின் மாற்றம் ஏற்படுத்தும் திட்டங்களுடன் இணைக்கப்படுவதை உறுதி செய்யும் இலக்குடன் நாம் முன்னேற வேண்டும். கடந்த சில ஆண்டுகளில், நமது அரசு கிராமங்களுக்கு சாலைகளையும், மின்சாரத்தையும் வழங்கியிருக்கிறது. இப்போது, இந்த கிராமங்கள் கண்ணாடி இழை கட்டமைப்பு தரவு மற்றும் இணையதளத்துடன் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
  4. 2 ஆண்டுகளுக்குள் ஜல்ஜீவன் இயக்கத்தின் மூலம் 4.5 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் குழாய் மூலம் குடிதண்ணீர் பெற்றிருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். கடைசி பகுதி மக்களுக்கும் பயன் சென்றடைந்துள்ளது இந்த திட்டத்தின் முக்கிய சாதனையாகும்.
  5. போஷான் நமது அரசின் மிகமுக்கிய கவனத்துக்குரியதாகும். நோய்த்தடுப்பு முயற்சிகள், சுகாதாரம் மற்றும் நலவாழ்வு கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
  6. பிற்படுத்தப்பட்ட பிரிவினரை நாம் கைதூக்கி விடுவது அவசியமாகும். அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் கவலையுடன், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட பிரிவினர், ஆதிவாசிகள், பொது பிரிவில் ஏழை மக்கள் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டு வருகிறது. மிக அண்மையில், மருத்துவ கல்வியில், அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் வகுத்ததன் மூலம், ஓபிசி பட்டியலைத் தயாரிக்கும் உரிமை மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  7. ரேசன் கடைகளில் அரிசி கிடைப்பதாகட்டும், மதிய உணவு திட்டத்தில் அரிசி கிடைப்பதாகட்டும், 2024-ம் ஆண்டுக்குள் இந்த அரிசி செறிவூட்டப்படும்.
  8. ஜம்மு காஷ்மீரில் மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
  9. லடாக்கில் உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் அது புதிய மாற்றத்தைக் கண்டு வருகிறது. ஒருபுறம், லடாக் நவீன கட்டமைப்பைக்கண்டு வருவதுடன், மறுபுறம், 'சிந்து மத்திய பல்கலைக் கழகம்’ லடாக்கை உயர்கல்வி மையமாக மாற்றவிருக்கிறது.
  10. வடகிழக்கு பிராந்தியத்தில், சுற்றுலா, சாகச விளையாட்டுக்கள், இயற்கை விவசாயம், மூலிகை மருத்துவம், எண்ணெய் துரப்பணம் போன்ற துறைகளில் மிகப்பெரிய வளம் நிறைந்துள்ளது. இந்த வளத்தை நாம் முற்றிலும் பயன்படுத்திக் கொண்டு, இதனை நாட்டின் வளர்ச்சிப் பயணத்தின் ஒரு  பகுதியாக கொள்ள வேண்டும். இந்தப்பணியை சில பத்தாண்டு அமிர்தகாலத்துக்குள் நாம் முடிக்க வேண்டும். அனைவருக்கும் நியாயமான வாய்ப்புகள் வழங்குவதே ஜனநாயகத்தின் உண்மையான எழுச்சியாகும். ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சி தற்போது கண்கூடாக காணப்படுகிறது.
  11. கிழக்கு, வடகிழக்கு, ஜம்மு காஷ்மீர், லடாக், இமயமலையின் முழுமையான பகுதி, நமது கடலோரப் பகுதிகள், மலைப்பகுதி ஆகியவை இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிர்காலத்தில் பெரிய அடித்தளமாக இருக்கப் போகிறது.
  12. இன்று வடகிழக்கில் தகவல் தொடர்பு துறையில் புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது. இது இதயங்களுக்கும், உள்கட்டமைப்புக்கும் இடையிலான தொடர்பு ஆகும். வெகுவிரைவில், அனைத்து வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரங்களும் ரயில் சேவையால் இணைக்கப்படுவதற்காக நடைபெற்று வரும் பணிகள் முடிவடையவுள்ளன.
  13. கிழக்கு நோக்கிய கொள்கையின் கீழ், இன்று வடகிழக்கு, பங்களாதேஷ், மியான்மர், தென்கிழக்கு ஆசியா ஆகியவை இணைக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பலனாக, ஒப்பற்ற பாரதத்தை உருவாக்குவதற்கான உற்சாகம் இப்போது ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பகுதியில் நிலவும் நீண்டகால அமைதி பன்மடங்கு அதிகரித்துள்ளது.
  14. நமது கிராமங்களின் வளர்ச்சி பாதையில் புதிய கட்டத்தை நாம் கண்டு வருகிறோம். மின்சாரம், குடிநீர் ஆகியவை வழங்கப்படுவதுடன், டிஜிட்டல் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. நாட்டின் பின்தங்கிய 110-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து, சாலைகள், வேலைவாய்ப்பு தொடர்பான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் பல மாவட்டங்கள் பழங்குடியினர் பகுதிகளாகும்.
  15. நமது சிறு விவசாயிகளுக்கு உதவுவதில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். நேரடி பணப்பரிமாற்றம் அல்லது உழவர் ரயில் என அரசின் திட்டங்களில் அதிகபட்ச பயன்களை அவர்களுக்கு வழங்கவேண்டும்.
  16. உழவர் ரயில், என்னும் நவீன வசதி, சிறு விவசாயிகளுக்கு தங்களின் விளைபொருட்கள்  தொலைதூரப்பகுதிகளுக்கும் குறைந்த செலவில் சென்றடைவதற்கு  உதவுகின்றன. கமலம், சாஹி லிட்சி, மிளகாய், கருப்பு அரிசி மஞ்சள் போன்ற பல்வேறு உற்பத்தி பொருட்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
  17. அரசு இப்போது சிறு விவசாயிகளின் நலனில் கவனம் செலுத்தி வருகிறது. 10 கோடி விவசாய குடும்பங்கள் ரூ.1.5 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையை தங்கள் வங்கி கணக்குகளில் நேரடியாகப் பெற்றுள்ளன.
  18. ஸ்வமிதா திட்டம் கிராமப்புற இந்தியாவின் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளது. ட்ரோன் நமது கிராமப்புற மக்களுக்கு தங்களது நிலங்களின் வரைபடத்துக்கு உதவி வருகிறது. இதன்மூலம், பல்வேறு திட்டங்கள்/கடன்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
  19. கூட்டுறவு சங்கங்கள் வெறும் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுடன் கூடிய முறை மட்டும் அல்ல. அது எழுச்சி, கலாச்சாரம், கூட்டு வளர்ச்சியின் மனப்பாங்காகும். தனி அமைச்சகம் அமைப்பதன் மூலம், அவற்றை அதிகாரமயமாக்க நாம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மாநிலங்களில் கூட்டுறவு துறையை அதிகாரப்படுத்த நாம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்.
  20. வரும் ஆண்டுகளில், நாட்டின் சிறு விவசாயிகளின் கூட்டு ஆற்றலை அதிகரிக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு புதிய வசதிகள் கொடுக்கப்படும். ஸ்வமிதா திட்டத்தின் மூலம் அவர்களை அதிகாரப்படுத்த நாங்கள் முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
  21. சுதந்திரத்தின் இந்த அமிர்த பெருவிழாவை 75 வாரங்களுக்கு நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். மார்ச் 12-ம்தேதி தொடங்கிய இந்த கொண்டாட்டம் 2023 ஆகஸ்ட் 15 வரை தொடரும். புதிய உற்சாகத்துடன் நாம் முன்னேற வேண்டும்.  ஆகவே, நாடு மிக முக்கிய முடிவை எடுத்துள்ளது.
  22. இந்த 75 வார சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா கொண்டாட்டத்தின் போது, 75 வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இணைக்கும். நாட்டில் புதிய விமான நிலையங்கள் கட்டப்படுவது, தொலைதூரங்களையும் இணைக்கும் உடான் திட்டம் ஆகியவற்றின் வேகம் முன்னெப்போதும் கண்டிராதது ஆகும்.
  23. புதுமையான, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்வதில் நாம் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது.
  24. ஜன் அவுஷாதி திட்டத்தின் கீழ், ஏழைகளும், தேவைப்படுபவர்களும் குறைந்த விலையில் மருந்துகளை இப்போது பெற்று வருகின்றனர். 75,000-க்கும் மேற்பட்ட  சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வட்டாரத்திலும் மருத்துவமனை கட்டமைப்புகளின் உருவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
  25. நமது வளர்ச்சி முன்னேற்றத்தை மேலும் அதிகரிக்க , நமது உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
  1. கொரோனா  காரணமாக நாட்டில் எழுந்துள்ள புதிய பொருளாதார சூழலில்,  இந்தியாவில் தயாரிப்போம் இயக்கத்தை ஒருங்கிணைக்க, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த மாற்றத்திற்கு மிகச்சிறந்த உதாரணமாக மின்னணு உற்பத்தித் தொழில் திகழ்கிறது;   இத்திட்டம் மூலமே இது சாத்தியமாக்கப்பட்டது.   ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, சுமார் எட்டு பில்லியன் டாலர் மதிப்புள்ள செல்போன்களை நாம் இறக்குமதி செய்து கொண்டிருந்தோம்.   எனினும், தற்போது இறக்குமதி கணிசமாகக் குறைக்கப்பட்டு, மூன்று பில்லியன் டாலர் மதிப்புள்ள செல்போன்களை ஏற்றுமதி செய்து வருகிறோம்.  
  2. வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் வேளையில்,  உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டையும் இந்தியா அதிகரிக்க  வேண்டியது அவசியம்.  உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தனது முதலாவது விமானந்தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்-ஐ இந்தியா சில தினங்களுக்கு முன்பு சேவையில் ஈடுபடுத்தியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.   இந்தியா, தற்போது போர் விமானத்தையும் சொந்தமாக தயாரித்து வருகிறது, நீர்மூழ்கிக் கப்பலையும் சொந்தமாகக் கட்டி வருகிறது.   ககன்யான் விண்கலமும், விண்வெளியில் இந்தியக் கொடியை பறக்கவிட உள்ளது.   உள்நாட்டு உற்பத்தியில் நமது அபரிமிதமான திறமைக்கு இதுவே சாட்சியமாகும்.  
  3. நான் உற்பத்தியாளர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது – நீங்கள் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு பொருளும், இந்தியாவின் அடையாள முத்திரையாகத் திகழ வேண்டும்.   அந்தப் பொருள் பயன்பாட்டில் இருக்கும் வரை, அதை வாங்குவோர் – அது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.  
  4. சிக்கலான கொள்கைகள் வடிவில், அரசின் அளவுக்கு அதிகமான தலையீட்டை நாங்கள் நிறுத்த விரும்புகிறோம்.  இதுவரை, 15,000-க்கும் மேற்பட்ட தேவையற்ற சட்ட நடைமுறைகளை நாங்கள் ஒழித்துள்ளோம்.  
  5. வாழ்க்கையை எளிதாக்குவதற்கும், தொழில் தொடங்குவதை எளிதாக்குவதற்கும் உத்வேகம் அளிக்கக் கூடிய வரிச் சீர்திருத்தங்களை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம்.   சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த, சிறப்பான மற்றும் புத்திசாலித்தனமான ஆளுகை தேவை.   ஆளுகையின் புதிய அத்தியாயத்தை இந்தியா எவ்வாறு எழுதிக் கொண்டிருக்கிறது என்பதை, உலகம் தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறது.  
  6. ஆட்சி நிர்வாகத்தில் மக்கள் நலன் சார்ந்த அணுகுமுறையை அறிமுகப்படுத்த,  கர்மயோகி மற்றும் திறன் உருவாக்கத் திட்டம் என்ற இயக்கத்தை நாங்கள் தொடங்கியிருக்கிறோம்.  
  7. 21-ம் நூற்றாண்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏதுவாக, புதிய தேசிய கல்விக் கொள்கையை, நாடு தற்போது உருவாக்கியுள்ளது.   தற்போது, நமது குழந்தைகள், திறன் பற்றாக்குறை இல்லை என்பதாலோ அல்லது மொழிப் பிரச்சினை காரணமாகவோ, கல்வியை நிறுத்த வேண்டியதில்லை.  இந்த புதிய தேசிய கல்விக் கொள்கை, வறுமை ஒழிப்பிலும் சிறந்த சாதனமாகப் பயன்பட உள்ளது.   வறுமைக்கு எதிரான போரில் வெற்றிபெறுவதற்கு கல்வி, கவுரவம் மற்றும் உள்ளூர் மொழியின் முக்கியத்துவமும் அடிப்படைத் தேவையாகும். 
  8. பெண் குழந்தையைப் பாதுகாப்போம், பெண் குழந்தையைப் படிக்க வைப்போம் என்ற முன்முயற்சியை வலுப்படுத்தும் விதமாக, நமது புதல்விகள் தற்போது சைனிக் பள்ளிகளிலும் படிப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.  தற்போது, கல்வி அல்லது ஒலிம்பிக் என எதுவாக இருந்தாலும், நமது புதல்விகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.   அவர்களுக்கு சம வாய்ப்பு கிடைப்பதையும், தாங்கள் பாதுகாப்பாகவும், மரியாதையுடனும் இருக்கிறோம் என்று நினைப்பதை உறுதி செய்ய வேண்டும். 
  9. கிராமப்புறங்களில் வசிக்கும் எட்டு கோடிக்கும் மேற்பட்ட சகோதரிகள், சுய உதவிக் குழுக்களுடன் தொடர்புடையவர்களாக  இருப்பதோடு, தலைசிறந்த பொருட்களையும் தயாரித்து வருகின்றனர்.  அவர்களது உற்பத்திப் பொருட்களுக்கு, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மிகப்பெரிய சந்தை வாய்ப்பு உள்ளதை உறுதிசெய்ய, மின்னணு வர்த்தக அமைப்பு ஒன்றை அரசு தற்போது உருவாக்கி வருகிறது.   உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற தாரக மந்திரத்தை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் வேளையில், மகளிர் சுய உதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருட்களை, நாட்டின் தொலைதூரப் பகுதிகளிலும், வெளிநாட்டிலும் விற்பனை செய்வதை,  இந்த டிஜிட்டல் அமைப்பு இணைப்பதுடன், நீண்டகால பலன்களையும் ஏற்படுத்தும்.  
  10. எரிசக்தித் துறையில் இந்தியா சுயசார்புடையதாக இல்லை.  எரிசக்தி தேவைகளை இறக்குமதி செய்வதற்காக, இந்தியா ரூ.12 லட்சம் கோடிகளை செலவிட்டு வருகிறது.    75-வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடும் வேளையில்,  எரிசக்தி உற்பத்தியிலும் இந்தியா சுயசார்பு அடைவதை நாம் உறுதிசெய்ய வேண்டும்.  
  11. தேசப் பாதுகாப்புக்கு இணையாக, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் நாம் முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.   உயிரிப் பண்முகத் தன்மை அல்லது நிலச் சமன்பாடு,  பருவநிலை மாற்றம் அல்லது கழிவு மறுசுழற்சி, இயற்கை விவசாயம் என எந்தத் துறையாக இருந்தாலும், இந்தியா முன்னேறி வருகிறது.  
  12. 21-ம் நூற்றாண்டின் இந்த தசாப்தத்தில், நீலப் பொருளாதாரத்தை நோக்கிய தனது முயற்சிகளை இந்தியா மேலும் விரைவுப்படுத்தி வருகிறது.   ஆழ்கடலில் கிடைக்கக்கூடிய அபரிமிதமான வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும் என்ற நமது லட்சியத்தின் விளைவாகவே ஆழ்கடல் இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது.  கடலில் ஏராளமான தாதுவளம் புதைந்து கிடக்கிறது, கடல்நீரில் உள்ள வெப்ப ஆற்றல்,  நாட்டின் வளர்ச்சியை புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்லும.  
  13. பசுமை ஹைட்ரஜன் தான் உலகின் எதிர்காலம்.   எனவே, தேசிய ஹைட்ரஜன் இயக்கம்  அமைக்கப்படும் என தற்போது நான் அறிவிக்கிறேன்.  
  14. பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் ‘அம்ரித் கால்‘  ஏற்றுமதிக்கான சர்வதேச மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும்.   அப்படி செய்தால், இந்தியா எரிசக்தித் துறையில் தற்சார்பை அடைய உதவுவதோடு, உலகம் முழுவதும் தூய்மையான எரிசக்தி பயன்பாட்டிற்கு புது உத்வேகம் அளிக்கும்.   பசுமை வளர்ச்சி முதல் பசுமை வேலைவாய்ப்பு வரை, இளைஞர்கள் மற்றும் புதிய தொழில் தொடங்குவோருக்கு ஏராளமான புதிய வாய்ப்புகள் காத்துக் கிடக்கிறது. 
  15. மின்னணு வாகனப் போக்குவரத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதுடன், ரயில் போக்குவரத்தை 100% மின்மயமாக்கும் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   2030-ம் ஆண்டுக்குள், முற்றிலும் கார்பனை வெளிப்படுத்தாத நிலையை அடைய இந்திய ரயில்வே  இலக்கு நிர்ணயித்துள்ளது.  
  16. சுற்றுப் பொருளாதார இயக்கத்தையும் நாடு வலியுறுத்தி வருகிறது.  நமது வாகனக் கழிவுக் கொள்கையும் இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.  தற்போது, ஜி-20 நாடுகளில்,  பருவநிலை மாற்ற இலக்குகளை அடையும் நிலையில் உள்ள ஒரே நாடாக  இந்தியா திகழ்கிறது. 
  17. இந்த தசாப்தத்தின் இறுதிக்குள்ளாக,  அதுவும் 2030-க்குள்ளாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை 450 கிகாவாட் அளவிற்கு அதிகரிக்கவும் இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.  இதில், 100 கிகாவாட் இலக்கை, திட்டமிட்ட காலத்திற்குள் இந்தியா எட்டியுள்ளது.  
  18. பல தசாப்தங்களாகவும், நூற்றாண்டிற்கு மேலாகவும் நீடித்து வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் முயற்சியிலும் இந்தியா தற்போது ஈடுபட்டுள்ளது.   அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வது, ஜிஎஸ்டி அறிமுகம், வரிப்பின்னல் நடைமுறையிலிருந்து நாட்டை விடுவிப்பது,  ராணுவத்தைச் சேர்ந்த நண்பர்களுக்கான  ‘ஒரே பதவி-ஒரே ஓய்வூதியம்‘ குறித்து முடிவெடுத்தல்,   ராம் ஜென்மபூமி பிரச்சினைக்கு அமைதித் தீர்வு போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் சரியானது தான் என்பது இன்னும் சில ஆண்டுகளில் தெரியவரும்.  
  19. பல தசாப்தங்கள் கழித்து, திரிபுராவில்  ப்ரூ-ரியாங் உடன்பாடு, இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சாசன அந்தஸ்து அல்லது நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து முதல் முறையாக ஜம்மு-காஷ்மீரில் வட்டார வளர்ச்சிக் கவுன்சில் மற்றும் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தல்களை நடத்துவது என எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண்பதற்கு இந்தியாவின் மனஉறுதி தான் காரணம்.   
  20. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சர்வதேச உறவுகளின் தன்மை மாறிவிட்டது.   கொரோனாவுக்குப் பிறகு, புதிய உலக நியதிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.   தற்போது இந்த உலகம், இந்தியாவை புதிய கண்டோட்டத்தில் பார்க்கிறது.   இந்த கண்ணோட்டத்தில் இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன—ஒன்று, தீவிரவாதம் மற்றொன்று அதிகார விரிவாக்கம்.  இந்த இரு சவால்களையும் எதிர்த்து இந்தியா போரிட்டு வருவதோடு, கட்டுப்பாடான முறையில் வலிமையாக நடவடிக்கை எடுத்து வருகிறது.   இந்தியா தனது கடமைகளை முறையாக நிறைவேற்றினால், நமது பாதுகாப்பு ஆயத்த நிலையும் வலுவானதாக இருக்கும்.  
  21. நமது இளைஞர்கள்  ‘என்னால் முடியும்‘ என்ற தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்பதோடு,  தங்களது மனதில் நினைக்கும் எதையும் அடையும் ஆற்றல் பெற்றவர்கள்.   நமது தற்போதைய செயல்பாடுகள் தான் நமது எதிர்காலத்தை தீர்மானிக்கும்.  நமது இன்றைய தினம், இந்திய சுதந்திரத்தின் 100-வது ஆண்டுக்கான இலக்கை நிர்ணயிக்க வேண்டும். 
  22. நான் சோதிடம் கூறுபவர் அல்ல, செயல்பாட்டின் பலன் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.   எனது நாட்டின் இளைஞர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது, நம் நாட்டின் சகோதரிகள், புதல்விகள், விவசாயிகள்  அல்லது வல்லுநர்களை நான் நம்புகிறேன்.   இதுபோன்ற  ‘என்னால் முடியும்‘ என்று கூறும் தலைமுறையால், கற்பனை செய்து பார்க்க முடியாத அனைத்து இலக்குகளை அடைய முடியும்.  
  23. 21-ம் நூற்றாண்டில், இந்தியாவின் கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதை யாராலும் தடுக்க முடியாது.    நமது வலிமை தான் நமது உயிர்சக்தி, நமது வலிமை தான் நமது ஒற்றுமை, நமது உயிர்சக்தி தான் தேசம் முதலில் – எப்போதும் முதலில் என்ற உணர்வை ஏற்படுத்தும்.   கனவுகளை பகிர்ந்துகொள்ளுதல், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணுதல், முயற்சிகளை பகிர்ந்து கொள்வதற்கு இதுவே சரியான நேரம்…. அத்துடன் வெற்றியை நோக்கிச் செல்வதற்கும் இதுவே சரியான நேரம்.  
  24. இன்றைய தினம்,  நாட்டின் மாபெரும் சிந்தனையாளர் ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த நாள்.   அவரது 150-வது பிறந்த நாள் 2022-ல் கொண்டாடப்பட உள்ளது.  ஸ்ரீ அரவிந்தர், இந்தியாவின் வளமான எதிர்காலத்தைக் கணித்த தொலைநோக்குப் பார்வை கொண்டவர்.   இதற்கு முன் இல்லாத அளவிற்கு நாம் வலிமைபெறுவோம் என்று அடிக்கடி கூறிவந்தவர் அவர்.   நாம், நமது பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.  நமக்கு நாமே மீண்டும் விழித்தெழ வேண்டும். 
  25. சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றிக் கூறும் போதெல்லாம்,  தமது கண்கள் முன்பாக பாரதத் தாயின் அற்புதங்களைக் காண்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததுடன்,  இயன்றவரை கடந்த காலத்தைப் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும் கூறிவந்தார்.   புதிய ஊற்றிலிருந்து வெளிவரும் தண்ணீரையே எப்போதும் அருந்த வேண்டும், அதற்கு பிறகு, முன்னோக்கிப் பார்க்க வேண்டும்.   முன்னோக்கிச் சென்று, இந்தியாவை வளமானதாக, சிறந்ததாக மற்றும் இதுவரை இல்லாத வகையில் மாற்ற வேண்டும்.  இந்த 75-வது சுதந்திர தினத்தில், நாட்டின் அளவற்ற திறமை மீது நம்பிக்கை வைத்து முன்னோக்கிச் செல்வது நமது கடமை.   புதிய தலைமுறைக்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்க நாம் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்;  உலகத்தரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்யவும் ஒருங்கிணைந்து பணிபுரிவது அவசியம்; அதிநவீன கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவும் நாம் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்;  புதிய தலைமுறை தொழில்நுட்பங்களை உருவாக்கவும் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்.   

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Mutual fund industry on a high, asset surges Rs 17 trillion in 2024

Media Coverage

Mutual fund industry on a high, asset surges Rs 17 trillion in 2024
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 25, 2024
December 25, 2024

PM Modi’s Governance Reimagined Towards Viksit Bharat: From Digital to Healthcare