புத்த பூர்ணிமாவை முன்னிட்டு வேசக் சர்வதேச கொண்டாட்டங்கள் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாக முக்கிய உரை நிகழ்த்தினார். மதிப்பிற்குரிய மகா சபை உறுப்பினர்கள், நேபாளம், இலங்கை நாடுகளின் பிரதமர்கள், மத்திய அமைச்சர்கள் திரு பிரகலாத் சிங் மற்றும் திரு கிரண் ரிஜிஜு, சர்வதேச புத்த கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், மதிப்பிற்குரிய மருத்துவர் தம்மபியா ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பகவான் புத்தரின் வாழ்க்கையைக் கொண்டாடும் தினமாகவும், நமது பூமியின் நன்மைக்கான அவரது உயரிய கொள்கைகள் மற்றும் தியாகங்களை பிரதிபலிக்கும் தினமாகவும் புத்த பூர்ணிமா அமைகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற புத்த பூர்ணிமா தின நிகழ்ச்சியை கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் முன்கள பணியாளர்களுக்குத் தாம் அர்ப்பணிப்பதாக அவர் தெரிவித்தார். ஒரு வருட காலத்திற்குப் பிறகும், கொவிட்- 19 பெருந்தொற்று நம்மை விட்டு நீங்காததுடன், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அதன் இரண்டாவது அலையை எதிர்கொண்டு வருகின்றன. வாழ்வில் ஒருமுறை நிகழும் இந்த பெருந்தொற்று, ஏராளமான மக்களுக்கு இன்னல்களை அளிப்பதுடன் ஒவ்வொரு நாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெருந்தொற்றினால் மிகப்பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கொவிட்-
19 தொற்றுக்குப் பிறகு நமது பூமி எப்போதும் போல் இருக்காது என்றும் அவர் கூறினார். எனினும் கடந்த ஆண்டைவிட தற்போது குறிப்பிடத்தக்க மேம்பாட்டு அம்சங்கள் இடம் பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பெருந்தொற்று பற்றிய சிறந்த புரிதலால் போராட்டத்தில் நமது உத்திகள் வலுப்பெறுகின்றன, பெருந்தொற்றை வெல்லவும் உயிர்களைப் பாதுகாக்கவும் மிக முக்கியமான தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு வருட காலத்திற்குள்ளாகவே கொவிட்-19 தடுப்பூசிகளை கண்டுபிடித்த விஞ்ஞானிகளின் முயற்சிகளைப் பாராட்டிய அவர், மனிதாபிமான உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சியின் ஆற்றலை இது எடுத்துக்காட்டுவதாகக் கூறினார்.
பகவான் புத்தரின் 4 முக்கிய போதனைகள், மனித சமூகத்தின் இன்னல்களைக் களைவதற்காக தமது வாழ்நாளை அர்ப்பணிக்க முக்கிய காரணியாக இருந்தன என்று பிரதமர் தெரிவித்தார். மனித இடர்பாடுகளைக் குறைப்பதற்காகக் கடந்த ஆண்டில் ஏராளமான தனிநபர்களும், நிறுவனங்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்ததாக அவர் குறிப்பிட்டார். புத்த அமைப்புகள் மற்றும் உலகெங்கும் புத்த தர்மத்தை கடைபிடிப்பவர்கள், உபகரணங்களையும் பொருட்களையும் நன்கொடையாக வழங்கினார்கள். பகவான் புத்தரின் கொள்கைகளான அனைவருக்கும் ஆசீர்வாதங்கள், கருணை மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றுக்கு இணங்க இந்த செயல்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கொவிட்-19 தொற்றுக்கு எதிராகப் போராடும் அதே வேளையில், பருவநிலை மாற்றம் போன்ற மனித சமூகத்தால் எதிர்கொள்ளப்படும் பிற சவால்களையும் மறக்கக்கூடாது என்று பிரதமர் கூறினார். தற்போதைய தலைமுறையினரின் பொறுப்பற்ற வாழ்க்கைமுறை, எதிர்கால சந்ததியினரை அச்சுறுத்துவதாகவும், நமது பூமியை பாதிப்பில் இருந்து மீட்க உறுதி பூண்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். பகவான் புத்தர் வலியுறுத்திய இயற்கை அன்னைக்கு முன்னுரிமையும் மரியாதையும் வழங்கும் வகையிலான வாழ்வை பிரதமர் நினைவு கூர்ந்தார். பாரிஸ் இலக்குகளை அடையும் பாதையை நோக்கி பயணிக்கும் ஒரு சில மிகப்பெரும் பொருளாதாரங்களுள் இந்தியாவும் ஒன்று என்று அவர் தெரிவித்தார். இந்தியாவைப் பொறுத்தவரையில் நிலையான வாழ்வு என்பது சரியான வார்த்தைகளைப் பற்றியது மட்டுமல்லாமல் சரியான செயல்களையும் குறிப்பதாகும் என்று அவர் கூறினார்.
கௌதம புத்தரின் வாழ்வு அமைதி, இணக்கம், ஒற்றுமை ஆகியவற்றால் நிறைந்தது என்று பிரதமர் குறிப்பிட்டார். எனினும் வன்மம், தீவிரவாதம் மற்றும் பொறுப்பற்ற வன்முறையைப் பரப்புவதை அடிப்படையாகக்கொண்டு சில சக்திகள் இன்றும் இயங்குகின்றன. இது போன்ற சக்திகள், தாராளமயமான ஜனநாயகக் கொள்கைகளில் நம்பிக்கை இல்லாதவை என்று கூறிய பிரதமர், எனவே பயங்கரவாதம் மற்றும் தீவிரமயமாக்கலை வீழ்த்துவதற்காக மனித நேயத்தில் நம்பிக்கை உள்ள அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தார். பகவான் புத்தரின் போதனைகளும் சமூக நீதிக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமும் சர்வதேச ஒருங்கிணைப்பு சக்தியாக உருவாகக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.
பகவான் புத்தர், ஒட்டுமொத்த உலகிற்கு புத்திசாலித்தனத்தின் களஞ்சியமாக விளங்கினார் என்று பிரதமர் குறிப்பிட்டார். அவரிடமிருந்து அவ்வப்போது ஒளியைப் பெற்று, இரக்கம், உலகளாவிய பொறுப்புணர்ச்சி மற்றும் நல்வாழ்வின் பாதையில் பயணிக்கலாம். “உண்மை மற்றும் அன்பின் வெற்றியில் நம்பிக்கைக் கொண்டு வெளிப்புற தோற்றத்தைப் புறம்தள்ள புத்தர் கற்றுக்கொடுத்தார்”, என்ற மகாத்மா காந்தியின் வரிகளை சுட்டிக்காட்டிய பிரதமர், பகவான் புத்தரின் கொள்கைகளுக்கேற்ப செயல்பட அனைவரும் தங்களது உறுதித்தன்மையை புதுப்பித்துக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
பிறருக்கு சேவை புரிவதற்காக தன்னலம் பார்க்காமல் தங்களது உயிரையும் பொருட்படுத்தாத தடுப்பூசி ஆய்வில் கலந்து கொண்டவர்கள், முன்கள சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்டோர் மற்றும் தங்களது அன்பிற்குரியவர்களை இழந்தவர்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்தார்.