நேபாளத்தின் பிரதமர் திரு ஷேர் பகதூர் தியூபா அவர்களின் அழைப்பின் பேரில் மே 16 அன்று நான் நேபாளத்தின் லும்பினிக்கு செல்கிறேன்.
புத்த ஜெயந்தியை முன்னிட்டு மாயாதேவி கோவிலில் பிரார்த்தனை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன். புத்தர் பிறந்த புனித தலத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக லட்சக்கணக்கான இந்தியர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதில் நான் பெருமைப்படுகிறேன்.
கடந்த மாதம் பிரதமர் தியூபாவின் இந்தியப் பயணத்தின் போது எங்களது ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களுக்குப் பிறகு, அவரை மீண்டும் சந்திப்பதையும் எதிர்பார்க்கிறேன். புனல் மின்சாரம், மேம்பாடு மற்றும் இணைப்பு உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான எங்கள் பகிரப்பட்ட புரிதலை நாங்கள் தொடர்ந்து உருவாக்குவோம்.
புனித மாயாதேவி கோயிலுக்குச் செல்வதைத் தவிர, லும்பினி மடாலயத்தில் உள்ள புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கான இந்திய சர்வதேச மையத்தின் பூமி பூஜை நிகழ்ச்சியில் நான் பங்கேற்கிறேன். நேபாள அரசால் நடத்தப்படும் புத்த ஜெயந்தி விழாவைக் குறிக்கும் கொண்டாட்டங்களிலும் நானும் கலந்துகொள்கிறேன்.
நேபாளத்துடனான நமது உறவு இணையற்றது. இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான நாகரீகரீதியிலான, மக்களிடையேயான தொடர்புகள் நமது நெருங்கிய உறவின் நீடித்த கட்டமைப்பாக அமைகின்றன. எனது பயணமானது, பல நூற்றாண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்டு, நமது நீண்ட கால வரலாற்றில் ஒன்றுக்கொன்று கலந்தாலோசித்து பதிவுசெய்யப்பட்ட இந்த காலத்தால் போற்றப்படும் தொடர்புகளைக் கொண்டாடுவதையும், மேலும் பலப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.