நேபாளத்தின் லும்பினிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மே 16, 2022 அன்று அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். நேபாள பிரதமர் மேன்மைதங்கிய ஷேர் பகதூர் தூபாவின் அழைப்பை ஏற்று புத்த பூர்ணிமா புனித நாளில் இந்தப் பயணம் அமைந்தது. பிரதமர் என்ற முறையில் திரு நரேந்திர மோடிக்கு இது நேபாளத்திற்கான ஐந்தாவது பயணமாகவும் லும்பினிக்கு முதலாவது பயணமாகவும் இருந்தது.
பிரதமர் நேபாளம் சென்ற போது, பிரதமர் கூபா, அவரது மனைவி டாக்டர் அர்சு ராணா தூபா, உள்துறை அமைச்சர் திரு பால் கிருஷ்ண காந்த், வெளியுறவு அமைச்சர் டாக்டர் நாராயண் கட்கா, அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் திருமதி ரேணுகா குமாரி யாதவ், எரிசக்தி, நீர் வளம் மற்றும் பாசனத் துறை அமைச்சர் திருமதி பம்ப்பா புசல், கலாச்சாரம், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு பிரேம் பகதூர் அலே, கல்வித்துறை அமைச்சர் திரு தேவேந்திர பாடெல், சட்டம், நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கோவிந்த பிரசாத் சர்மா, லும்பினி மாகாண முதலமைச்சர் திரு குல் பிரசாத் கேசி ஆகியோர் அன்புடன் வரவேற்றனர்.
இந்தப் பயணத்தின் போது இரு பிரதமர்களும் முதலில் மாயாதேவி ஆலயத்திற்குப் பயணம் மேற்கொண்டனர். இந்த ஆலயத்தில் பகவான் புத்தரின் பிறப்பிடம் அமைந்துள்ளது. இங்கு புத்த மரபுப்படி நடைபெற்ற பிரார்த்தனையில் பிரதமர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். விளக்குகள் ஏற்றிவைத்த பிரதமர்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க அசோகா ஸ்தூபிக்கு சென்றிருந்தனர். பகவான் புத்தரின் பிறப்பிடம் என்பதற்கான முதலாவது கல்வெட்டு ஆதாரத்தை லும்பினி கொண்டுள்ளது. 2014ல் நேபாளத்திற்குப் பிரதமர் மோடி பயணம் செய்தபோது அன்பளிப்பாகக் கொண்டுவந்த புனித போதி மரத்திற்கு அவர்கள் நீர் வார்த்தனர்.
புத்த மத கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கான இந்தியா சர்வதேச மையத்தை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் தூபாவுடன் பிரதமர் மோடியும் பங்கேற்றார். புதுதில்லியைத் தளமாகக் கொண்ட சர்வதேச புத்த சமய கூட்டமைப்புக்கு சொந்தமான இடத்தில் 2021 நவம்பரில் லும்பினி மேம்பாட்டு அறக்கட்டளையால் இந்த இடம் ஐபிசி ஒதுக்கப்பட்டது. அடிக்கல் நாட்டு விழாவிற்குப் பின் பிரதமர்கள் இருவரும் புத்த சமய மையத்தின் மாதிரி வடிவத்தைத் திறந்து வைத்தனர். பிரார்த்தனைக் கூடங்கள், தியான மையம்,நூலகம், கண்காட்சி அரங்கு, உணவகம் மற்றும் பல வசதிகளுடன் உலகத்தரம் வாய்ந்ததாக இந்த மையம் இருக்கும். உலகம் முழுவதிலும் இருந்து வருகின்ற புத்த சமய யாத்திரிகர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இது திறந்திருக்கும்.
இரு பிரதமர்களும் இருதரப்பு சந்திப்பை நடத்தினர். புதுதில்லியில் ஏப்ரல் 2 அன்று நடத்தப்பட்ட விவாதங்களை அவர்கள் தொடர்ந்தனர். கலாச்சாரம், பொருளாதாரம், வர்த்தகம், போக்குவரத்துத் தொடர்பு, எரிசக்தி மேம்பாட்டில் பங்கேற்பு உட்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த குறிப்பிடத்தக்க முன்முயற்சிகள் மற்றும் யோசனைகள் பற்றி அவர்கள் விவாதித்தனர். லும்பினிக்கும் குஷிநகருக்கும் இடையே நகர அளவிலான உறவுகளை ஏற்படுத்த இரு தரப்பினரும் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டனர். இந்த இரண்டு இடங்களும் புத்த சமயத்தின் புனிதமான இடங்களாகும்.இரு நாடுகளின் புத்தசமய பாரம்பரியங்களை பகிர்ந்து கொள்வதையும் இது பிரதிபலிக்கிறது.
கடந்த சில மாதங்களில் இருதரப்பு மின்துறை ஒத்துழைப்பில் திருப்தியான முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பது குறித்து இரு பிரதமர்களும் திருப்தி தெரிவித்தனர். இது மின் உற்பத்தித் திட்டங்கள், மின்சாரத்தைக் கொண்டுசெல்லும் அடிப்படை கட்டமைப்பு, மின்சார வர்த்தகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். நேபாளத்தில் உள்ள மேற்கு சேத்தி புனல் மின் திட்டத்தை மேம்படுத்த இந்திய நிறுவனங்களுக்கு பிரதமர் தூபா அழைப்பு விடுத்தார். நேபாளத்தின் புனல் மின் துறையின் வளர்ச்சிக்கு இந்தியாவின் ஆதரவைப் பிரதமர் மோடி உறுதி செய்தார். இதுதொடர்பாக புதிய திட்டங்களை இந்திய முதலீட்டாளர்கள் விரைந்து
கண்டறிவார்கள் என்றும் ஊக்கப்படுத்தினார்.
இருநாடுகளிடையே மக்களின் கல்வி மற்றும் கலாச்சார பரிவர்த்தனைகளை மேலும் விரிவு படுத்த இரு பிரதமர்களும் ஒப்புக்கொண்டனர். பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில் பிரதமர் தூபா விருந்தளித்தார்.
நேபாள அரசின் ஆதரவுடன் லும்பினி மேம்பாட்டு அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த 2566-வது புத்த ஜெயந்தி விழாவை குறிக்கும் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் இரு பிரதமர்களும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பெரும் திரளாகக் கூடியிருந்த புத்த சமய உலகத்தோடு தொடர்புடைய
துறவிகள், அலுவலர்கள், பிரமுகர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.
2022 ஏப்ரல் 1 முதல் 3 வரை தில்லி மட்டும் வாரணாசிக்கு பிரதமர் தூபா மேற்கொண்ட வெற்றிகரமான பயணத்தின் தொடர்ச்சியாக நேபாளத்தில் உள்ள லும்பினிக்குப் பிரதமர் மோடியின் பயணம்
அமைந்தது. இரு நாடுகளுக்கும் இடையே பல்முனை உறவுகளுக்கு புதிய உத்வேகத்தையும் முக்கியமான துறைகளில் குறிப்பாக கல்வி, கலாச்சாரம், எரிசக்தி, மக்களோடு மக்கள் பரிமாற்றங்கள் ஆகியவற்றில் முன்னேற்றத்தையும் இன்றைய பயணம் வழங்கியது. இந்தியா- நேபாளம் இடையே வளமான நாகரிக இணைப்பை ஆழப்படுத்தவும் இதனை மேலும் ஊக்கப்படுத்தி மேம்படுத்த மக்களின் பங்களிப்பையும் பிரதமர் மோடியின் லும்பினி பயணம் வலியுறுத்தியது.