ரஷ்ய கூட்டமைப்பின் அதிபர் அவர்களே!
எனது அருமை நண்பர் அதிபர் புதின் அவர்களே!
மாண்பு மிகு உயர் அதிகாரிகளே!
கிழக்கு பொருளாதார அமைப்பில் பங்கேற்றுள்ளவர்களே!
வணக்கம்!
கிழக்கு பொருளாதார அமைப்பில் உரையாற்றுவதில் மகிழ்சியடைகிறேன் மற்றும் இந்த கௌரவத்தை அளித்த அதிபர் புதினுக்கு நன்றி.
நண்பர்களே!
இந்திய வரலாறு மற்றும் நாகரீகத்தில் ‘சங்கம்’ என்ற வார்த்தைக்கு சிறப்பு அர்த்தம் உள்ளது. இதற்கு ஆறுகள், மக்கள் அல்லது கருத்துக்கள் சங்கமிப்பது என அர்த்தம். எனது பார்வையில், விளாடிவோஸ்டாக் உண்மையிலேயே ஐரோப்பிய ஆசிய மற்றும் பசிபிக்கின் ‘சங்கம்’. ‘தொலைதூர கிழக்கு ரஷ்யா’ உருவாக்கத்தில் அதிபர் புதினின் தொலைநோக்கை பாராட்டுகிறேன். இந்த தொலைநோக்கை அடைய, ரஷ்யாவுக்கு நம்பிக்கைக்குரிய கூட்டு நாடாக இந்தியா இருக்கும். கடந்த 2019ம் ஆண்டு, இந்த அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க நான் விளாடிவோஸ்டாக் வந்தபோது, ‘தொலைதூர கிழக்கு கொள்கை செயல்பாட்டுக்கு’ இந்தியாவின் உறுதியை நான் அறிவித்தேன். ரஷ்யாவுடனான எங்களின் சிறப்பு மற்றும் சலுகை பெற்ற யுக்தி கூட்டுறவில் இந்த கொள்கை ஒரு முக்கியமான அங்கம்.
மேதகு அதிபர் புதின் அவர்களே!
கடந்த 2019ம் ஆண்டு எனது பயணத்தின் போது, விளாடிவோஸ்டாக் முதல் ஜ்வெஸ்டா வரையிலான படகு பயணத்தில் நமது விரிவான பேச்சை நான் நினைத்து பார்க்கிறேன். ஜ்வெஸ்டாவில் நவீன கப்பல் கட்டும் மையத்தை நீங்கள் எனக்கு காண்பித்தீர்கள், இந்த பெரிய நிறுவனத்தில், இந்தியா பங்கு பெறும் என நம்பிக்கை தெரிவித்தீர்கள். இந்தியாவின் மிகப் பெரிய கப்பல் கட்டும் நிறுவனமான மசகான் டாக்ஸ் நிறுவனம், மிக முக்கியமான வர்த்தக கப்பல்களை உருவாக்குவதற்கு ‘ஜ்வெஸ்டா’-வுடன் இணைந்துள்ளது இன்று எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
ககன்யான் திட்டம் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில், இந்தியா மற்றும் ரஷ்யாவும் கூட்டாக செயல்படுகிறது. சர்வதேச வர்த்தகத்துக்கு வடக்கு கடல் வழியை திறப்பதிலும், இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து செயல்படும்.
நண்பர்களே!
சோதனை காலத்தில், இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான நட்புறவு உறுதுணையாக உள்ளது. சமீபத்தில், கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசிகள் விஷயத்தில் நமது வலுவான ஒத்துழைப்பை பார்க்க முடிந்தது. சுகாதாரம் மற்றும் மருந்து துறைகளில் நமது இருதரப்பின் கூட்டுறவின் முக்கியத்துவத்தை இந்த பெருந்தொற்று சுட்டிக் காட்டியுள்ளது. நமது கூட்டுறவு யுக்தியில், எரிசக்தி துறை மற்றொரு முக்கிய தூணாக உள்ளது. இந்தியா-ரஷ்யா எரிசக்தி கூட்டுறவு, உலகளாவிய எரிசக்தி சந்தையில், நிலைத்தன்மையை ஏற்படுத்த உதவும். எங்கள் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, இந்த அமைப்பில் இந்தியா சார்பில் பங்கேற்க விளாடிவோஸ்டாக் நகரில் இருக்கிறார். அமுர் பகுதியில், யமால் முதல் விளாடிவோஸ்டாக் வரை மற்றும் சென்னை நோக்கியுள்ள முக்கிய எரிவாயு திட்டங்களில் இந்திய தொழிலாளர்கள் பங்கெடுத்துள்ளனர். இப்பகுதியில் ஒரு எரிசக்தி மற்றும் வர்த்தக இணைப்பை ஏற்படுத்த நாங்கள் எண்ணுகிறோம்.
சென்னை - விளாடிவோஸ்டாக் கடல்சார் வழித்தடம் முன்னேறி வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சர்வதேச வடக்கு-தெற்கு வழித்தடத்துடன் கூடிய இந்த இணைப்பு திட்டம், இந்தியா மற்றும் ரஷ்யாவை நெருக்கமாக்கும். பெருந்தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், பல துறைகளில் நமது வர்த்தக தொடர்புகளை வலுப்படுத்துவதில் நல்ல முன்னேற்றம் உள்ளது. இதில் இந்திய எஃகு நிறுவனங்களுக்கு, நீண்ட காலம் நிலக்கரி விநியோகிப்பதும் உள்ளடங்கியுள்ளது.
வேளாண் தொழில், செராமிக்ஸ், யுக்தி மற்றும் அரிய வகை தாதுக்கள் மற்றும் வைரங்கள் போன்ற துறைகளிலும் புதிய வாய்ப்புகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இந்த அமைப்பில் சகா-யகுஷியா மற்றும் குஜராத் வைர வியாபாரிகள் தனியாக பேச்சுவார்த்தை நடத்துவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த 2019ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட 1 பில்லியன் டாலர் அளவிலான கடன் வசதி திட்டங்கள், இரு நாடுகள் இடையே வர்த்தக வாய்ப்புகளை அதிகரிக்கும் என நான் நம்புகிறேன்.
தொலைதூர கிழக்கு ரஷ்ய பகுதிகள் மற்றும் இந்திய மாநிலங்களின் முக்கிய பங்குதாரர்களை ஒரு தளத்தில் ஒன்றாக கொண்டு வருவதும் பயனுள்ளதாக உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு, இந்தியாவின் முக்கிய மாநில முதல்வர்கள் மேற்கொண்ட பயனுள்ள ஆலோசனைகளை நாம் முன்னெடுத்து செல்ல வேண்டும். தொலைதூர கிழக்கு ரஷ்ய பிராந்தியங்களைச் சேர்ந்த 11 ஆளுநர்களும், கூடிய விரைவில் இந்தியா வர வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்.
நண்பர்களே!
2019ம் ஆண்டில் இந்த அமைப்பில் நான் கூறியது போல், உலகின் பல வளமான பகுதிகளின் முன்னேற்றத்தில், இந்திய திறமைசாலிகள் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளனர். தொலைதூர கிழக்கு ரஷ்யாவும் அதிக வளங்கள் உள்ள பகுதி. இந்தியாவிடம் திறமையான மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய பணியாளர்கள் உள்ளனர். அதனால், தொலைதூர கிழக்கு ரஷ்யாவின் வளர்ச்சிக்கு, இந்திய தொழிலாளர்கள் பங்களிப்பை அளிக்க முடியும் என்ற பிரம்மாண்டமான வாய்ப்பு உள்ளது.
பொருளாதார அமைப்பு கூட்டம் நடைபெறும், இந்த தொலைதூர கிழக்கு மத்திய பல்கலைக்கழகம், இந்தியாவின் அதிகளவிலான மாணவர்கள் பயிலும் இடமாக உள்ளது.
மேதகு அதிபர் புதின் அவர்களே!
இந்த அமைப்பில் பேச எனக்கு இந்த வாய்ப்பை அளித்ததற்கு நான் மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் சிறந்த நண்பராக நீங்கள் எப்போதும் உள்ளீர்கள் மற்றும் உங்கள் வழிகாட்டுதலின் கீழ் நமது யுக்தி கூட்டுறவு தொடர்ந்து வலுவாக வளர்கிறது. கிழக்கு பொருளாதார அமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வெற்றி பெற நான் வாழ்த்துகிறேன்.
ஸ்பாசிபா!
நன்றி!
மிக்க நன்றி!